Thursday, April 16, 2009

கரை சேர்வோம் கரை சேர்ப்போம்



ஆதியில் ஏதேனில் ஒருவர்
ஆனார் இருவர் ஆண்டவர் செய்தது ஆபரேஷன்
ஆதாமிலிருந்து ஏவாள்
ஆதிக் குடும்பம் ஆரம்பம்

அனுதினமும் ஆண்டவர்
இறங்கிவந்தார் ஈந்தாரின்பமதை
உணவு ஊண் உறைவிடம்
எல்லாம் ஏதேனிலுண்டு
ஐம்பொறிகளையும் ஒடுக்காததால்
ஓங்கிற்று பாவம்
அதனால் மனுக்குலம் ஐயோ பாவம்

சாபமதை நீக்க வந்த எம்பெருமான்
பாவமற வாழ்ந்து மாண்டுயிர்த்தார்
பாவிகளை இரட்சிக்கும் வழிதிறந்தார்
ஆதிக் குடும்பம் பெற்ற பேரின்பம்
இன்றும் நாம் பெற்றிடவே
இன்ன்னலற வாழ்ந்திடவே

வாழ்க்கையெலாம் வளமாகி
அவர் வார்த்தை நம் பலமாகி
அனுதினமும் ஜெயம் சூடி
அவரன்பில் நாம் மூழ்கி
கரை சேர்வோம் கரை சேர்ப்போம்

Wednesday, April 15, 2009

அவரை எங்கே தேடுகிறீர்கள்?



மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கிறான், திருப்தியடைவதில்லை என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒரு மனிதன் மரணமடையும்போதுதான் அவனுடைய தேடல் முற்றுப் பெறுகிறது என்கிற தத்துவமும் உண்டு. ஆன்மீக விசயங்களிலும் இக்கூற்று பொருந்தும். ஆன்மீக தேடல் எங்கே முற்றுப் பெறும்?





ஆன்மீக ரீதியான தேடல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று கடவுளை மறுப்பதற்காக தேடுதல்
மற்றொன்று கடவுளை தேடுதல்
ஆக மொத்தத்தில் எல்லாரிடமும் தேடல் என்பது குடிகொண்டிருக்கிறது. ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். முன்னமே முடிவுசெய்யப்பட்ட முடிவுகளுடன் நாம் தேடினால் உண்மை என்பது எட்டாக்கனியாகவும் கானல் நீராகவும் ஆகிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் தேடுகிற எல்லாருமே தங்களுடைய முடிவு சரி தான் என்கிற முடிவுடன் தான் தேடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே தேடலில் தாங்கள் எதிர்பார்த்த முடிவுதான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி வரவில்லையெனில் அவற்றை நிராகரித்துவிடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு மனிதனா அல்லது கடவுளா என்பதையும் மேற்கண்ட இருசாராரும் தேடிக்கொண்டிருக்கீறார்கள் அல்லது அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவரல்லாத ஆன்மீகவாதிகள் அவரும் ஒரு கடவுளாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இயேசு கடவுள் என்பதை நிரூபிக்க ஆதிகிறிஸ்தவர்கள் அவரின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பிரசங்கித்தனர். நீங்கள் அவரைக் கொலைசெய்தீர்கள். தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்பதே சீடர்களின் முழக்கமாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் உண்டுபண்ணின மாற்றம் அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் விளைவிக்கும் மாற்றங்கள் மகத்தானவைகளாக இருக்கீறது.


இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அறியாத சிலர் கல்லறையில் அவரின் பிணத்தைக் காண சென்றார்கள். அங்கே அவரைக் காணாமல் திகைத்தபோது உயிர்த்தெழுதல் செய்தி கேட்டு பரவசத்துடன் திரும்பினர்.

ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்................?

கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்? கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். என்று பவுல் 1கொரிந்தியர்15:17ல் கூறுகிறார். ஆம் கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் கிறிஸ்தவ விசுவாசம் வீணானதாக இருக்கும். கிறிஸ்தவம் என்ற ஒன்றே இருந்திருக்காது. கிறிஸ்த்வர்கள் பொய்யான ஒன்றை நம்புகிறவர்களாக இருந்திருப்பார்கள்(1கொரிந்தியர்15:15). ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அக்காலத்தியவர்கள் எவரும் மறுக்கவியலவில்லை. இயேசுகிறிஸ்துவின் பாவமற்ற தன்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் அக்காலத்திய யூதர்களால் மறுக்கமுடியவில்லை. சரி. 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்றை நாம் இப்போது எப்படி நம்புவது?

பழங்காலச் செய்திகளை நாம் நம்புவதற்கு நம்மிடை இருப்பது வரலாற்று ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளுமே. ஒரு பழங்கால செய்தி கட்டுக்கதையாக இல்லாதபட்சத்தில் அதற்கு சான்று பகரும் ஆவணங்கள் வரலாற்றில் நிச்சயம் இருக்கும். அவ்வாறு அவற்றிற்கு சான்று இல்லையேல் நாம் அதை நம்பத்தேவையில்லை. நம்ம நாட்டிலேதான் புராணக் கதைகளை கூட உண்மை என்று நம்புகிறவர்களாச்சுதே! ( ஓ அதனாலதான் உண்மையை நம்ப மாட்டேங்குறாங்களோ)


இயேசுகிறிஸ்துவின் கல்லறை அன்று எவ்வாறு சான்று பகர்ந்ததோ அதே போல இன்றளவும் அவரின் உயிர்த்தெழுதலை சான்று பகருகிறது. அவரின் கல்லறை கட்டுக்கதை என்று சொல்பவர்களால் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்களை மறுக்கவியலாது. ஜோசிபஸ் என்ற அக்காலத்திய(கிறிஸ்தவரல்லாதவர்) வரலாற்றாசிரியரின் எழுத்துக்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கின்றன. ஆதாரங்கள் தோண்டத்தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதை நாம் ஏன் நம்ப வேண்டியிருக்கிறது எனில் சிவப்புச் சிந்தனையுடன் வரலாற்று மண்ணை அகழ்வாராய்வு செய்தவர்கள் கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவத்தின் உண்மைகளைக் குறித்த கண்டுபிடிப்புகளினால் கிறிஸ்து அடியவர்களாக மாறியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே ஆவார். இவர் தனது ஆய்வு முடிமுடுவுகள் குறித்துக் கூறும்போது............

