Tuesday, July 29, 2014

கனவு நனவாக வேண்டாம்


fb ஒரு சிறப்பான ஸ்தோத்திர கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அழைத்தவர் நெருங்கிய நண்பரும், உண்மையான தேவ ஊழியருமாக இருந்தபடியால் செல்வது என்று தீர்மானித்திருந்தேன். கூட்டம் மாலை 6 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. நான் நண்பர் மேல் உள்ள மதிப்பில் சற்று சீக்கிரமே போய்விட்டேன். அங்கே அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். சரியாக 6 மணிக்கு நல்ல பழைய கீர்த்தனை மற்றும் பாமாலைப் பாடல்களில் இருந்து துதிப்பாடல்கள் பாடப்பட்டது. பாடல் பாடும்போது, எனக்கு முன் வரிசையில் நான் முகநூலில் நன்கறிந்த ஒரு நண்பர் வந்து அமர்வதைக் கவனித்தேன். எத்தனையோ கருத்து மோதல்கள் அவருடன் இருப்பினும், தேவன் அவருக்கு கொடுத்த தாலந்துகள் மற்றும் கிருபைகள் கண்டு வியந்திருக்கிறேன். உடனே எழுந்து அவரிடம் சென்று ஹலோ சொல்ல நினைத்தேன். கூட்டம் முடிந்த பின் அல்லது ஏதாவது இடைவெளியில் அவருடன் பேசலாம் என்று நினைத்து அவர் என்னை அடையாளம் காண்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் என் நண்பர் மேடையேறி, மைக் பிடித்து, :”ராஜா நீர் செய்த நன்மைகள் அவை சொல்லி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம்” என்ற பாடலை உணர்ச்சிகரமாக பாடினார். அதன் பின் எப்படியெல்லாம் தேவன் தன்னை கடந்த நாட்களில் ஊழியத்திக் நடத்திவந்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அதில் ஒரு வார்த்தை என் மனதில் சட்டென்று பதிந்தது. “எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் செலவழித்தும் ஊழியத்தில் ஆடம்பர பகட்டு இருக்கும் அளவுக்கு ஆத்துமாக்களை அறுவடை செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஆனால் தெருக்கோடியில் இருந்த என்னை பல கோடி ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்யவும் ஆறுதல் படுத்தவும் தேவன் கிருபையாய் இந்த ஏழைக்கு இரங்கினாரே!!” என்று கண்ணீர் மல்க அவர் சொன்னார். தேவன் ஒரு மனிதனை எடுத்து பயன்படுத்த வேண்டுமானால், கீழ்ப்படிதல் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குவதாக நண்பரின் சாட்சி இருந்தது.

இதற்கிடையே என் முகநூல் நண்பர் என்னை நன்றாக பார்க்கக் கூடிய வாய்ப்பிருந்தும் நான் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் வேறு பக்கம் திரும்பி இருந்ததையும் கவனித்தேன். ஒருவேளை அவர் நடைபெறும் நிகழ்ச்சியில் மனம் ஒன்றி போயிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கூட்டம் இனிதே முடிந்து. அனைவருக்கும் நல்ல உணவு உண்டு, தயவு செய்து உணவு உண்டு செல்லவும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. ஆஹா, முகநூல் நண்பருடன் பேச நல்ல வாய்ப்பு என்று நினைத்தேன். இறுதி ஜெபத்திற்காக அனைவரும் கண் மூடினோம். மிகவும் வயதான ஒரு தேவ மனிதர் என் நண்பரையும் வந்திருந்த அனைவரையும் ஆசீர்வதித்து ஜெபித்தார்.

கண் திறந்து பார்த்தால் என் முன்னே அதுவரை இருந்த முகநூல் நண்பர் இடத்தைக் காலி பண்ணி இருந்தார். மிகவும் வேதனையாக இருந்தது. ஏன் இந்நண்பர் என்னைப் பார்ப்பதையும், என்னுடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார் என்று அங்கலாய்ப்பு. கருத்து மோதல்கள் இப்படியும் விளைவுகளை உண்டாக்க முடியுமா என்று மனதிற்குள் ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி சிந்தித்தவாறே, நடந்து கொண்டிருக்கும்போது, எதிரே வந்த ஒருவர் மீது தெரியாமல் மோதி விட்டேன். சாரி சாரி என்று சொல்லிக் கொண்டே யார் மீது மோதினேன் என்று பார்க்க ஏறிட்டு பார்த்தால், நல்ல தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தது. அடடா, இது கனவுதானா. நல்ல வேளை உண்மயிலேயே அப்படி நடக்கவில்லை நடக்கவும் கூடாது என்று வேண்டிக் கொண்டு மறுபடியும் என் நித்திரையைத் தொடர்ந்தேன்.

Wednesday, January 12, 2011

வாழ்வு தரும் உணவு

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார் (யோவான் 6:27)

இயேசு கிறிஸ்து ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்பது உண்மைதான் என்றாலும் கூட, அவர் தம் போதனைகளைக் கேட்பவர்கள் வெறும் உணவுக்காக தம்மைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கக் கூடாது என்ற எச்சரிப்பைத் தர தவற வில்லை.
உணவும், உண்ணும் உடலும் அழிந்து போம். ஆகவே, அழிந்து போகிறவைகளைக் குறித்து கவலைப் படுவதை விட அழியாமல் இருக்கப் போகிறவைகளைக் குறித்து உங்கள் எண்ணம் இருக்கட்டும் என்கிறார்.
நித்திய ஜீவனைப் பெற நாம் தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அஃது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதேயாம். இயேசு கிறிஸ்துவை நாம் ஏன் விசுவாசிக்க வேண்டும்?
வனாதிர யாத்திரையில் ஆதி இஸ்ரவேலர்கள் வானத்திலிருந்து பொழிந்தருளப்பட்ட மன்னாவை (இது என்ன?) உண்டு கானான் வந்து சேர்ந்தனர். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாம் வானத்திலிருந்து இறங்கின மன்னாவாம் ம்ன்னன் இயேசுவை உண்டு பரலோகக் கானான் சேர வேண்டும் என்பதே தேவன் நமக்கு வைத்திருக்கிற திட்டமாக இருக்கிறது.


வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் (யோவான் 6:33)

இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் சாப்பிட்ட மன்னாவானது தேனிட்ட பணிகாரம் போல ருசிகரமானதாயிருந்தது (யாத்.16:31) ஆனால் தேவன் நமக்கு அருளுகிற ம்ன்னாவோ தேனிலும் தெளி தேனிலும் மதுரமுள்ளதாயிருக்கிறது (சங்கீதம்19).

நாம் செய்ய வேண்டியதெல்லாம் “ருசித்து” வாழ்வதே! ( சங்கீதம்34:8). என்றாவது ஒரு நாள் அல்ல்ல, என்றும் எந்நாளும் நாம் உண்டால்தால் உயிர் வாழ முடியும் என்பது உண்மை. ஆம் ஆவிக்குரிய உணவாக அனுதினமும் அவரை உட்கொண்டால்தான் நாம் ஆவிக்குரிய உலகில் (ஆவி உலகில் அல்ல^_^ ) உயிர் வாழ முடியும்.


ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும். ஆமென். (யோவான் 6:34)

Thursday, January 6, 2011

கள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?

இது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தப்ப முடியாது. வேதாகமத்தின் துணையுடன் கள்ள போதகங்களை அடையாளம் காண  உதவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கள்ளப் போதகர்கள் யார்?

