Tuesday, March 13, 2018

ஆண்டுகள் கடந்தும் காட்சிகள் மாறவில்லை

சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைக் கண்டு பாரதத் தாய் வேதனையுடன் பாடுவதாக  சந்தியாகு ஐயர் அவர்கள் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலைப் படிக்கும்போது அதில் சொல்லப்பட்டிருப்பவைகள் இன்றும் உண்மையாக இருப்பதை அறியலாம்.

பல்லவி
எந்தன் நிர்ப்பந்தம் பாரும் என் மக்களே!
இரங்க மனமில்லையோ
அனுபல்லவி
இந்து மா சமுத்ரம் தொடங்கி
இமய மலை வரைக்கும்- ஐயோ!
1
பஞ்சம் பசியுற்றோரைப் பார்க்கப்
பதறுதே என் உள்ளம்! – யாரும்
அஞ்சும் பாழ் கொள்ளை நோயின்வாளினால்
அறுப்புண்டவர் எத்தனை பேர்!
2
கண்மணிகளில் கணக்கற்ற பேர்கள்
கல்வி யாதும் அறியார்!-பலர்
விண்ணோளியற்று வீண்பக்தியினில்
வீழ்ந்து கிடக்கின்றாரே! – ஐயோ!
3
சாதி என்னும் பேயும் நுழைந்து
சகலரையும் கலைத்தான்! – அவன்
வாதினால் பல சாதிகள் எழ
வம்புகள் மிக வந்ததே! – ஐயோ!
4
ஏசு என்னும் உலக ரட்சகர்
எனக்காகவும் மரித்தார்! – பல
தேசம் அவரைப் பெற்றிருக்க, அந்த
நேசர் எனக்கு இல்லையோ? – ஐயோ!

34 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட “கிறிஸ்தவ அருட்கவிஞர்கள்” எனும் நூலில், இப்பாடல் கிறிஸ்தவ கீர்த்தனைகள் நூலில் சேர்க்கப்படாதப் பாடல் எனக் கூறும் தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் இப்பாடலின் அடியொற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “ அறுபதாண்டுகளுக்கு முன்பு இருந்த இழிநிலைகளும் கொடுமைகளும் எந்த அளவுக்கு மறைந்திருக்கின்றன, இன்று? பட்டினிக் கொடுமைகள் – கல்வியில்லாமை- மூடப் பழக்க வழக்கங்கள் – சாதி வெறி ஆகியவை புதுப் புது வடிவம் பெற்று மக்களை இன்றும் வதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் தாயின் புலம்பல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.”


சந்தியாகு ஐயர் அவர்கள் பல ஆங்கிலப் பாமாலைகளை அதன் பொருள் மாறாமல் நம் தேச மொழியிலும், இசையிலும் யாவரும் பொருளுணர்ந்துப் பாட வழி செய்தவர். “விந்தைக் கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை” என்ற பாடல் ஒரு உதாரணம்.

இதை வாசிக்கையில், கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கிருக்கும் பொறுப்பையும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும் இருப்பதை மறந்து “மற்ற” விசயங்களில் கவனம் செலுத்துதல் முறையாகாது என்று நான் உணர்கிறேன். நீங்கள்!



No comments: