Saturday, April 8, 2017

நாம் மறந்த சிறந்த தேவ மனிதர்கள் - 2 தமிழ் டேவிட் (இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கதை)


தமிழ் நற்செய்தியாளர் டேவிட்
 மனமாற்றம் அடைந்து, சுத்திகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டது எப்படி?
நான் 1853ம் ஆண்டில்  தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். என் பெற்றோர் கிறிஸ்தவர்களாகவும், முழுநேர கிறிஸ்தவ ஊழியர்களாகவும் இருந்தனர்.  நான் இரண்டு வயது குழந்தையாக இருந்த போது என் தகப்பனார் மரித்துப் போனார். என் அருமைத் தாயார் மிகுந்த சிரமங்களுடன், கவனமாக எங்களை வளர்த்தார். நான் சி.எம்.எஸ் உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டேன், ஆனால் ஒன்பது வயதில் அதை விட்டு வெளியே வந்து விட்டேன்.  பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மறுபடியும் படிப்பைத் தொடரும்படி சேர்க்கப்பட்டேன், அங்கே சுமார் ஐந்து வருடங்கள் நான் படித்தேன். நான் பள்ளியில் மிகவும் துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்தேன்.  வகுப்பில் என் மோசமான நடத்தையைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பட்டது.  என் தவறான நடத்தையினால் நான் அனேகர் தவறான பாதையில்  செல்வதற்குக் காரணமாக இருந்தேன்.  சூதாட்டம், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல் மற்றும் சண்டையிடுதல் போன்றவைகள் மூலமாக நான் என் சிறுவயதில் என்னை நானே சந்தோசப்படுத்திக் கொண்டிருந்தேன்.  மரணத்தைப் பற்றிய பயம் எனக்கு எப்பொழுதும் இருந்தது என்றாலும், என் தீய பழக்க வழக்கங்களை என்னால் விட்டு விட முடியவில்லை. கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்து, ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாள் பள்ளி மற்றும் சபையில் கலந்து கொள்ளுதல் ஆகியவை என்னை ஒரு கிறிஸ்தவனாக்கவில்லை. நான் கிறிஸ்தவரல்லாதவரைக் காட்டிலும் மோசமானவனாக இருந்தேன்.

என் பதினாறு வயதில் நான் இந்தியாவை விட்டு சிலோனுக்குச் சென்றேன். நான் குறைவான கல்வியையே பெற்றிருந்தாலும், என்னால் நிறைய சாதிக்க முடியும் என்று நினைத்தேன். சிலோனில் ஒரு ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ முடியுமளவுக்கு எனக்கு திறன் இருந்ததாக நான் நினைத்தேன்.  கடிவாளம் இடப்படாத குதிரையைப் போல, கட்டுப்பாடின்றி, என் நண்பர்கள் மற்றும் கடைக்காரர்களை ஏமாற்றுதல் மற்றும் வஞ்சித்தல் ஆகியவை என் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வந்தது. மற்றவர்களிடம் இருந்து தந்திரமாக கடன் வாங்குவதிலும், திரும்பச் செலுத்தும் எண்ணம் எதுவுமின்றி நயமான வார்த்தைகளால் உறுதி கூறுவதிலும் நான் மிகுந்த சாமர்த்தியமுள்ளவனாக இருந்தேன்.

ஒரு மதுபானக் கடையில் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவனாக எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அங்கே நான்  பிசாசுக்கு அடிமையானேன். என் இருதயம் மற்றும் ஆத்துமா இவ்விரண்டையும் அவனுடைய விருப்பங்களுக்கு அர்ப்பணித்து விட்டவனாக இருந்தேன். சீக்கிரத்திலேயே நான் இருப்பதிலேயே மோசமான ஒழுக்கக் குறைபாடுகளின் ஆழத்தில், பாவத்தில் மூழ்கிவிட்டேன்.

பாவம் மற்றும் மதியீனத்தின் கசப்பான ஒவ்வொரு நிலைகளையும் நான் கடந்து சென்றேன். ஒரு நிறுவனத்தின் முதலாளியுடன் நானும் ஒரு பங்குதாரராக சேர்க்கப்பட்டு,  அந்த ஊரின் மிகவும் பெயர்பெற்ற ஒன்றுக்கும் உதவாத மனிதர்களுடன் சேர்ந்துப் பழக ஆரம்பித்தேன்.  நான் என் சுய மரியாதையை எல்லாம் இழந்து அவமானப்பட்டேன். என் மனச்சாட்சியின் குரல் மழுங்கிவிட்டது. நன்மையான எந்தக் காரியத்துக்கும் நான் மரித்தவனாக இருந்தேன். மிகவும் வறுமைக்குள்ளாகி, கடன்காரனாக மாறி, என்ன செய்வது என்ற பயம் எனக்குள் எழுந்தது.