     வேதத்தை வேத வெளிச்சத்தில் காணாதவர்கள். தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அல்லது தங்கள் இஷ்டக் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள மட்டுமே வேதாகமத்தை பொய்யாய் யாதொரு நெறிமுறையின்றி மேற்கோளாக பயன்படுத்துவார்கள்.
இவர்கள் வேதசத்தியத்திற்கு வினோதமான விளக்கம் அளிப்பது போதாதென்று தாங்கள் புதுமை படைப்பாளிகள் என்றும் சில வேளைகளில் மார்தட்டிக் கொள்வார்கள்.
     தங்கள் போதகத்தின் பயனாக கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டாரா? ஜனங்கள் எச்சரிக்கப்பட்டு பயன்பெற்றார்களா? என்றெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் நோக்குவதில்லை.
     ஜனங்களை தங்கள் பக்கம் வசப்படுத்தி அடிமைகளாக்கி தங்களுக்கு ஆதாயம் அல்லது பிழைப்பை தேடிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
     கிறிஸ்தவ சபைகளில் கொசுக்களைப் போல பெருகியிருக்கும் இவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
தப்பான போதனைகள் இன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் இந்த வெள்ளத்தில் எவருமே மீந்திருக்க முடியாது என்ற அளவுக்கு சிந்தைக்கு தொட்டில் கட்டி அப்பாவி விசுவாசிகளுக்கு மகுடி வாசித்து மயங்கவைக்கும் போதை உபதேசங்கள் விஷம் போல பெருகியிருக்கின்றன.
சர்ப்பமானது தனது தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல உங்கள் மனதையும் (மயக்கி) கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தினின்று விலக்கும்படி (தந்திரமாய்) கெடுத்துப் போடுமோ என்று பயந்திருக்கிறேன் என்று பவுல் சொன்னதில் இப்படிப் பட்ட கள்ளப் போதகர்களும் அடங்குவரோ?
கள்ள உபதேசங்கள் கள்ளப் போதகர்கள் இவற்றைப் பற்றி பேசும் போது முதலாவது நாம் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் பிசாசினால் சத்தியத்தினின்று விலகும் படி வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆவர். நாம் அவர்கள் எந்தப் பகுதியில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சரியாய் விளங்கிக்கொண்டால்தான் அவர்களிடம் நாம் தப்பவோ அல்லது சரியாய் பதில் கூறவோ முடியும்.
    மேலும் கள்ள போதகம் என்பது தவறான போதனையைக் குறிக்கிறது என்பதை மறவாதிருங்கள். சமயத்தில் சில நல்ல தேவமனிதர்களே கூட தவறான போதனைகளை அளிக்கக் கூடும் அபாயமும் கூட உண்டு என்பதால் எல்லாவற்றையும் வேதாகம வெளிச்சத்தில் சோதித்துப் பாருங்கள் (1தெச.5:21).

வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள்
"உமது வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு கொடுத்த 93 வசனப் பதிலின் முதல் வாக்கியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்பதே. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். பகுத்தறிவதில் விசுவாசிகள் வளரவேண்டுமென்று பவுல் ஜெபித்தார் (பிலி.1:9).                 வஞ்சிக்கப்படுதலை அடையாளங்காண இதோ சில பரிசோதனைகள். வஞ்சிக்கப்பட்ட ஊழியர் அல்லது மக்களில் கீழ்கண்ட ஒன்று அல்லது கூடுதல் அடையாளங்களைக் காணலாம்.

1. நான் மிகவும் வித்தியாசமானவர் என்று வஞ்சிக்கப்பட்டவன் நினைக்கத் துவங்குகிறான். மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.

2.எழுதப்பட்ட வசனத்தை விட சொல்லப்படும் வார்த்தைகளில் அவன் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். வேதாகமத்துக்கும் மிஞ்சிய வெளிப்பாடுகளை தேவனிடமிருந்து வரும் புதிய காரியம் என்று அணைத்துக் கொள்ளுகிறான்.

3. சொப்பனங்கள், தரிசனங்கள், சத்தங்கள் மற்றும் கவர்ச்சியானதும் உடலுக்கடுத்ததுமான உணர்ச்சிவசக்காரியங்களில் அவன் அலாதிப் பிரியங்கொள்ளுகிறான். நூதனக்காரியங்களிலே அவனுக்கு நாட்டம் அதிகம்.