I began with a mind unfavorable to it...but more recently I found myself brought into contact with the Book of Acts as an authority for the topography, antiquities, and society of Asia Minor. It was gradually borne upon me that in various details the narrative showed marvelous truth. (William M. Ramsay - St. Paul the Traveler and the Roman Citizen, The Bearing of Recent Discovery on the Trustworthiness of the New Testament).



கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் அவரின் மரணத்தினால் பயந்து மறுபடியும் மீன்ன் பிடிக்கச் என்ற அவருடைய சீடர்கள் உலகத்தைக் கலக்குபவர்கள் என்கிற அடைமொழியை பெற்றிருக்க மாட்டார்கள். உயிர்த்தெழுதல் பொய் எனில் , அந்தப் பொய்க்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயங்காது பிரசங்கித்திருக்க மாட்டார்கள். . உயிர்த்தெழுதலின் செய்தியைப் பிரசங்கித்ததற்Kகக அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்க மாட்டார்கள். கிறிஸ்தவம் கிறிஸ்துவுடன் புதைந்திருக்கும்.

இன்றைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களைத்தான் தெரிந்து கொள்வார்கள். மற்றவர்களை கடாசிவிடுவார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

அன்றிலிருந்து இன்றளவும் வெறுமையாக காணப்படும் கல்லறை சொல்லும் செய்தியை நம்பி கிறிஸ்துவின் அடியவராகலாம். அல்லது வெறுமையுடன் திரும்பலாம். முடிவு நம் கையில்தான்.

கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் செய்தி என்ன?
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். (மத்தேயு.28:6,7)

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.(மாற்கு16:6)

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். (லூக்கா.24:5 - 9)

நாமும் நது எல்லா பயங்களும் நீங்கி, நம் தேடலில் நாம் கண்டு கொண்டதை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனெனில் ..............

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். (கொலோசேயர்.2:14:15)

மேலும் அவர் சீக்கிரம் வரப் போகிறார்.

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.

ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Saturday, April 11, 2009

தன் பிழைகளை உணருகிறவன் யார்?



அவர் மிகவும் பெரிய ஓவியர் என்ற புகழைப் பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மிகவும் பிரமாண்டமான அழகான ஓவியம் ஒன்றை வரைந்து ஊரின் மையப்பகுதியில் வைத்து அந்த ஓவியத்துக்கருகில் இந்த ஓவியத்தில் பிழை ஏதும் இருந்தால் பார்வையாளர்கள் அந்த இடத்தை வட்டமிடுங்கள் என்ற ஒரு சிறிய குறிப்பையும் வைத்தார். பின்பு அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அடுத்த நாள் யாராவது தனது ஓவியத்தை குறை கூறியிருக்கிறார்களா என்று பார்க்க ஆவலுடன் விரைந்தார். வந்து கண்டு மயங்காத குறையாய் அதிர்ந்து போனார். அப்படி நடந்தது என்ன?


வர் வந்து பார்த்த போது அந்த ஓவியத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லா இடத்திலும் வட்டமிடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பிழைகளைச் வட்டமிட்டு வட்டமிட்டு மொத்தத்தில் அந்தப் படத்தின் அழகே காணாமல் போய் விட்டது. மொத்தத்தில் வட்ட வட்டக் குறிகள் தான் கண்ணுக்கு தெரிந்தது. என்னச் செய்யலாம் என்று யோசித்த அந்த ஓவியர் பொறுமையாக அந்த வட்டக் குறிகள் எல்லாவற்றையும் அழித்த பின் இந்த ஓவியத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தவும் என்று எழுதிவைத்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் வழக்கம் போல அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவர் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் முந்தின நாள் பிழைகளைச் சுட்டிக் காட்டினவர்கள் எவரும் இன்று அந்த பிழைகளை திருத்த முன்வரவில்லை. இதுதான் பொதுவாக மனித குணாதிசயமாக இருக்கிறது.

ஒருவரின் குறையைக் கூற வேண்டுமாயின் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்பவர்கள் அதிகம். ஆனால் அதே குறையை திருத்த முயல்பவர் மிக மிக சொறபமே. இன்னும் சொல்லப் போனால் எவருமிலர். பொதுவாக மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய பொன்மொழி என்னவெனில்......

நீ ஒரு விரலால் மற்றவர்களைச் சுட்டிக் காட்டும் போது
உன் விரல்கள் மூன்று உன்னைச் சுட்டிக் காட்டுகிறது என்பதை மறந்துவிடாதே! (கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்கோ)

இன்று பொதுவாக நண்பர்கள் அல்லது யாரையாவது சந்தித்து கொஞ்ச நேரம் பேச ஆரம்பித்தால் தானாகவே பேச்சு எவருடைய குறையையாவது மையப்படுத்தி தொடர ஆரம்பித்துவிடுவது வழக்கமாகிவிட்டது. கிறிஸ்தவர்கள் நடுவில் இது ரொம்ப ரொம்ப அதிகம். அந்த சபை இந்த சபை என்று டினாமினேஷன் குழப்பங்களும் ஊழியர்களை மட்டம் தட்டி அவர்களைப் பேசுவதும் அல்லது சபை பழக்க வழக்க மாறுபாடுகளை பேசுவதும் தவிர்க்கமுடியா டாபிக்குகளாக கிறிஸ்தவர்களிடம் உள்ளது. இதற்கு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நானும் கூட நாம் மற்றவர்களின் தவறுகளைத்தானே சுட்டிக் காட்டுகிறோம் இதில் என்ன தவறு என்று நினைத்திருக்கிறேன். அப்படிப் பட்ட தருணங்களில் எல்லாம் எனது நினைவுக்கு வரும் திருவசனம் உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை( அதாவது உனது மலையளவு தவறை) உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன? (மத்தேயு.7:3-5).