இந்த மோசமான சூழ்நிலையில், என் ஏழைத் தாயார் இந்தியாவிலிருந்து தகுதியற்ற தன் மகனைத் தேடி வந்தார்.  அவன் என்னைக் கண்டுபிடித்து, என் வருந்தத்தக்க சூழலில் இருந்து என்னைக் காப்பாற்றி, இந்தியாவிற்கு திரும்ப அழைத்துச் சென்றார். நான் திருமணம் செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். நான் சம்மதித்தேன், என் மாமா ஒரு இள கிறிஸ்தவப் பெண்ணை எனக்காக தெரிந்தெடுத்தார், வெகு விரைவில் நாங்கள் திருமணத்தில் இணைந்தோம். மனம் திரும்பின ஒரு கணவனத் தாரும் என ஆண்டவரிடம் ஜெபித்து, இப்பெண் அனேகரை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருந்திருக்கிறார். அவள் மிகவும் ஏமாற்றமடைந்து வருந்தும்படி நான் அவளிடம் உண்மையை சொல்ல வேண்டுமோ? எங்களுக்குத் திருமணம் நடந்து மூன்று மணிநேரங்களுக்குப் பின் அவள் ஒரு கிறிஸ்தவ கைப்பிரதியை என்னிடம் கொடுத்து, நான் அதை விரும்புகிறேனா என என்னிடம் கேட்டாள்.  எனக்கு இது போன்ற காரியங்களைப் பற்றி கவலை இல்லை என்றேன். எங்கள் திருமண வாழ்வின் முதல் ஆண்டை மிகுந்த வருத்தத்துடனும், துக்கத்துடனும், தேவன் என்னை இரக்கமாக மனமாற்றம் பெறச் செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் ஜெபித்து நாட்களைக் கடத்தினார். எங்களுக்குத் திருமணம் நடந்து பத்து நாட்களுக்குப் பின், நான் காலரா நோயினால் பாதிக்கப்பட்டேன். நான் பிழைக்க வழி இல்லை என மருத்துவர்கள் கருதினர். நான் மரணத்தின் விளிம்புவரை சென்ற அந்த இரவை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். என் அருமை மனைவி, நோய் தொற்று பற்றிய பயமில்லாமல் அந்த இரவு முழுவதும் என்னுடன் இருந்து, கடவுள் என்னைக் காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தாள்.  கர்த்தருடைய நாமம் பரிசுத்தப் படுவதாக. அவளுடைய ஊக்கமான வேண்டுதல்கள் வீணாகப் போகவில்லை. கிருபாசனத்துக்கு நேராக அவள் செய்த ஜெபங்கள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டது. நான் சுகம் பெற்று பின் மறுபடியும் நாங்கள் சிலோனுக்குப் போனோம்.

நான் உலக வேலை பார்ப்பதற்கு என் மனைவி எதிர்ப்பு தெரிவித்து, நான் ஊழியம் செய்ய வேண்டும் என மிகவும் கவலைப் பட்டாள். சுதேச உதவிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட சொற்ப கூலியை அறிந்தவனாக, நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒரு முறை ஊழியம் செய்வதற்கு எங்களை ஒப்புக் கொடுக்கும்படி மிஷன் வளாகம் வரைக்கும் சென்று, வாசலில் என் மனதை மாற்றிக் கொண்டு திரும்ப வீடு வந்து சேர்ந்தோம்.

கடைசியில் நான் சம்மதித்து, நாங்கள் இருவரும் ஒரு மிஷனில் இணைந்து வேலை பார்த்தோம். எனக்கு பன்னிரண்டு மற்றும் அரை அணாக்களும், அவளுக்கு  ஏழு அணாக்கள் மாதச் சம்பளம்.  இந்த மிஷனில் இருக்கும்போது, என் இருதயத்தில் ஆண்டவருடைய பரிசுத்த ஆவியைப் பற்றிய வெளிச்சத்தைக் காண்பித்தது ஆண்டவருடைய சித்தமாக இருந்தது.  என் மனைவியின் அனுதின வாழ்க்கை மற்றும் ஜெபங்களை  (அவளின் பிரசங்கம் அல்ல) தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, அவை  நான் மனமாற்றத்திற்குள் வருவதற்குக் காரணமாக இருந்தது.  ஒரு நாள் நான் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது நான் தேவனின் குற்றஞ்சாட்டுதலின் குரலைக் கேட்டேன். அவர் சொன்னது, “ டேவிட் நீ தவறான வழியில் இருக்கிறாய், உன் வாழ்க்கை தவறானதாக இருக்கிறது, மேலும் நீ நரகத்துக்குச் செல்லும் விசாலமான பாதையில் நீ இருக்கிறாய்.”  என் மனக்கண்களுக்கு முன்பாக நான் செய்த ஒவ்வொரு பாவங்களும் தெளிவாகக் காட்டப்பட்டது. நான் இரக்கம் மற்றும் மன்னிப்பு வேண்டி கதறினேன். நான் ஒரு பைத்தியக்காரனைப் போல தரையில் படுத்து உருண்டேன். நான் சமாதானத்தைத் தேடினேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.”இயேசுவின் இரத்தம், பாதுகாப்பு, நிச்சய தன்மை மற்றும் ஆனந்தம்” என்ற தலைப்பில் ஒரு கைப்பிரதியை வாசித்தேன்.  என் குழப்பமான மனதிற்கு அது ஒரு தற்காலிக அமைதியைத் தந்தது. நான் அனுதினம் செய்கிற பாவங்களை ஒரு தாளில் எழுதி, இரவில் அவைகளை அறிக்கை செய்தேன். ஆனால் காலையில் மறுபடியும் அப்பாவங்களைச் செய்தேன். இரட்சிப்பின் வழியை எனக்குக் காட்டுவார் எவருமில்லை. விசுவாசி, விசுவாசி என அனேகர் என்னிடம் கூறினார், ஆனால் எதை, எப்படி விசுவாசிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒருபோதும் விளக்கியது இல்லை. என் வாழ்க்கைத் துணையின் உதவியை நாடினேன்; அவள் தனக்கிருந்த வெளிச்சத்தின் அளவின் படி ஆண்டவரை நம்பி இருந்தாலும், அவளிடத்தில், “பரிபூரணமான அமைதி” அவளிடம் இருந்ததில்லை. எனக்கு உதவிக் கரம் நீட்ட என் மனைவியால் முடியவில்லை.