4.அவன் ஒரு புறம் சாய்ந்துவிடுகிறான். மற்றவை மறக்கப்படுமளவிற்கு ஏதோ ஒரு உபதேசம் அல்லது அனுபவத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறான். இது வேதத்தை திருக்குவது என்று அவன் அறியான்.

5. பக்குவப்பட்ட வேத போதகர்கள் முதிர்ச்சியடைந்த தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனையை அவன் நாடுவதில்லை. அவர்களது கண்காணிப்புக்குள் அடங்குவதுமில்லை. எல்லாமே நேரே பரலோகத்தில் இருந்து தனக்கு கிடைத்துவிடுகிறது என அவன் எண்ணுகிறான். முடிவை வைத்து முறை சரியென்று சாதித்துவிடுகிறான்.

6. ஏதோ விளக்கம் கூறி தன் வாழ்விலுள்ள சில பாவங்களுக்கு அவன் சாக்குப் போக்கு சொல்லி விடுகிறான். அவன் பொதுவாக பிறர்மீது கடினமாகவும், தன்மீதோ சலுகையுடனும் இருப்பான்.

7.வேதத்தை ஆழமாய் ஆராய்கிறேன் என்ற போர்வையில் அவன் மறைவான இரகசியமான காரியங்களில் அசாதாரண பிரியம் காட்டுகிறான்.

8.மிஷனெறிப்பணியிலும் நற்செய்தி அறிவிப்பிலும் அவனது நடைமுறை ஈடுபாடும் விருப்பமும் தணிகிறது.

9. யாராவது அவனது தவறுகளை சுட்டிக் காட்டினால் அதை நல்மனதுடன் அவன் ஏற்பதில்லை. நான் சத்தியத்திற்காக பாடனுபவிக்கிறேன் என்று பிசாசு அவனை எண்ணச் செய்கிறான்.

10. தான் வஞ்சிக்கப்பட்டுள்ளது அவனுக்குத் தெரியாது. அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். வெற்றிகள் அவன் கண்களை குருடாக்கிவிட்டன. நான் தவறென்றால் தேவன் எனது ஊழியத்தை இவ்விதம் ஆசீர்வதிப்பது எப்படி? என்பதே அவனது விவாதம்.

    மேலே தரப்பட்டிருக்கும் குறிப்புகள் ஓரளவிற்காவது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவை குறை காண்பதற்காக அல்ல, களைகளை களைவதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது. கர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகைதேடி திரிகிற பிசாசுக்கு  இடங்கொடாமல் யூத ராஜ சிங்கமாகிய இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம். ஜெயம் பெறுவோம். மாரநாதா! (1பேதுரு.5:8, எபேசியர்.4:27, வெளிப்படுத்தல் 5:5, 22:20,21).

Saturday, December 25, 2010

இயேசு பிறந்த போது என்ன நடந்தது?