அந்த ஊருக்கு ஒரு பெரிய மகான் ஒருவர் வந்திருந்தார். தனது சேட்டைக் கார மகனை அவரிடம் கூட்டிச் சென்று அறிவுரை கேட்க வைக்கலாம் என்று நினைத்த அந்த தாயார் தனது மகனை அவரிடம் கூட்டிச் சென்றார். அந்த மகான் முன்பாக பெரிய கூட்டம் நின்றது. தனது முறை வந்த போது அவள் அந்த மகானிடம்
"ஐயா எனது மகன் ரொம்ப சேட்டை பண்ணுகிறான். எப்போது பார்த்தாலும் இனிப்பு சாப்பிடுகிறான். நீங்கதான் பெரிய மனசு பண்ணி இவனுக்கு அறிவுறை கூறி திருந்தவும் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தவும் வழி சொல்லனும்" என்று கூறினாள்.

பொறுமையாக அதைக் கேட்ட அந்த மகான் கண்களை மூடி கொஞ்சம் யோசித்தார். பின்பு அந்த தாயாரிடம் " அம்மா நாளைக்கு உன் மகனை என்னிடம் கூட்டிக் கொண்டு வா. நான் அவனுக்கு அறிவுரை கூறுகிறேன், அவன் திருந்திவிடுவான் என்று கூறி அனுப்பினார். குழப்பத்துடன் வீடு திரும்பிய அந்த தாயார் வழி நெடுகிலும் ஏன் அந்த மகான் என்னை நாளை வரச் சொன்னார். நான் கேட்டது ரொம்ப எளிமையான காரியம் தானே என்ற அங்கலாய்ப்புடன் சென்றாள்.

அடுத்த நாள் அந்த மகான் முன்பு தனது மகனைக் கூட்டிக் கொண்டு நின்றாள். அப்போது அவளின் மனை அருகில் அழைத்த அம்மகான்

"தம்பி நீ ரொம்ப நல்லப் பையனாக இருக்கணும். இனிப்புகளை எல்லாம் அதிகம் சாப்பிடாதே! அது உடலுக்கு தீமையானது" என்று கூறி பலவாறு அறிவுரை கூறினார்.
இதைக் கேட்ட அந்த தாய் அடக்க முடியாமல்" ஐயா நீங்கள் இதை நேற்றே கூறியிருக்கலாமே! ஏன் இன்று என்னை வரச் சொன்னீர்கள்? என்று கேட்டாள். அப்போது அம்மகான் சிரித்துக் கொண்டே" அம்மா நானும் நேற்று வரை அதிகம் இனிப்பு சாப்பிடுகிறவனாய் இருந்தேன். அப்படிப் பட்ட நிலையில் நான் இவனுக்கு எப்படி நீ இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடியும்? நான் முதலில் அதை நிறுத்த வேண்டுமே. ஆகையால் தான் நான் அப்பழக்கத்தை விட்ட பின் இன்று இவனுக்கு இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடிந்தது என்று சொன்னார். இப்படிப்பட்டவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நான் இப்போது சொல்லப் போகிற நபர் ஒரு பெரிய ஊழியர். அவருடைய பிரதான ஊழியம் கிறிஸ்தவ சபைகளில் காணப்படும் குறைகளை எழுதுவதுதான். அவருடைய எழுத்துக்கள் பலருக்கும் (எனக்கும்தான்) பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. ஆனால் அவருடைய வாழ்வில் அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் ஒரு பிழை நடந்து விட்டது. உடனே மக்கள் சும்மா இருப்பார்களா? என்ன ஐயா இது! உங்க வீட்டுலயே இப்படி ஆயிடுச்சே? என்று கேள்விக் குறி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் நேர்மையானதாக இல்லை. மற்றவர்களால்தான் அவ்வாறு நேர்ந்துவிட்டது. எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சால்ஜாப்பு வாங்கினார். நான் அவரை குறை கூறி இதை எழுதவில்லை. தாவீதின் சங்கீத வரிகளையே நினைவு கூறுகிறேன்.

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேன்பை விலக்கிக் காரும்.அவைகள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெஉம் பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்கீதம்.19:12- 14)

ஆகவே தான் ஆண்டவர் இயேசு மற்றவர்களி குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள் என்று கூறினார். ஏனெனில் நீங்கள் எந்த அளவினால் குற்றவாளிகள் என்று தீர்க்கிறீர்களோ அந்த அளவின்படியே இம்மையிலும் மறுமையிலும் நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் என்றார். நாம் இந்த தலைப்பில் பேச ஆரம்பித்தால் நிறைய பேசலாம். எனினும் சுருக்கம் கருதி ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை நியாயந்தீர்க்கும் படி இயேசு முன்பதாக யூதர்கள் அவளைக் கொண்டு வந்து நிறுத்தினர். யூதர்களுன் நியாயம் என்னவெனில் அப்படிப்பட்ட பெண்ணை கல் எறிந்து கொல்வதுதான். மன்னிப்பே கிடையாது. எல்லாருடைய கண்களும் இயேசுவின் வாய்மொழிக்காக காத்திருந்தன. இயேசுவோ ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறி தனது தலியை குனிந்து தரையில் எழுதலானார். அவர் கூறியது, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது இவள் மேல் கல்லெறியட்டும். எல்லாரும் ஒருவர் முகத்தை பார்த்தனர். எல்லாருடைய இருதயங்களும் குத்தப்பட்டது. ஆகவே அவர்கள் தலைகளைக் குனிந்து கொண்டு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கற்களை கீழே எறிந்து விட்டு வந்த வழியே திரும்பினர். கொஞ்ச நேரம் கழித்து இயேசு தலைதை தூக்கிப் பார்த்த போது அங்கே அந்தப் பெண்ணைத்தவிர ஒருவரும் காணப்படவில்லை. ஒரு பாவமும் செய்யாத இயேசு (யோவான்.8:46) அவளைப் பார்த்து நானும் உன்னை குற்றவாளி என்று தீர்க்கிறதில்லை. இனிமேல் பாவம் செய்யாதே போ என்று கூறி அவளை அனுப்பினார். (யோவான்.8:2௧1)