முடிவுக்கு வராத இந்த குழப்பமான மன அமைதியற்ற நிலையில் நான் இரண்டு வருடங்கள் இருந்தேன். ”கவலையுடன் தேடுபவர்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்.  அதை மிகவும் கவனமாக வாசித்தேன். அதை எழுதிய ஆசிரியரின் வார்த்தைகளை அல்ல, அவர் மேற்கோள் காட்டியிருந்த வசனமானது அமைதியற்ற என் மனதிடம் சமாதானம் மற்றும் மன்னிப்பைப் பற்றி பேசியது.  அது ரோமர் 4:5 ல் உள்ள ” ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால்…” என்பது போன்ற வசனங்கள் ஆகும்.

நான் மன்னிப்பைப் பெறுவதற்காக செய்து வந்த கிரியைகளை நான் விட ஆரம்பித்தேன்.  அழுகை, பெருமூச்சு, வாசிப்பு, முயற்சி இவை எல்லாம் பயனற்றவை என்று கண்டுகொண்டேன், அவைகளை நிறுத்தவும் செய்தேன். நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அவருடைய வார்த்தையில் உள்ளபடி அவரை விசுவாசித்தேன். என் பாரம் நீங்கியது, என் கண்ணீர் துடைக்கப்பட்டது. என் பலவீனமான ஆத்துமாவானது இயேசுவில் ஒரு இளைப்பாறுதலையும், சொல்ல முடியாத சந்தோசத்தையும் சமாதானத்தையும் கண்டுகொண்டது. விலைமதிப்பில்லாத இரட்சிப்புக்காக நான் துள்ளிக் குதித்து உற்சாகமாக கத்தினேன். கிறிஸ்துவைப் பற்றி தாமதமின்றி மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன், வெளியரங்கமாக பிரசங்கித்து, கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமையைப் பற்றி பகிரங்கமாக சாட்சிகூறினேன். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி.  என் சத்தத்தை மிகவும் உயர்த்தி அவரைப் பற்றிய துதிகளை நான் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டவர்கள் அனைவரும் தேவனின் ஆச்சரியமான நன்மையை ருசிபார்த்து அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன். பழையவை எல்லாம் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. என் மதுபான கடையில் , மற்றும் என்னுடன் சேர்ந்து பலவித விளையாட்டுகளை விளையாடி தோழர்களின் உதவி எனக்கு இப்போது தேவையற்றதாகி விட்டது.

நான் அவர்களை விட்டு விலகுவதற்கு முன்னமே, அவர்கள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். அவர்களில் ஒருவரை நான் கண்டு, என் சாட்சியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.  அது அவனை மிகவும் பாதித்தது, அதன் பின் அவன் ஒருபோதும் என்னைப் பார்க்க திரும்பி வரவில்லை. இதன் பின்பு, இந்த தெளிவான வெளிச்சத்திற்கும், மன்னிப்பைப் பற்றிய முழு நிச்சயத்திற்கும் என் அருமை மனைவியை நடத்த கர்த்தர் என்னை பயன்படுத்தினார். பின்னர் என் சகோதரரரும் என் தாயாரும் கூட இதைப் பெற்றனர்.  இப்போது ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமோ அவ்வண்ணமாக எங்கள் வீடு இருந்தது, அது ஒரு விசுவாச வீடாக, பரலோகத்தின் ஒரு முன்சுவையாக இருந்தது. தேவனுக்கே  மகிமை.  நாள் முழுதும் தேவனுடைய மகிமையைப் பாடி, துதித்து உயர்த்தி மகிழ்ந்தோம்.. அல்லேலூயா. என் கடன்கள் அனைத்தையும் நான் திரும்பச் செலுத்தி முடித்தேன்.  அவற்றில் சில நான் ஒன்பது வயது சிறுவனாக இருக்கும்போது வாங்கிய கடன்கள் ஆகும்.  இதைச் செய்வதற்கு எனக்கு நான்கு வருடங்கள் ஆனது.  எனக்குக் கடன் கொடுத்தவர்கள் சிலர் எனக்குக் கொடுத்தக் கடனை முற்றிலும் மறந்தே போயிருந்தனர்.  என் வாழ்க்கையில் உள்ள மாற்றத்தை நான் பார்த்து, நான் இரட்சிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன்.