உலகமெங்கிலும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேளிக்கைகள்,  விருந்து மற்றும் அலங்காரங்களினால் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. ஈராயிரம் வருடங்களுக்கு முன் இயேசு இவ்வுலகில் பிறந்த போது என்ன நடந்தது என்பதை சற்று ஆராய்வோமாகில் நம் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவைகளாக மாறும்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும்
உலக இரட்சகராக இயேசு பிறந்திருக்கிறார் என்கிற செய்தி தேவ ஜனங்களாகிய யூதர்களுக்கே தெரியாமல் இருந்தது. ஆனால் அறிவில் சிறந்த சாஸ்திரிகள் ஒரு சிலர் கிழக்கு தேச நாடுகளில் இருந்து இரட்சகர் பிறப்பை தம் ஞானத்தினால் அறிந்தனர். விண்மீன் வழிகாட்ட எருசலேம் சேர்ந்தனர். எருசலேம் வந்ததும் சாஸ்திர்கள் அதுவரை தங்களுக்கு வழிகாட்டின விண்மீனை நோக்காமல்  நேராக அரண்மனை சென்று யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டனர். யூதர்களின் இராஜாவாகிய ஏரோதின் அரண்மனையில் இக்கேள்வி பெரும் சல சலப்பை உண்டாக்கியது.
            இயேசுவைப் பற்றிய எவ்வித தகவல்களும் அவர்களுக்கு இல்லை. இஸ்ரவேலர்களுக்கோ ஏற்கனவே வேதாகமத்தில் தெளிவான தீர்க்கதரிசனங்கள் இருந்தன. இம்மானுவேல் எங்கே பிறப்பார், எப்பொழுது பிறப்பார் என்றெல்லாம் அவர்களுக்கு வேதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்கள் இரட்சகர் இயேசுவை எதிர்பார்க்கவும் இல்லை, அதைக் குறித்து யோசிக்கவும் இல்லை.
             சாஸ்திரிகளின் கேள்வியினால் தூண்டப்பட்ட யூத வேத பாரகர்கள் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டு பெதலகேமில் இயேசு பிறப்பார் என்ற உண்மையை உரைத்தனர். சாஸ்திரிகளுக்கு பதில் கிடைத்தது, ராஜாவுக்கோ திகில் பிடித்தது. தனக்கு போட்டியாக வேறு யாரும் வந்து விடக் கூடாதே என்ற பதை பதைப்பு. உள்ளூர ஒரு சதி திட்டம் தீட்டினான். ஆனாலும் அது வெற்றி பெற வில்லை.
                 எருசலேமுக்குப் பின் பெதலகேம் நோக்கி தங்கள் பயணத்தை துவக்கிய சாஸ்திரிகளுக்கு மறுபடியும் கிடைத்தது விண்மீனின் வழிகாட்டல். நட்சத்திரத்தைக் கண்டு அகமகிழ்ந்து பயணத்தைத் தொடர்ந்து தேவன் மனிதனாக அவதரித்த மாட்டுக் கொட்டகை வந்து சேர்ந்தனர். அங்கே இயேசுவைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கைகளையும் அவர் முன் வைத்தனர். அதன் பின்பே தங்கள் தேசத்திற்கு திரும்பினர்.

ஞானிகளின் வருகையும் தொழுகையும் நமக்கு சொல்லும் செய்தி என்ன?
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமியா.29:13) என்று வேதம் கூறுகிறது. கிழக்கு தேசத்தைச் சேர்ந்த அந்த சாஸ்திரிகள் (இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்வதுண்டு) தங்களிடம் தேவனுடைய வார்த்தை இல்லை என்ற போதிலும் அவரைக் காணும்படி தேடினர். தேடுகிறவன் எவனும் கண்டுகொள்கிறான் என்ற வ்சனத்திற்கேற்ப அவர்கள் ஆண்டவரைக் கண்டு பணிந்து கொண்டனர். அதுமாத்திரமல்ல, இயேசுவுக்கு கனத்தையும் மகிமையையும் வயது, கல்வி என்ற எந்த வித்தியாசம் பாராது அவரைப் பணிந்தனர். விலையேறப்பெற்ற பொன், வெள்ளி, தூப வர்க்கங்களை படைத்து மகிழ்ந்தன்ர். தங்களைத் தாழ்த்தினர். அதன் பின்பே காணிக்கைகளைப் படைத்தனர்.