மேலே சொல்லப்பட்ட சம்பவம் கட்டுக் கதையல்ல. நாம் கடைபிடிக்கவேண்டிய உண்மைச் சம்பவம். இயேசுதாமே மனிதர்களாகிய நமக்கு நல்முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். நாம் மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்ட அரசியல் பண்ணிக் கொண்டிருக்க வில்லை. நாம் நமது வாழ்க்கையிலுள்ள பிழைகளை உணர்ந்து அதை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு சீர் பொருந்துவோமாகில் நாம் பாக்கியசாலிகளாயிருப்போம். நமக்குதவ இயேசுண்டு. நாம் இப்படி ஜெபம் செய்யலாமா?

தேவனே என்ன்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே நடத்தும். ஆமென்.

கிறிஸ்து வராதிருந்தால்..........?


கிறிஸ்து வராதிருந்தால் என்ற தலைப்பிட்ட ஒரு கிறிஸ்மஸ் கார்டை கண்ட போதகர் சிந்தனையில் மூழ்கினார். அப்படியே தூங்கியும் விட்டார் (ரொம்ப சிந்தித்தால் இது நடப்பது வாடிக்கைதானே!) அப்போது.............

ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டார். தெருக்களைக் கடந்து சென்றார். ஆலயத்தைக் காணமுடியவில்லை. வழி தவறிவிட்டோமோ என்று பதறிப் போய் அங்குமிங்கும் அலைந்தார். ஆலயமில்லை. ஆலயமில்லையே என்று எண்ணினார். துக்கம் தொண்டையை அடைத்தது.

வீட்டிற்கு திரும்பினார். நூலகத்திற்குள் நுழைந்தார். இரடசகராகிய இயேசுவைக் குறித்த 
புத்தகங்களைத்தேடினார். ஒரு புத்தகத்தையும் காணோம். மற்ற ஏதேதோ புத்தகங்கள் நிறைந்திருந்தது. ஏமாற்றமடைந்தார். ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றார்.

வாசல்கதவு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். ஐயா எங்க அம்மா சாகும் தருவாயில் இருக்காங்க, சீக்கிரம் வந்து பாருங்க என்று ஒரு சிறுமி அழுதுகொண்டே சொன்னாள். துரிதமாக சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு சென்றார். அந்தத்தாயைப் பார்த்தார். அம்மா உங்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியை ஆண்டவர் தருவார் என்று சொல்லி வேதாகனத்தைப் புரட்டினார். மல்கியா கடைசிப் புத்தகமாயிருந்தது. அதற்குப் பின் வேதப்புத்தகத்தில் ஒன்றுமில்லை. சுவிசேஷத்தைக் காணோம். நிருபங்களைக் காணோம். ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பை அருளிய அவருடைய சுவிசேஷங்களைக் காணோமே! வாயில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. பதறினார்.
மறு நாள் அந்த தாயார் மரித்துவிட்ட செய்தியறிந்து அடக்க ஆராதனை நடத்திவைக்க சென்றார். சவப்பெட்டியின் அருகில் நின்று அவர் செய்தி கொடுக்கும் வேளை வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிறிஸ்து இல்லாததால் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை வரவில்லை. ஆகவே பரலோகத்தின் நித்திய வாழ்வைக் குறித்து பேச முடிய வில்லை. மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரே நீர் பிறக்கவில்லையோ என்று தன்னையும் அறியாமல் கதறி அழுதார். கட்டுப் படுத்த முடியாமல் கலறையில் சாய்ந்து அழுதார். திடீரென விழித்து எழுந்தார். கண்டது கனவுதான் என்று உணர்ந்தார். ஆண்டவரே நீர் வராதிருந்தால் எனக்கு இரட்சிப்பு ஏது? உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஏது? நித்தியத்தில் உம்மோடிருப்போம் என்ற நம்பிக்கை ஏது? என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். O come let us adore Him....O come let us adore Him Christ the Lord. என்ற இனிமையான பாடலின் ஒலி ஆலயத்திலிருந்து இனிமையாக ஒலிக்க ஆரம்பித்து செவிக்கின்பமாக தொனிக்க ஆரம்பித்தது.

 நன்றி: பாலைவன நீரோடைகள்

பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

இன்றியமையாத ஏழு கேள்விகள்


ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னைப் பார்த்து ஏழு கேள்விகளை வினவ வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவை உயிர்நாடி போன்றவை. அவற்றை அசட்டை செய்தால் ஆபத்து விளையும். அவற்றை ஒவ்வொன்றாக கவனிப்போம். உண்மையுடன் அவற்றிற்கு விடையளிக்க ஆண்டவர் அருள் புரிவாராக!


1.துணிகரமான பாவத்தை செய்து கொண்டிருக்கிறேனா?
"என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்கு செவி கொடார்" (சங்கீதம்.66:18) என் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்க்கவும் மாட்டார். அறிந்த பாவத்திற்கு இடங்கொடுக்கும் மட்டும் என் ஜெபத்திற்கு பதில் பெற்றுக் கொள்ள மாட்டேன்.


"அறிந்த பாவம்" என்று நான் கூறினதை கவனிக்கவும். ஏனென்றால் உன் வாழ்க்கையில் "நம்மை எளிதில் அகப்படுத்தும் பாவம்" என்று வேதம் விளம்புகிறதை முன்னிட்டு நீ முடிவு செய்ய நேரிடும். யாதாமொரு பாவத்திற்கு நீ அடிக்கடி இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறாய். அது ஒரு சுமை போலும் விக்கிரகம் போலுமிருக்கும். ஆயினும் அது பாவமே. அதை விட்டு நீ விலகவேண்டுமென்று கர்த்தர் உரைக்கிறார். 

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசாயா.59:2). 

பாவம் பிரிவினை உண்டாக்குகிறது. தேவனின் முகத்தை மறைக்கிறது. பாவமிருக்கும் இடத்தில் ஐக்கியமும் கூட்டுறவும் நிலவ முடியாது. " கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக் கடவன்" (2தீமோத்தேயு.2:19)அது தேவனின் கட்டளையாகும். அவருக்கு பிரியமானவர்களாயிருக்கும்படிக்கு நாம் அறிந்து செய்யும் பாவங்களனைத்தையும் விட்டு விலக வேண்டும். அப்படியானால் அன்பரே தீமையென்று தெரிந்த எவற்றையும் விட்டு விலகுவோமாக. 

ஆம். ஆவியானவரை துக்கப்படுத்தும் யாவற்றையும் அகற்றிப்போடுவோமாக. நமது வாழ்க்கையினின்று அவற்றை புறம்பே தள்ளுவோம். பாவத்தை விட்டு விலகும்வரை கிறீஸ்தவ வாழ்கையில் நாம் முன்னேற முடியாது. ஒரு ஏந்திரக் கல்லுக்கு ஒப்பானது பாவம். அது நம்மை தாழ இழுத்துக் கொண்டிருக்கும். அதற்கு இடங்கொடுத்தால் மேலும் அதிகமதிகமாக அதை விரும்புவோம். நமது ஆசையை நிறைவேற்றுவதால் என்றும் அணையாத ஒரு தீயை சுவாலித்தெரிய செய்கிறோம். இப்படியாக பாவத்திற்கு இடமளித்த இருதயத்தின் வேதனையையும் அங்கலாய்ப்புமே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தோன்றக்கூடிய ஆறாத்துயரமாயிருக்கும்.

எனவே அன்பரே பாவத்தை அறவே ஒழித்துவிடுவோமாக. அது வெகுக்கடினமாயினும் பரவாயில்லை. மற்றபடி "எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை" நாம் கண்டடைய முடியாது. பாவத்தை விட்டு விலகாவிட்டால் அது நம்மை நாசமாக்கும்." துரோகிகள் வழியோ கரடுமுரடாம்" என் நண்பனே இயேசுகிறிஸ்துவை நினைவு கூர். அவர் எவ்வித விலங்கையும் தகர்த்து எந்த சங்கிலியையும் முறித்து விடுவோர். சிறையுற்றவனை விடுவிப்பார். அவர் உன்னை விடுதலையாக்குவார். ஆம். உன்னை அடிக்கடி மேற்கொள்ளும் பாவத்தினின்றும் விடுவிப்பார். இரட்சிக்க வல்லமை உள்ளவராக இருப்பதுடன் அவர் உன்னை வழுவாமல் காக்கவும் வல்லவர். உன்னில் வாசமாயிருக்கும் ஆவியானவரின் வல்லமையினால் அறிந்து செய்யும் சகல பாவங்களின் பேரிலும் நீ வெற்றி சிறப்பாய். ஆம், "ஜெயங்கொண்டவனாய் இருப்பது" எத்துணை பாக்கியமுள்ளது.


2.கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிகிறவனாய் நான் வாழ்கிறேனா?
"உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" (ரோமர்.6:18). சகலத்தையும் நான் ஒப்படைத்து விட்டேனா? அப்படிச் செய்வதாக நான் பாடுகிறேன். ஆண்டவரே உமது சித்தப்படியே செய்யும் என்று நான் அடிக்கடிக் கூறுவது உண்மையே. 

ஆயினும் மெய்யாக அதை நாடுகிறேனா? அவர் போகச் சொல்லும் இடத்திற்கு நான் செல்லுகிறேனா? அல்லது என் சொந்த வழியை விரும்புகிறேனா? கிறீஸ்துவுக்குப் பதிலாக சுயத்திற்கு முதல் இடம் கொடுக்கிறேனா? என் வாழ்க்கைக்கு அவரே ஆண்டவரும் எஜமானனுமாக விளங்குகிறாரா?கீழ்ப்படிகிற பிள்ளைகளே தேவனுக்கு வேண்டும். நாம் பிடிவாதமுள்ளவர்களாயிருந்தால் அவர் நம்மை பயன்படுத்த முடியாது. "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிகிறதே நலம்" போர்முனையில் நேரும் கலகம் அதன் இலட்சியத்தை சிதைக்கும். அவருக்கு உத்தம விசுவாசமுள்ளவர்களாக விளங்க வேண்டும். அறியாத தவறுதல், குற்றங்குறைகள் மன்னிக்கப்படும். ஆனால் துரோகத்தை அவர் ஒருக்காலும் சகிக்க மாட்டார். 

தேவன் நம்மை பயன்படுத்த வேண்டுமானால் நாம் கீழ்ப்படிய வேண்டும். தேவன் நம்மை எங்கே போக அழைக்கின்றாரோ அங்கு செல்ல நாம் ஆயத்தபாயிருக்கவேண்டும். நம்முடைய வழியில் அல்ல அவர் ஏவும் வழியில் செல்ல வேண்டும். நாம் அல்ல, அவரே சகலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரம். அவருக்கு நம்மை உண்மையாக ஒப்புக் கொடுக்கையில் அவருடைய திட்டங்கள் நம்முடையவையாகும். அவர் சித்தத்தை செய்வதில் நாம் மகிழ்ச்சியாக இருபோம்.நமக்குப் பிரியமானதைச் செய்ய வற்புறுத்தும் ஒரு கடினமான ஆளோட்டியாக அவரைப் பாவிக்கலாகாது. நமக்குப் பிரியமற்றதையே எப்போதும் செய்ய வற்புறுத்த மாட்டார். அவர் நமது பிதாவாயிருக்கிறார். 