-      அடுத்த கட்டுரையில் தமிழ் டேவிட் தாம் பரிசுத்த ஆவியின் பெலனைப் பெற்றது பற்றி கூறுவதைப் பார்க்கலாம்.

Sunday, April 2, 2017

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் – 1. தமிழ் டேவிட் - ஒரு அறிமுகம்



இந்திய கிறிஸ்தவ வரலாறு இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராகிய அப்போஸ்தலர் தோமாவிடம் இருந்து துவங்குகிறது என்பது வரலாற்று உண்மை என்றாலும், தேவன் துவக்க கால முதலே அனேக தேவ மனிதர்களை இம்மண்ணில் உருவாக்கி, வல்லமையாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் அனேகரைப் பற்றி இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பது மிக மிகக் குறைவாக இருப்பது வருத்தமளிக்கக் கூடிய செய்தி ஆகும். இன்னும் பல நல்ல தேவ மனிதர்களைப் பற்றிய சரியான விவரங்கள், அவர்கள் எழுதின புத்தகங்கள் பல அப்படியே அழிந்து போய்விட்டன. இத் தொடரில் என் விருப்பம் என்னவெனில், சபை மற்றும் சாதி பாகுபாடின்றி, இந்தியாவில் குறிப்பாக முதலில் தமிழகத்தில் இருந்து தேவன் எழுப்பிப் பயன்படுத்தின தேவ மனிதர்களைப் பற்றி இக்கால கிறிஸ்தவ தலைமுறைக்கு என்னால் இயன்ற தகவல்களைச் சேகரித்து தரவிரும்புகிறேன். 

முதலாவதாக தமிழ் டேவிட் என்று உலகமெங்கிலும் அறியப்பட்ட வே. தே. டேவிட் என்பவரைப் பற்றி சில விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இவரைப் பற்றி அறிய வந்தது மிகவும் தற்செயலானது போல எனக்குத் தோன்றினாலும், அவருடைய வாழ்க்கை எனக்கு ஒரு பலத்த அசைவை உண்டாக்கி இருப்பது மறுக்க முடியாதது. அவரைப் பற்றி வாசிக்க வாசிக்க நான் அறிந்து கொண்ட ஒரு உண்மை என்னவெனில், அவர் தேவனுக்காக தம்மை எவ்வளவு முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் என்பதாகும். நீங்களும் கூட அதைக் கண்டு கொள்வீர்கள். 
எந்த ஒரு வெற்றிக்கும் பின் அதற்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தினவர் என்று கண்டிப்பாக ஒருவர் இருப்பார்.  பக்தியான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ பள்ளியில் படித்த டேவிட் சிறு வயது முதலே துன்மார்க்கமான வழியில் நடந்தவர் என்றாலும் அவருடைய திருமணம் அவர் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தது. அவரே இதை தன் நண்பர் ஒருவரிடம் இப்படிச் சொல்கிறார்: “எங்களுக்குத் திருமணம் நடந்த மூன்று மணிநேரங்களுக்குக்குள் என் மனைவி ஒரு கைப்பிரதியை என்னிடம் வந்து கொடுத்தார். அப்பொழுது தான் திருமணம் செய்திருக்கும் ஆணிடம் இவ்வாறு நடப்பது ஒரு பெரிய அவமரியாதை என்று நான் நினைத்தேன். இந்தியாவில் இப்படிச் செய்வது ஒரு பெரிய அவமானமாகக் கருதப்பட்டது… அனேக நேரங்களில் அவள் அதிகாலையிலேயே ஒரு பெரிய வேதாகமத்தை எடுத்து வந்து என் முன்பாக அமர்ந்து வாசிப்பார். எனக்கு அது ஒரு பிரச்சனையாக இருந்தது. நான் அவள் ஜெபங்களைக் கேட்க முடிந்ததில்லை, அதை அப்படியே புறக்கணித்து விடுவேன்.”  என்ன ஒரு ஆச்சரியம் எனில், டேவிட் அவர்களை மணப்பதற்கு முன்பு, அப்பெண் இயேசுவை நன்கறிந்த கிறிஸ்தவர் ஒருவரையே திருமணம் செய்வேன் எனப் பிடிவாதமாக அனேகரை வேண்டாம் என தள்ளி இருக்கிறார்.  

இவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்ற நாள்முதற்கொண்டு கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். தேவன் இவருக்குக் கொடுத்த தாலந்துகளினால், எவரிடமும் கிறிஸ்துவைப் பற்றி தெளிவாக விளங்கக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார். அந்நாட்களிலேயே மிக எளிதாக இவர் பேசும் இடங்களில் திரள் கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆன படியால் இவரை இந்தியாவின் ஒயிட்பீல்ட் என செல்லமாக அழைத்திருக்கின்றனர். 18 ம் நூற்றாண்டில் ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் என்ற தேவமனிதர் இங்கிலாந்து தேசத்தையே தேவனுக்காக அசைத்து, அனேகர் ஆண்டவரைப் பின்பற்ற ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார் மற்றும் மெதடிஸ்ட் சபையின் ஆரம்ப காலத்தில் வெஸ்லி சகோதரர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
பிரசங்க மேடைகளிலும், வாய்ப்பு கிடைக்கும் எவ்விடத்திலும் கர்த்தருக்காக வைராக்கியமாகப் பேசும் திறன் பெற்றிருந்த தமிழ் டேவிட் அவர் செய்த பல நற்காரியங்களுக்காக நன்கறியப்பட்டிருந்தார்.  அவர் எழுதிய “பரிசுத்த ஆவியின் ஞானஸ்ஸ்நானத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?” என்ற கைப்பிரதி உகாண்டா தேசத்தில் ஒரு எழுப்புதல் நடைபெற காரணமாக இருந்தது மிகவும் ஆச்சரியமானதாகும். 

உகாண்டாவில் சி.எம்.எஸ் மிஷனெரியாக பணிபுரிந்த பில்கிங்டன் (Pilkington) என்பவர் இவர் எழுதிய கைப்பிரதியை வாசித்த பின்பு உண்டான தாக்கத்தினால் அவர் ஊழியம் செய்த பகுதியில் ஒரு பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அவர் தன்  மூன்று வருடகால ஊழியத்தில் உகாண்டாவில் அனேக ஆச்சரியமான சாதனைகளைச் செய்திருந்தார். புதிய ஏற்ப்பாட்டை லுகாண்டா மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததுடன், பழைய ஏற்ப்பாட்டின் அனேக புத்தகங்களையும் மொழிபெயர்ப்பு செய்து முடித்திருந்தார். ஆனால் அவர் தன் ஊழியத்தில் ஆவிக்குரிய பலன்கள் மிகக் குறைவாக இருப்பதாக உணர்ந்தார். தன் பழைய மதத்தில் இல்லாதது எனச் சொல்லிக்கொள்ளும்படியாக  கிறிஸ்தவத்தில் எதுவும் இல்லை எனக் கூறி, லுகாண்டா மொழிபெயர்ப்பை வாசித்த ஒரு உள்ளூர் கிறிஸ்தவர் பின்மாற்றம் அடைந்தார்.  மிகவும் நம்பிக்கையிழந்த அச்சூழ்நிலையில், விக்டோரியாவில் உள்ள ஒரு சிறிய தீவான கோம் (Kome) என்ற பகுதிக்குச் சென்றார்.  

அந்தத் தீவில் பில்கிங்டன் தனித்திருந்த நேரத்தில், பரிசுத்த ஆவியின் வல்லமையின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டார். அது அவருடைய வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. 1896ல் லிவர்பூல் எனும் ஊரில் மாணவர்களுக்கு மத்தியில் தான் பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், ”டேவிட் என்ற தமிழ் நற்செய்தியாளர் எழுதிய ஒரு புத்தகமானது ’என் வாழ்கை சரியாக இல்லை, என்னிடத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லை’ என்பதைக் காட்டியது.  நான் என் வாழ்க்கையை நூற்றுக்கணக்கான தடவை தேவனுக்கென அர்ப்பணித்திருக்கிறேன். ஆனால் தேவனின் ஈவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பரிசுத்த ஆவியில் நிரப்பப்படும்படி தேவன் எனக்குக் கட்டளையிடுவதை இப்பொழுது நான் கண்டேன். ”பின்பு நான் வாசித்தது, “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்”, இந்த வாக்குத்தத்தத்தைக் கூறி நான் பரிசுத்த ஆவியைப் பெற்றேன்.’

டேவிட் எழுதிய அச்சிறு புத்தகத்தை வாசிப்பவர்கள், அதில் என்ன சிறப்பான செய்தி பில்கிங்டன் அவர்களுக்கு இருந்தது, இன்று நமக்கு அதில் ஏதேனும் செய்தி இருக்கக் கூடுமா என்று ஆச்சரியப்படக் கூடும். பரிபூரணமான வாழ்க்கையைத் தேடுபவர்களின் இருதயங்களில் இருக்கக் கூடிய ஒரு கேள்விக்கு டேவிட் தன் புத்தகத்தில் பதில் தருகிறார்: “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?”
டேவிட் தரும் பதில்: ”முழங்கால் படியிட்டு, தேவனிடம் அதைக் கேட்டு, விசுவாசத்தில் அதை உங்களுக்குச் சொந்தமானதாக உரிமை பாரட்டுங்கள்; நீங்கள் முழங்காலில் இருந்த் எழுவதற்கு முன், தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். பின்பு எழுந்து போய் மற்றவர்களிடம் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த ஞானஸ்நானத்தைப் பற்றி சாட்சி பகருங்கள், ஏனெனில் நீங்கள் தேவனின் வாக்குத்தத்தங்களைச் சொந்தமாக்கியிருக்கிறீர்கள். உணர்ச்சி அடைய வேண்டும் என்று அல்ல,  நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்றே தேவன் சொல்கிறார்… நீங்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்ட போது செய்ததைப் போல இப்போதும் போய் மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும்போது, அது நீங்கள் விசுவாசிப்பதைக் காண்பிக்கிறது. மேலும் தேவன் அதன் மூலமாக மகிமைப் படுகிறார். இதைக் குறித்து சாட்சிபகர நீங்கள் பயப்படுவீர்கள் எனில், நீங்கள் விசுவாசிக்க வில்லை என்பதையும், நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லை என்பதையும் அது காட்டுவதாக இருக்கிறது.  ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம், “ இன்றிலிருந்து ஆறு வாரங்கள் உங்களுக்கு நான் விடுமுறை அளிக்கிறேன்”, என்று சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அதை யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?  கண்டிப்பாக இல்லை.  வெகுசீக்கிரத்திலேயே ஊரெல்லாம் அந்த செய்தி பரவி இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. மேலும் அதன் மூலமாக தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்”.

இதைத்தான் பில்கிங்டன் கோம் என்ற இடத்தில் இருந்து மெங்கோ (Mengo) விற்கு டிசம்பர் 7,1893ல் திரும்பி வந்த போது செய்தார். அவரில் இருந்த மாற்றத்தை அனைவரும் கண்டனர். அது உண்மைதான் என அவருடைய முகத்தில் காணப்பட்ட மாற்றம் உறுதி செய்தது.  டிசம்பர் 8,9, 10 ஆகிய நாட்களில் ஒரு ஆச்சரியமான தொடர் கூட்டங்கள் அல்லது எழுப்புதல் ஆரம்பமானது. பழைய கிறிஸ்தவர்கள் புதிய வல்லமையையும், பரிசுத்தத்தையும் பெற்றனர். தலைவர்கள் முன்வந்து, தாங்கள் ஒரு சாதாரண பெயர் கிறிஸ்தவர்களாகவே இருந்து வந்ததாக அறிக்கை செய்தனர். ஒரு பெரும் திரளான புறஜாதியார் மனமாற்றம் அடைந்தனர்.  முன்பு பின்மாற்றம் அடைந்து சென்ற உள்ளூர் கிறிஸ்தவர் திரும்பவும் கிறிஸ்தவரானார்.  அக்காலத்தில் நடந்தவை அதை பின் நடந்த ஊழிய வரலாற்றில்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.  1894ல் 68 சுதேச ஊழியர்களும், கிறிஸ்துவைப் பின்பற்றும் 1375 பேர்களும் இருந்தனர். அந்த ஆண்டில் 544 பேர் திருமுழுக்கு பெற்றனர். பில்கிங்டன் 1897ல் மரித்த போது, 659 சுதேச ஊழியர்களும், கிறிஸ்துவைப் பின்பற்றின 12,086 பேரும் இருந்தனர், 4442 பேருக்கு திருமுழுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இன்று உகாண்டா தேசத்தில் கிறிஸ்தவர்களே மற்றவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகம். 

தமிழ் டேவிட் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலாக, எங்கேயோ நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல காரணமுண்டு. தேவன் சாதாரண மனிதர்களை, தம் வல்லமையினால் பெரும் காரியங்கள் நடக்கப் பயன்படுத்துகிறார். ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, அல்லது அவருக்கு தன்னை முழுமையாக விட்டுக்கொடுக்கும்போது, விசுவாசித்து செயல்படும்போது அசாதாரணமான காரியங்கள் நடக்கத் துவங்குகின்றன. அதுதான் தமிழ் டேவிட் அவர்களின் வாழ்விலும், பில்கிங்டன் அவர்களின் ஊழியத்திலும் நடந்தது. விசுவாசத்திற்கும் உணர்ச்சிவசப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிய வேண்டும். அறிந்தால், அறிந்து அதன் படி செயல்பட்டால் தேவன் உங்களையும் கொண்டு பெரும் காரியங்களைச் செய்வார். 

அடுத்த கட்டுரையில்…. தமிழ் டேவிட் அவர்களின் சுயசரிதை

Monday, December 12, 2016

ஒரு கிறிஸ்மஸ் செய்தி

”கிறிஸ்மஸ் என்றதுமே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?” இப்படி ஒரு கேள்வியை சமீபத்தில் எங்கள் சபையைச் சேர்ந்த ஒரு சகோதரரின் குடும்பத்தினரிடம் கேட்டேன். கிறிஸ்மஸ் என்றதுமே அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்ததை உடனே காண முடிந்தது. முதலில் அந்த சகோதரன், தன் சிறுவயது கிறிஸ்மஸ் நினைவுகள், கிறிஸ்மஸ் கீத பவனி, பாடகர் குழு சார்ந்த சிறப்பு பயிற்சிகள் என மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சகோதரரின் மனைவி, ஒரு இந்து குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்திருந்த படியால், கிறிஸ்மஸ் சார்ந்த பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்கள் என மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்னார். சகோதரனின் தாயார், கிறிஸ்மஸ் நாட்களில் ஒன்றாகக் கூடும் குடும்பச் சொந்தங்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே நேரம் செலவழிப்பதில் உள்ள மகிழ்ச்சி என பலவகை நினைவுகள் அலைமோத, அவற்றில் சிலதைச் சொன்னார். சரி. இப்போது உங்களிடம் கேட்கிறேன், ”கிறிஸ்மஸ் என்றதுமே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?” 

நீங்கள் இந்தக் கேள்விக்கு என்ன சொல்லலாம் என்று நினைக்கும் இவ்வேளையில், நான் சமீபத்தில் கேட்ட ஒரு கிறிஸ்மஸ் செய்தியில், எங்கள் கல்லூரிக்கு வந்திருந்த பாஸ்டர் மைக்கேல் தாமஸ் ராஜூ அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.  கிறிஸ்மஸ் என்றதுமே நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் மனிதனாக தோன்றிய இயேசுவின் பிறப்பை, ஏழை மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த சிறப்பு மகிழ்வை நினைவு கூர்கிறோம். அவர் சொல்கையில், “கிறிஸ்மஸ் என்பது தேவனுடைய உண்மையை வெளிப்படுத்துகிற ஒரு நாள். இயேசு பிறப்பதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்த, ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதை, தேவனுடைய உண்மையை நினைவு கூற வேண்டும்” என்றார். பிள்ளையில்லாத ஆபிரகாம், சொந்த இடமில்லாமல் ஒரு வழிப்போக்கனைப் போல சுற்றித் திரிந்த ஆபிரகாம் என இல்லாமைக்குச் சொந்தக் காரனான ஆபிரகாம் மூலம் பூமியில் உள்ள அனைவரையும் ஆசீர்வதிக்கும் வார்த்தையை வாக்குத்தத்தம் பண்ணினவர், மன்னுருவாக வந்த வார்த்தையானவரை நாம் நினைவில் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தேவன் வாக்கு மாறாதவர். ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் தன் தந்தையின் வாழ்வில் தேவன் எவ்வாறு இடைபட்டார் என்பதையும், இன்னமும் தேவன் உண்மையுள்ளவராக அவர்கள் குடும்பத்தில் இருப்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.

நான் இதைப் பற்றி யோசிக்கையில், பகிர்ந்து கொள்கையில், “தேவன் எதற்காக ஒரு மனிதனாக வந்தார்”, ”தேவன் மனிதனாக வர வேண்டிய அவசியம் என்ன?” என்று முன் இருந்தவர்களிடம் கேட்டேன். தேவன் ஏன் மனிதனாக வரவேண்டும்? என்பதற்குப் பல பதில்கள் வந்தன:
1. தேவன் மனிதர்களை நேசிப்பதால்….
2. இந்த உலகத்தில் பாவம் பெருகிவிட்ட படியால…
3. மனிதனைக் காப்பாற்றுவதற்காக…

உங்கள் மனதில் தோன்றும் பதில் என்ன? உடனே ஏதேன் தோட்டம் நினைவுக்கு வருகிறதா! ஏதேன் தோட்டத்தில் மனிதன் தேவகட்டளையை மீறி பாவம் செய்து தேவனுக்கு தன்னை மறைத்துக் கொண்டபோது, அவனைத் தேடிவந்த தெய்வம், மனிதனை வஞ்சித்த சர்ப்பத்துக்கு எதிராக, “அவர் உன் தலையை நசுக்குவார்” எனச் சொல்லி ஆதாம் ஏவாளுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தாரே. கொடுத்ததும் அல்லாமல் அவர்களுக்காக தோலினாலான ஒரு உடையையும் கேட்காமலே கொடுத்தாரே! நிற்க.

இங்கே இரு காரியங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது. ஆதாம் ஏவாளுக்கு உடை கொடுப்பதற்காக ஒரு விலங்கு அடிக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஆட்டுக்குட்டியானவர்தாம். ஏனெனில் உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என வேதத்தில் வாசிக்கிறோமல்லவா! இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுவதுண்டு. இதில் முழு உடன்பாடு எனக்கு இல்லை எனினும், பாவம் செய்த மனிதனின் பாவத்தைச் சுமக்க அன்றே, “இதோ” என்று ஒருவர் ஆயத்தமானார் என்று நினைத்துக் கொள்கிறேன்.