அறிவிப்பும் அகமகிழ்வும்
இயேசு பிறந்த செய்தி உலக மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலிருந்திருக்கலாம். ஆனால் தேவன் மனிதனாக அவதரித்ததை தேவதூதர்கள் கண்டு மகிழ்ந்து அச்சந்தோசத்தின் செய்தியை அறிவிக்க விரைந்தனர். மிகவும் புகழ் பெற்றவர்களையும் வசதிபடைத்தவர்களையும் தேடி அவர்கள் செல்லாமல், இரவில் மந்தைகளை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சென்றனர். அங்கே தேவ தூதனின் வருகையால் மகிமை பிரகாசித்தது, மேய்ப்பர்களை பயம் சூழ்ந்தது. பயந்த மேய்ப்பரை தூதன் பார்த்து,”பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றான் (லூக்கா 2:10-12).
                 மிகுந்த சந்தோசத்தின் செய்தியை தூதர் அறிவித்த அந்த ஷணமே திரளான தேவ தூதர்கள் அவனுடன் இணைந்து ”உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் தேவனை துதித்தார்கள்.
                   தேவ தூதர்களின் அகமகிழ்வையும் அறிவிப்பையும் கண்ட மேய்ப்பர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காண விரைந்தனர். சொல்லப்பட்டவைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என கண்டு இயேசுவைக் குறித்து பலருக்கும் ஆச்சரியப்பட்டனர். கேள்விப்பட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

ஆட்டிடையர் அறிவிப்பு - அகமகிழ்வு - ஆச்சரியம்
    இந்நாட்களில் கிறிஸ்துமஸ் கீத பவனி என்ற பெயரில் பல இடங்களுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட் ஒருவருடன் பெரும்பாலான சபையார் செல்கிறதைக் காண்கிறோம். அதிலும் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கே கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்படும் துர்பாக்கிய நிலைமையைக் காண்கிறோம். இயேசு பிறப்புச் செய்தி அவரைக் குறித்து அறியாத, வய்ல்வெளி மேய்ப்பர்களுக்கே தூதர்களால் அறிவிக்கப்பட்டது. இன்றும் சுவிசேச களங்களில் இயேசுவைக் குறித்து அறியாத பல கோடிபேர் உண்டு. கிறிஸ்துமஸை ஒரு பண்டிகையாகக் கொண்டாடாமல் அவரின் பிறப்பை அறியாதவர் அறிந்து கொள்ளச் செய்யும் அறிவிப்பு நாளாக அனுசரிக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
                              தூதர்களில் நற்செய்தி அறிவிப்பு மட்டும் மேய்ப்பர்களை இயேசுவைக் காணச் செல்லும்படி தூண்டவில்லை. மாறாக அவர்கள் பாடிய உற்சாக துதி பாடல் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனாலும் இன்று நாம் பாடும் பெரும்பாலான கிறிஸ்துமஸ் பாடல்கள் தாலாட்டுப் பாடல்களாக இருப்பது ஏன்? நம் பாடல்கள் தூங்குகிறவர்களை இன்னும் தூங்கச் செய்யவா? அல்லது அவர்களை தட்டி எழுப்பி மீட்பர் பிறந்தார் என மீட்பின் செய்தியை அறிவிப்பதற்கா? யோசித்து பார்ப்போமாக.
    தேவதூதர்களின் அறிவிப்பு, பரம சேனைகளின் கீதம், மேய்ப்பர்களின் ஆச்சரியம் இவை எல்லாம் உண்மை என்றாலும் மரியாளுக்கு அவை பரவச உணர்வை அளிப்பதற்குப் பதிலாக, சிந்தனை உணர்வை அளித்தது.
    கிறிஸ்துமஸ் ஆடம்பரம், அலங்காரம், ஆரவாரம் இவை அனைத்தும் நமக்கு ஒரு பரவச உணர்வைக் கொண்டு வருவதற்காக அல்ல. கிறிஸ்துவின் பிறப்பு நாம் சிந்தித்துப் பார்ப்பதற்காகவே. கிறிஸ்தவர்களாகிய நாம் உற்சாகமாக கிறிஸ்து பிறந்தார் என அறியாத மாந்தரிடம் அறிவிப்போம். நம் அறிவிப்பும் ஆனந்தமும் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தூண்டி ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும். கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொருவரின் அனுபவமாகட்டும்.
  இயேசு ஏன் பிறந்தார்
ஏழைக் கோலமதாய்
பாவியை மீடக பாசமாய்
பாரில் வந்துதித்தார்