அமர்ந்த தண்ணீர்களண்டையில் நம்மைக் கொண்டு போய்விட ஆவலாயிருக்கிறார். அவருக்குப் பிரியமான பல விருப்பங்களை நமது உள்ளத்தில் உருவாக்குகிறார். நம்மை ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதே அவருடைய ஒன்றான விருப்பம். ஏனென்றால் நமது ஆவி ஆத்மா, சரீரம் யாவும் அவருடையாது. எனவே கீழ்ப்படியாமல் அவருடன் ஐக்கியப்பட்டிருபது கூடாத காரியம். 


3. தினசரி தனி ஜெபத்தில் என் நேரத்தை செலவிடுகிறேனா?
ஜெபமின்றி ஒருவரும் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது. ஜெபிக்காமல் கிறீஸ்தவ வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது. ஜெபத்தை அசட்டை செய்தால் ஆவியில் பலவீனமுள்ளவர்களாயிருப்பீர்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் மாத்திரமே புதுப் பெலனடைவர். விண்ணப்பமாகிய சூழ்நிலையில் வாழத்தவறினால் சத்துருவினால் தாக்கப்பட ஏதுவாகும். ஆண்டவராகிய இயேசு இடைவிடாமல் மன்றாடினார். இராமுழுவதையும் ஜெபத்தில் கழித்தார். பவுல் ஜெபித்தார். ஆதி திருச் சபை ஜெபிக்கும் சபையாக விளங்கியது. தேவனால் அது பயன்படுத்தப்பட்டது. ஆடவரும் பெண்டிரும் ஜெபவீரராக விளங்கினர்.


ஆகவே ஜெபத்தில் காத்திருக்கிறேனா என்று என்னையே விசாரித்துக் கொள்வேனாக. தேவனுடன் உறவாட எனக்கு நேரமுண்டா? ஒவ்வொரு நாளும் அவரை சந்திக்கும்படி சமயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேனா? அதை தவறாமல் கடைபிடிக்கிறேணா? நான் ஜெபிக்கிற மனிதன் என்று தேவன் அறிவாரா? அப்படியானால் மீண்டும் என் உடன்படிக்கையை 
புதுப்பிக்க அவர் உதவிபுரிவாராக. அவர் வந்து என்னை தூங்குகிறவனாக கண்டு பிடியாதபடிக்கு காலைதோறும் அவரை சந்திக்க நான் ஆயத்தமாயிருப்பேனாக.


4.தேவனுடைய திருவசனத்தை கருத்துடன் ஆராய்கிறேனா?
தேவனுடைய வசனத்தை அசட்டை செய்தால் அவர் சத்தத்தைக் கேளாதபடிக்கு விலகிவிடுகிறேன். ஏனென்றால் தமது வசனத்தின் வாயிலாகவே அவர் நம்மோடு பேசுகிறார். ஆகவே வேதத்தை தியானியாதிருந்தால் அவரால் வழி நடத்தப்படாதிருக்கிறேண். திருவசனத்தை வாசியாதபடியினால் பலர் வழிவிலகிப் போயிருக்கின்றனர். அதற்குரிய 

இடத்தை மற்றொன்றும் பெற முடியாது. தேவன் மனிதருக்கு விளம்புகிற செய்தி வேதவசனமேயாகும். நான் அவரை உண்மையாக அறிந்திருந்தால் அதை படிக்க ஆவல் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக வாசிக்க முற்படுகிறேனோ அவ்வளவுக்கு அது எனக்கு இனிமையாயிருக்கும். அதை ஆராய்ந்தறியாமல் நான் வாழ முடியாது 
என்றறிவேன். அன்றாடக கடமைகளை நிறைவேற்ற அது எனக்கு ஜீவ ஆகாரமும், பானமுமாக விளங்கும். 

கிறீஸ்த்வ வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் மீண்டும் மீண்டும் அதை வாசிக்க முற்படுவேன். நான் இரட்சிக்க பட்டபோது தினந்தொறும் அதை வாசித்தேன். ஆனால் இன்னும் அதை ஆவலுடன் வாசிக்கிறேனா? முதலாவதாக வாசித்தபோது எனக்குப் புதிதாக தோன்றினபடிக்கு இன்றும் அதைக் காண்கிறேனா? அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் ஆன்மீக அனுபவங்களை நான் ஆனந்திக்கிறேனா? தாவீதின் சங்கீதங்களில் இன்றும் நான் ஆறுதலைக் கண்டடைகிறேனா? தேவனின் திருவசனம் ஒரு உயிர்ப்பிக்கும் வசனமாக விளங்குகிறதா? நாள்தோறும் என் ஆத்துமாவிற்கு ஆகாரமாக அதை உட்கொள்ளுகிறேனா?
ஒருக்கால் நான் ஆவியில் இன்று பலவீனமாக இருக்கிறேனா? தேவன் தமது வசனத்தைப் பாலுக்கும் உணவுக்கும் அவர் ஒப்பிடுகிறார். அப்படியானால் நான் திடனுற்றிருக்கும்படி அடிக்கடி அதை ஆராய வேண்டும். திருவசனத்தை கருத்துடன் ஆராயும் மாணவனாயிருக்க தேவன் அருள்புரிவாராக!


5.பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிடுகிறேனா?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில் ஆத்துமாக்களை பற்றின வாஞ்சையினால் அனல் கொண்டிருந்தேன். தேவனுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து வீதிகளில் சென்று என் சாட்சியை அறிவிக்க ஆர்வமுற்றிருந்தேன். வழி தப்பினவரை மீட்கும் சேவையிலும் ஆத்துமாக்களுக்கு இயேசுவை இரட்சகராக சுட்டிக்காட்டுவதிலும் ஆனந்தமாயிருந்தேன். குணப்படாதவரின் நிலைமைக்காக என் மனம் பாரமுற்றீருந்தது. கிறிஸ்துவின் பேரில் உள்ள ஆதிஅன்பினால் நிறைந்தவனாக எனக்கு அவர் அருளின நன்மைகளை அடுத்தவருக்கு அறிவிக்க ஆவல் கொண்டிருந்தேன். லேகியோனைப் போல என் குடும்பத்தாரிடமும் நண்பரிடமும் சாட்சி கொடுக்கச் சென்றேன்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஆதி அன்பை இழந்துவிட்டேனா? குளிர்ந்து போய் அதையடுத்து அசட்டையாயிருக்கிறேனா? தேவனால் தூண்டப்பட்ட அக்கினி அணைந்து போயிற்றா? கெட்டுப்போனவர்களைப் பற்றி சற்றும் மனப்பாரமின்றீ நான் ஆராதனைகளிலும் மார்க்கசடங்குகளிலும் கலந்து கொள்ளுகிறேனா? அப்படியானால் அதற்குக் காரணமென்ன? 

"கெட்டோனை இரட்சியும்" என்றூ பாடுகிறேன். ஆனால் அவர்களை மீட்க ஏதாவதொன்றை செய்ய முன்வருகிறேனா? "அழிந்துகொண்டிருப்போரை காப்பாற்றும் " என்று பாடுகிறேனே, அவர்களுக்காக நான் கவலைப்படுகிறேனா? "விழுந்துபோனவருக்காக கண்ணீர்விடும் " என்று பாடுகிறேனே - அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக --நான் கண்ணீர் உதிர்க்கிறேனா? கெட்டுப்போன மக்களின் இரட்சிப்பில் என் ஆத்துமா அக்கறை கொண்டுள்ளதா? அப்படியிராவிட்டால் என் நிலைமை இன்னும் மோசமானதாகும். உடனடியாக அதன் காரணத்தை கண்டுபிடித்து அகற்றுவேனாக. பகிரங்கமாக ஆண்டவரைப்பற்றி சாட்சி கூறவேண்டும். மக்களுக்கு கிறிஸ்துவைப் பிரஸ்தாபப்படுத்தவேண்டும். சாட்சிபகர அவர் 

கட்டளையிட்டிருக்கிறார். மீண்டும் அவரின் மகத்துவத்தை எடுத்துரைப்போமாக. சுவிசேச துண்டுப்பிரதிகளை பிறருக்கு நான் வினியோகிக்கலாம். ஆம். என் நண்பருக்கு அவர்கள் ஆத்தும இரட்சிப்பை குறித்து கடிதங்கள் எழுதலாம். தேவனுடைய பிரதிநிதியானால் நான் அவருக்கு உண்மையுள்ளவனாக விளங்கவேண்டும்.


6. தேவன் என்னை ஆசீர்வதித்ததிருப்பதற்கேற்ப என் ஈகை தாராளமாயிருக்கிறதா?
"கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" (லூக்க.6:38). 
நாம் கொடுப்பதற்குத்தக்கதாக தேவன் நமக்கு ஈந்தருளுகிறார். அவர் ஒருபோதும் மனிதனுக்கு கடன்படவரல்லர். தேவனின் ஈகைக்கு மேலாக நீ அளிக்கமுடியாது. தேவனுடைய பணிவிடைக்கென்று குறைந்தது உன் வருமானத்தில் பத்தில் ஒருபங்கை நீ கொடுக்க வேண்டும். அதற்கு மேலாக அவர் உன்னிடம் கேட்பதையும் தரவேண்டும். 

நீ அவருக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் அவரும் உனக்கு உண்மையுள்ளவராக இருப்பார். ஏராளமானவற்றை உடையவராக இருந்த காலத்தில் தேவனுக்கு கொடுப்பதில் உண்மையில்லாதவர்களாக இருந்த பலர் இன்று நெருக்கத்திலிருக்கின்றனர். திருப்பணிகென்று உண்மையாக காணிக்கை கொடுத்தவரில் ஒருவராவது குறைவுற்ற 
நிலைமையிலிருப்பதை நாம் காண முடியாது. "உதார குணமுள்ளவன் செழிப்பன். தண்ணீர் பாய்ச்சுபவன் தண்ணீர் பாய்ச்சப்படுவான்."

ஆனால் திட்டமாக ஆத்தும ஆதாயஞ்செய்யப்படும் ஊழியத்திகேயன்றி சமுதாய சேவைக்கும் வேதாகமத்தை சந்தேகிக்கின்ற மக்களுக்கும் உன் பணத்தை கொடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் நன் கொடை பயன்படுத்தப்படுகின்றதை முன்னிட்டு தேவனுக்கு நீ பொறுப்பாளியாக இருக்கிறாய்.மனமகிழ்ச்சியுடன் கொடு. ஏனென்றால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்." 

மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒழுங்குமுறையாக அளிக்கவேண்டும். தேவனுக்கென்று கவனமாக கணக்குவை. எவ்விதமாகவாவது அவருக்குக்கொடு. " அனுப்பப்படாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?" உலகத்தாருக்கு சுவிசேசம் அறிவிக்கப்படவேண்டுமானால் அதற்Kஆன செலவை யாராவது ஒருவர் ஏற்க வேண்டும். 

தண்ணீர் இலவசமானது. ஆனால் அதை குழாய்கள் வழியாக எடுத்துச் செல்ல பணம் செலவழிக்கவேண்டும். அவ்வாறே இலவசமான இரட்சண்யத்தை பிறருக்கு அறிவிக்க தூண்டுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். உலகத்தின் கடைசி முனைமட்டும் அது துரிதமாக பிரசங்கிக்க்கப்பட நாம் முயல்வோமாக. எனவே ஈகை என்பது பவுல் 
விளம்புகிறபடியே கிறிஸ்தவனுக்கு கிடைக்கும் ஒரு கிருபையாக விளங்குகிறது. நாம் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிறிஸ்தவராக இருப்போமேயானால், நாம் கொடையாளிகளாயும் , ஆம் தாராளமாக கொடுக்கிறவர்களாயும் விளங்குவோம்.