இரண்டாவதாக, பாவம் செய்த பிறகுதான் ஆதாம் ஏவாள் பிள்ளை பெற்ற படியால், பாவம் செய்து பிள்ளை பிறந்தது என அனேகர் குழப்பிக் கொள்கின்றனர். திருமணம் என்பது தேவன் உண்டாக்கின ஒரு நியமம். மனிதன் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறான் என்பது உண்மை. ஆனால், பாவத்தினால் பிறக்கிறான் என்பது தவறான புரிதல் ஆகும். பிறக்கும் குழந்தைகள் அவர்களை அறியாமலேயே, நாம் சொல்லிக் கொடுக்காமலேயே பல காரியங்களைச் செய்வதன் காரணம், பிறக்கும்போதே நாம் பாவ சுபாவம் உள்ளவர்களாக பிறப்பதுதான். இதை ஜென்ம சுபாவம் என வேதம் கூறுகிறது.  அனேகர் சங்கீதம் 51:5 ஐ தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நாம் அவ்வாறு இருக்கலாகாது.
சரி. மீண்டும் நம் செய்திக்கு வருவோம். தேவன் ஏன் மனிதனாகப் பிறந்தார். வேதத்தின் எனக்கு மிகவும் பிடித்த வேத பகுதிகளில் ஒன்றான எபிரேயர் 2: 14 சொல்வது போல, “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.” நமக்காக நம்மைப் போலானார்.  ஆபிரகாம் அனேக ஆண்டுகள் காத்திருந்தான். கண்டிப்பாக அவன் காத்திருந்த அந்த ஆண்டுகள் அவனுக்கு மிகவும் ஏக்கத்தைக் கொடுத்திருக்கும். ஆனால் அவனை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவனுடைய முதிர் வயதில் ஏறக்குறைய முப்பது வருடம் கழித்து அவனுடைய வாழ்வில் வாக்குத்தத்தத்தை நிறைவேறப்பண்ணினார். ஈசாக்கு பெயருக்கேற்றார்ப் போல அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியை உண்டாக்குகிற ஒரு மகனாக இருந்தான். ஆனால் ஆண்டவர் இயேசு பிறப்புக்காக, இந்த உலகம் காத்திருந்தது மீக நீண்டதொரு காலம். வேதத்தில் உள்ள கணக்கின் படி ஏறக்குறைய நான்காயிரம் வருடங்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்பே, அவர் பிறப்பதற்கு 650 வருடங்களுக்கு முன் உரைக்கப்பட்டிருந்தது. சொன்னபடி, காலங்கள் நிறைவேறினபோது தேவனுடைய ஒரே பேறானவர் மனிதனாகப் பிறந்தார்.

இயேசு மனிதனாகப் பிறந்தபோது, வானில் தோன்றிய தேவதூதர்கள் சொன்னது என்ன? ”இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” என தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள் அல்லவா! இப்படி மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவித்த தேவதூதர்கள் சந்தோசமடையும் ஒரு தருணம் என்ன தெரியுமா? வேதம் சொல்கிறது போல, “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது” (லூக்கா 15:7,10). இப்பொழுது சொல்லுங்கள். கிறிஸ்து பிறந்த செய்தியைத் தான் கிறிஸ்மஸ் கீத பவனியாக வீடுகள் தோறும் சொல்கிறோம். ஆனால் மிகவும் வருந்தத்தக்க விதமாக இன்று அவை வெறும் பணம் சேகரிப்பு உத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்து பிறந்தார் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஒருவேளை நாம் கொண்டாடும் டிசம்பர் 25 என்பது சரியான நாளாக இல்லாமலிருக்கலாம். அதற்காக அவர் பிறக்கவில்லை என்றாகிவிடாதல்லவா! மனிதர்களாகிய நமக்கு உண்மையான கிறிஸ்மஸ், கிறிஸ்து என்று நம் இருதயத்தில் பிறக்கிறாரோ, நாம் என்று தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுகிறோமோ அன்றே உண்மையான கிறிஸ்மஸ் ஆகும்.

சமீபத்தில் ஒரு வேதாகமக் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, christmas க்கும் X-mas க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். இரண்டுமே கிறிஸ்து பிறப்பு பண்டிகையைக் குறிக்கிற வார்த்தைகள். ஆனால் X-mas ல் கிறிஸ்து இல்லை. கிறிஸ்து இல்லாத கிறிஸ்மஸ் உண்மையான கிறிஸ்மஸ் ஆக முடியாது. அதே போலத்தான் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவன் X-ian ஆக இருப்பான். அவனால் இந்த சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்று மாணவர்களிடம் சொன்னேன்.
கிறிஸ்மஸ் என்றாலே வரும் மகிழ்ச்சி, கிறிஸ்துவுக்கு தாலாட்டுப் பாடுவதுடன் நின்று விடாமல், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், கிறிஸ்துவைப் பகிர்ந்து, அன்பை வார்த்து சமாதானம் செழிக்க தேவன் நம்மையும் பயன்படுத்துவாராக.