7.ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவது செய்கிறேனா?
தேவனால் பயன்படுத்தப்படும்படிக்கு சாட்சி கொடுக்கக்கூடிய ஓரிடத்தையும் மக்களையும் நான் கண்டுபிடிக்க வேண்டும். என் செய்கையை தவறென்று அடுத்தவர் கருதுகின்றனர் என்ற நினைவால் நான் பாதிக்கப்படலாகாது. 

ஆத்தும ஆதாயத்தில் ஆர்வமுற்றிருக்கும் ஒரு சபை எனக்கு உறைவிடமாயிருக்கவேண்டும். சேவையில் ஈடுபடவே நான் மீட்கப்ப்பட்டேன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஏதாவதொன்றை நான் செய்யாவிட்டால் அவர் எனக்களைத்த பரம தரிசனத்திற்கு நான் உண்மையற்றவனாக இருப்பேனல்லவா? பல வரங்கள் எனக்கில்லாதிருப்பினும் நான் ஏதோ ஒன்றில் ஈடுபடலாம். நோயாளிகளை கண்டு சந்திக்கலாம். சுவிஷேசப் பிரதிகளை வினியோகிக்கலாம். என் சாட்சியத்தை அறிவிக்கலாம். தனித்து ஆட்களை சந்திந்துப் பேசி அவர்களை கர்த்தருக்கென்று ஆதாயஞ்செய்யலாம். இப்படி ஏதாவது ஒரு காரியத்தை செய்ய முன் வரவேண்டும். யாராவது தங்களைக்கண்டு சன்ந்தித்து தூண்டிவிடும் மட்டும் சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு வந்து ஆராதனைகளில் கலந்து கொள்ளுகின்றனர். ஆனால் தாங்களும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்று கனவில் கூட நினைத்துப்பார்ப்பதில்லை. போதகருக்குத் தேவையானால் அவர் தேடி வந்து அவர்களை ஊழியத்திற்கு அழைப்பார் என்று கருதுகின்றனர். ஆனால் இரட்சிக்கப்பட்டது உண்மையானால் தாங்களே ஏதாவதொன்றை செய்ய முன்வருவர். "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?" என்று பவுல் முதலாவது விசாரித்தான். மறுபிறப்படைந்த ஒரு ஆத்துமாவின் பேராவலும் அதுவே. அன்பு சேவை 
செய்யும். ஆண்டாவராகிய இயேசுவை உத்தமமாக நேசிப்போர் அவரை சேவிக்க வாஞ்சிப்பர். சோம்பேறிகளாயிருக்க மாடார்கள். போதகரோ மற்றவரோ ஏவுமட்டும் காத்திராமல் அவர்கள் தேவனிடம் சென்று அவர் உத்தரவை பெற்றுக் கொள்வர். ஓய்வு நாள் பாடசாலையில் அவர்கள் ஆசிரியராயிருக்கக்கூடும். அப்படியானால் அந்தக்குழுவின் தலைவரை அணுகி 

விசாரிக்க வேண்டும். நல்ல குரல் வளம் உடையவராயிருப்பின் பாடகர் குழுவில் சேர்ந்து கொள்ளலாம். அல்லது வாத்தியக்கருவியில் பழக்கப்பட்டிருந்தால் அதௌ வாசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆராதனை முதலிய கூட்டங்களுக்கு மற்றவரை அழைத்து வந்து இடமளிக்கும் பணிவிடையிலும் இளைஞர் குழுவிலும் பிறருக்காக மன்றாடும் ஜெபக்கூட்டங்களிலும் சேவைபுரியலாம். தூர இடங்களுக்கு சென்று நற்செய்தி அறிவிக்க ஒருக்கால் ஆண்டவர் உன்னை அழைப்பார். அப்படியானால் அதற
குப் பயிற்சி பெற்று வாழ்க்கையை அதில் பயன்படுத்தலாம். இப்படியாக ஒருவன் ஜீவனைப்பெற்றது உண்மையாயின் தன் ஆண்வருக்கு ஏதோ ஒன்றில் தொண்டாற்றும் வரை அவன் மனம் அமர்ந்திராது.

மீண்டும் நான் கிறிஸ்துவை சேவிக்கிறேனா? அவருக்கு உழைக்கிறேனா? என் காலத்தை அவருக்காக செலவழிக்கிறேனா? 

அல்லது ஏதோ ஒரு அழைபு வரக்காத்திக்கொண்டிருக்கிறேனா? என்று வினவுவோம். முயற்சியுடையவர் முயற்சியில்லாதவர் என்று இருவகைத் தொண்டர் உளர். "ஆண்டவரே இதோ இருக்கிறேன்" என்று சுறுசுறுப்புள்ளவர்கள் கூறுவர்./ "என்னை அனுப்பும்" 
என்று முயற்சியுடையவர்கள் ஆர்வமுற்றீருப்பர். நான் எந்த வகுப்பை சேர்ந்தவன்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவதொன்றை செய்ய முற்படுகிறேனா? 

னம்மை உத்தமரென்று அவர் அங்கீகரிக்க வேண்டுமானால் மேற்கண்ட கேள்விகளைக் குறீத்து தீவிரமாய் ஆராய்வது 

அவசியம். "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாய் தேவனுக்கு முன் உன்னை உத்தமனாய் நிறுத்தும்படி 

கருத்துள்ளவனாய் இரு" என்று திருவசனம் விளம்புகிறது. அவர் கரத்தினின்று பூரணமான பிரதிபலனை 

பெற்றுக்கொள்ளவௌம் " நல்லது உண்மையும் உத்தம்ய்மான ஊழியக்காரனே" என்ற மேன்மையான வாழ்த்துரையைக் 

கேட்கவும் பாத்திரராயிருக்க நம்மையே ஆராய்ந்தறிந்து அவர் எதிர் நோக்கும் உன்னத நிலையை அடைவோமாக.  

Courtesy: Taken from The Man who God uses by Oswald smith