Wednesday, October 31, 2018

சகோ. சாம் ஜெபத்துரை - மறைவும் மறவா நினைவுகளும்

நாம் வாழ்கிற காலத்தில் வாழ்ந்த தேவ மனிதர்களில் மறைந்த சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தில் இருந்து பல நல்ல பிரசங்கிகள் எழும்பியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவராலும் கர்த்தருக்காக எழுதுவதில் பிரகாசிக்க முடியவில்லை.

கர்த்தரின் எழுத்தாணி என அவரைப் பற்றி சொல்வது  மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாசகம் என்றாலும், கர்த்தருக்காக எழுதுவதில் ஒய்வறியாதவர். உருப்படியாக, பக்திவிருத்திக்கேதுவாக தொடர்ந்து எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்பது உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ந்தேர்ச்சியான உழைப்பும் வாசிப்பும் இல்லையேல் தொடர்ந்து எழுதுவது மிகவும் சிரமம். சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் அனேக நற்காரியங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு ஒரு அரும்பெரும் பங்காற்றியிருக்கிறார் என்பது கொஞ்சமும் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை.

ஒரு நற்செய்தியாளராக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து அனேக வாலிபர்களை கிறிஸ்துவுக்காக எழுப்பி இருக்கிறார். சுவிசேஷகர்களாக கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்பும் எவரும், இவரின் ஜெபம் மற்றும் வைராக்கியம் ஆகியவற்றை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மலையில் தினந்தோறும் சென்று இராமுழுதும் ஜெபிக்கிற வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். நண்பர்களே! ஜெபிக்கிறவர்கள் என்றைக்குமே தேவனால் பயன்படுத்தப்படாமல் போவதில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

இவர் தன்னை ஒரு எழுத்தாளராகவோ, நற்செய்தியாளராகவோ சுருக்கிக் கொள்ளாமல், எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை தயங்காது செய்தார். ஒரு காலத்தில் இவரின் பாடல் கேசட்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. நல்ல மலையாளப் பாடல்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததுடன், இவரே நல்ல பாடல்களை எழுதவும் செய்தார். வேளை வந்த போது, தன் பயணங்களைக் குறைத்துக் கொண்டு சபை ஊழியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பொதுவாக ஒருவரின் மறைவின் போது, அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையே சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். என்னளவில் சில் விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது உண்மைதான். மணிபர்சில் அபிசேகம் போன்ற சில காரியங்களைச் சொல்வதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. இவர் தவறே செய்யாதவர் என்றும் நான் சொல்ல வில்லை. ஆனால் தவறே செய்யாதவர் எவர்தான் உண்டு. அவைகளின் மத்தியிலும் இவர்  மீண்டும் எழுந்து தேவனுக்காக இறுதி வரை ஓடியமைக்காக தேவனை துதிக்கிறேன். இவர் உண்டாக்கிய நல்ல விளைவுகள் மற்றும் எண்ண மாற்றங்களுக்காக தேவனை நன்றியோடு நினைக்கிறேன். கடைசியாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று ஆராதனை துவங்குவதற்கு சற்று முன்பு இவருடைய மனைவி மரித்து விட்டார்கள். அன்று ஞாயிறு ஆராதனைக்கு எந்த பங்கமும் வரக் கூடாதென, அவர் ஆராதனைக்கு முன்னரோ அல்லது ஆராதனை வேளையிலோ சொல்லாமல், அன்றும் வழக்கம் போல கர்த்தருடைய செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்து ஆராதனை முடிந்த பின் அனைவரையும் அமரச் செய்து, கண்ணீருடன் தன் மனைவியின் மறைவைச் சொல்லி இருக்கிறார். இது அவருடைய சபையில் ஊழியம் செய்கிற என் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி. அவர் மறைந்தாலும், அவர் ஆரம்பித்த ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை மற்றும் ஜெபமாக இருக்கும். அதுதான் நமது விருப்பமும் கூட!
தேவனுடைய சமூக இளைப்பாறுதலில் பிரவேசித்திருக்கும் அருமை சகோதரன் சாம் ஜெபத்துரை அவர்களுக்காக தேவனை துதிக்கிறேன்!

Arputharaj
Bangalore
+91 9538328573

Saturday, September 1, 2018

ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

ஞானஸ்நானம் என்றால் என்ன?
ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.

இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது.
(source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0 )
(இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:http://en.wikipedia.org/wiki/Baptism

ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரியங்கள் எவை?

ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?

1.தேவ நீதியை நிறைவேற்ற

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)

2.இரட்சிக்கப்ப
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)

3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)

4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)

5.பரலோகத்திற்குப் போக
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)

6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)

7.கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)

8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)

9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)

10. நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை
ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)

மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பரமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.

நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?


Also posted in:http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0

Wednesday, August 22, 2018

நல்ல மேய்ப்பன் சொன்ன நல்ல சமாரியன் கதை

ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமைகள் அனைத்தையும் கவிதை நடையில் எழுத வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள, அதன் முதல் முயற்சியாக நல்ல சமாரியன் கதையை கவிதையாக படைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நல்ல மேய்ப்பன் சொன்ன நல்ல சமாரியன் கதை

திருடர்கள் குறித்த பயம் இன்றி
பயணம் செய்தவன் ஒருவன்
குற்றுயிரும் குலையுயிருமாக
மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல்
அடிபட்டு, அனைத்தையும் இழந்து
அலங்கோலமாய் வழியருகே வீழ்ந்த
உதவி செய்வார் யாரென ஏங்கி
வழிமேல் விழிவைத்தான்

அவசரமாய் ஒரு மனிதன்
அருகில் வந்து பார்த்தான்
ஐயோ பூசைக்கு நேரமாகிவிட்டதேயென
ஓசையின்றி அவ்விடமிட்டகன்றான்
ஆசாரியன் எனும் பூசாரி அவனை தடுத்தது
ஆசாரமோ - யாருக்குத் தெரியும்!

அடுத்து வந்தவன் அங்கி தரித்தவன்
அருகில் கூட வராமல்  கொஞ்சமும் இரக்கமின்றி
அப்படியே வழியை விட்டு விலகிப் போனான்
முன்னவர்க்கு இல்லாத அக்கறை எனக்கெதுக்கு என
முன்பை விட வேகமாய் நடந்து, முந்த முயன்றான்
பண்பிலான் அன்பிலான்  என்ற லேவியன்

ஒதுக்கப்பட்டவன் ஒருவன் வழியில்
ஓரமாய் விழுந்து கிடந்தவனைப் பார்த்ததும்
இறங்கி அவன் அருகே சென்று பதைபதைத்து
ஐயோ என்றிரங்கி காயம் கட்டி மருந்து வைத்து
நொடியும் தாமதியாமல் வாகனத்திலேற்றி
பத்திரமாய் பார்த்துக்கொள்ளவே
சத்திரம் சென்று சேர்த்தான் சீக்கிரமாய்
பையில் இருப்பதை எல்லாம் எடுத்து
கையில் கொடுத்து, இது போதாதெனில் – அடுத்து
வருகையில் இன்னமும் தரத் தயார்
இவனை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்வாயாயென
அடிபட்டவனை சத்திரத் தலைவனிடம் விட்டுச் சென்றவன்
தன்னலமற்ற அன்புடன் மாபெரும் சேவை செய்தவன்
சமாரியன் – அவனுக்குத் தெரிந்தது வலி மாற்றும் வழி

நித்திய வாழ்க்கைக்கு வழி கேட்ட
நியாய சாஸ்திரிக்கு வழிகாட்ட
இயேசு சொன்ன கதையிதின் செய்தி
இறைவனை நேசிப்பது என்பது கோவிலில் மட்டுமல்ல
மற்ற(எ)வரையும் உன்னை நேசிப்பது போல நேசி
இதுவே இறைவன் காட்டிய வழி
இதுவே இறைவனைக் காட்டும் வழி
இதுவே திருமறையின் திவ்யவாசகம்
                                                          -    Arputharaj
                                                              9538318573
                                                          

Wednesday, July 25, 2018

ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்

ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்

ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்

ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.

- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை

Monday, July 23, 2018

கீர்த்தனைப் பாடல்களின் காலம் முடிந்து விட்டதா? – ஒரு சிறிய அலசல்

Old Tamil Christians Keerthanai songs - Outdated or Outstanding!

தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே, சிலருக்கு அர்த்தம் புரியாத அவைகளை ஏன் பாட வேண்டும் என ஒதுக்கி விடுகின்றனர்.  தூய தமிழில் தன் பெயர் இருக்குமாறு மாற்றிக் கொண்டு, சிரிப்புக் காட்டிக் கொண்டு இருக்கும் சில பிரபலங்கள் கூட செந்தமிழ் கீர்த்தனைகளுக்கு எதிராக எதையாவது சொல்லி வைத்து, அனேகர் அதுவும் உண்மைதானோ என்று நம்பும்படி செய்து விடுகின்றனர். Old is Gold  என்று சொல்வார்கள். இது தமிழ் கிறிஸ்தவ சபைகளில், குறிப்பாக பாடல்களைப் பொறுத்தவரையில் அப்படி சொல்ல முடியுமா என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலில் இருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

அதென்ன அந்தர… சுந்தர?
சில நாட்களுக்கு முன் ஒரு தம்பியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, கீர்த்தனைப் பாடல்கள் பற்றி பேச்சு திரும்பியது. அர்த்தம் புரியாத கீர்த்தனைப் பாடல்களை, இப்போது எப்படி பாடுவது என்று அந்த தம்பி வாதாடினார். அர்த்தம் புரியாத ஒரு பாடலைச் சொல்லுங்கள் நாம் என்ன வென்று பார்ப்போம் என்றதற்கு, உடனே அவர் சொன்னது தான் இந்த பத்தியின் தலைப்பு. அந்தர சுந்தர மந்தர என்றால் என்ன?, யாருக்காவது புரியுமா என்று கேட்டார். நான் இந்த பாடலின் துவக்கம் தெரியுமா என்று கேட்ட போது, உடனே தெரியாமல் தடுமாறினாலும், சுதாரித்துக் கொண்டு, “ஏசுவையே துதி செய்” என்று என்னுடன் சேர்ந்து பாடத் துவங்கினார்.
உடனே கீர்த்தனைப் புத்தகத்தை தேடி எடுத்து அந்த குறிப்பிட்ட பத்தியின் வரிகளை அவருக்கு வாசித்துக் காண்பித்தேன்.

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன் – ஏசுவையே துதி செய்

இந்தப் பாடல் வரிகளை கொஞ்சம் நிதானமாக, வாசித்தால் எளிதில் பொருள் கொள்ளலாம் என்று சொல்லியும் அவர் நம்ப வில்லை. அந்தர வான் தரையும் தரு தந்தன் சுந்தரம் மிகுந்த சௌந்தர்ய அனந்தன் என்று சொல்லியும் தம்பிக்கு பிடிபடவில்லை. நான் எனக்குத் தெரிந்த தமிழில் பின்வருமாறு மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று.

அந்தரம் என்றால் மேலே இருக்கிற என்றும், வான் என்றால் வானம் என்றும்,  தரு தந்தன் என்றால் நன்மைகளைத் தருகிறவன் என்றும் சொல்லி, மேலே உள்ள வானத்திலும், பூமியிலும் உள்ள நன்மைகளைத் தருகிறவர் என்று பொருள் சொன்னேன்.
இரண்டாவது வரி மிகவும் எளிமையானது, சுந்தரம் மிகுந்த என்றால், அழகு நிறைந்த, முடிவிலா சௌந்தரியமுடைய இறைவன் என்பது அதன் பொருள் என்றேன். இந்தப் பாடல் எவ்வளவு பொருள் நிறைந்தது என்பதைச் சொல்லி, இந்தப் பாடல் பிறந்த கதையை அவருக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரசவைக் கவிஞராக இருந்த போது, அரசர் அவர்கள் தன் கடவுளைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அது அரசக் கட்டளையானது. மிகுந்த குழப்பத்துடன் வீடு வந்த சாஸ்திரியார் அவர்கள், தீர்க்கமாக அரசரிடம் அவருடைய வேளை வந்த போது, என்னால் இதைத் தான் பாட முடியும் எனக் கூறி, “ஏசுவையே துதி செய்” பாடலைப் பாடினார் என்பது வரலாறு. இதைப் பற்றி முன்னமே பாடல் பிறந்த கதை தொடரில் எழுதி இருக்கிறேன்.

இன்று எத்தனை கிறிஸ்தவர்கள், போதகர்கள் தாங்கள் சொல்கிற வார்த்தையின் அர்த்தம் புரிந்து அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அல்லேலூயா என்பதன் முழுமையான அர்த்தம் தெரியாமல் மூச்சுக்கு முன்னூறு தடவை எப்போதெல்லாம் இடைவெளி தேவையோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்துகிற போதகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் எனக் கேட்டேன். ஒரு பாடலைப் பற்றி யாராவது ஒருவர் சொன்னார் என்பதற்காக அப்படியே அதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.

“ஏசுவையே துதி செய்” பாடல் ஒரு உதாரணம் மட்டுமே. அக்காலத்திலும், இக்காலத்திலும் ஏன் எக்காலத்திலும் இறைவன் அருளும் பாடல்கள் அனைத்திற்கும் பின் ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிய, முன்பெல்லாம் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில் கடினமான வார்த்தைகளின் பொருள் இன்னவென்று கீழே போட்டிருப்பார்கள். அது போக அனேக கீர்த்தனைப் பாடல்களில் உள்ள வார்த்தைகள் அன்று பயன்பாட்டில் இருந்தவையும் கூட. தமிழ்நாட்டில் தமிழில் தான் மாணவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் காலகட்டத்தில், இனிமேல் இது போன்ற கருத்துச் செறிவுள்ள பாடல்களின் கடினமான வார்த்தைகளை பொருளுடன் அச்சிட்டால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். ஒரேயடியாக ஒரு பாடலை ஒதுக்கிவிடாமல், அதன் பொருளை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்கலாம் அல்லவா.

இன்று பல பாரம்பரிய சபைகளிலும் இந்த நிலைதான் காணப்படுகிறது. சபையின், பாடல்களின் வரலாறு தெரியாமல், பக்தியில்லாமல் பாடல்கள் பாடப்படும்போது அது மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தாது. அனேக பெந்தெகோஸ்தே சபைகளில் புதிதாக எதாவது பாடல் அறிமுகம் செய்து மக்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பல நல்ல பழைய பாடல்களை அப்படியே ஓரமாக பரணில் தூக்கி வைத்து விட்டனர். முறையான உபதேசம் என்பது இன்று சபைகளில் காண்பதரிதாக இருப்பது உள்ளபடியே வருத்தமே. நிற்க. கட்டுரையின் நோக்கத்தை விட்டு நான் வழிவிலக வில்லை.

பழைய பாடல்களை மட்டுமே பாடவேண்டும் என்று சொன்னால் அது கண்டிப்பாக தவறு. அது போலவே, புதிய பாடல்கள் விஷயத்திலும். நாம் நல்ல பழைய கீர்த்தனைப் பாடல்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவர்கள் இசையில் மட்டுமல்ல, தேவனை அறிகிற அறிவிலும் வளர்வர். வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள், கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படுபவர்களின் சமகாலத்தவர். அன்றும் இசை உலகில் அவருக்கான இடம் முறையே கொடுக்கப்படவில்லை. இன்று கிறிஸ்தவர்கள் அவர் பற்றி அறிந்திருப்பதே அரிது என்றாகிவிட்டது. ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என நாம்  சொல்லலாகாது. இப்படிச் சொல்லிதான் சிலர் மூல உபதேசத்தையே விட்டு விலகிச் சென்று விட்டனர்.  புதிய பாடல்களில் இருக்கும் எளிமையை வரவேற்க வேண்டும், அதே சமயத்தில் பழைய பாட்ல்களில் இருக்கும் கருத்தாழமிக்க வேத சத்தியங்களை மறந்துவிடாமல், அதை பாடி நினைவுபடுத்திக் கொள்வது என்றுமே பயன் தரும். அனேக கீர்த்தனைப் பாடல்கள் எழுதப்பட்ட சூழ்நிலைகளை வாசித்தால், மிகவும் பிரமிப்பாகவும், தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் நாம் அனேக நல்ல விஷயங்களை, இக்காலத்திற்கு உதவாது என ஒதுக்கிவைத்ததினால் இழந்துவிட்டோம். வசனத்திற்கு முரண்படாத எதுவும் வழக்கொழிந்து போவதில்லை. தேவனை மகிமைப்படுத்துகிற எதுவும் அதன் அழகை இழந்துவிடுவதுமில்லை.  நல்ல புதிய பாடல்களை கைதட்டி வரவேற்கிற நாம், இசையிலும், பொருளிலும் மிகவும் குறிப்பிடத்தகுந்த  கீர்த்தனைப் பாடல்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, அதன் மேன்மை இன்னதென்று உணர்ந்து, காலங்களைக் கடந்தும் அதன் outstanding quality ஐ நினைத்து இறைவனுக்கு நாம் நன்றி சொல்லி அவரை துதிப்போம்.

ஏசு
வையே துதிசெய்  நீ மனமே
ஏசு
வையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

மாசணுகாத பராபர வஸ்து
,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன்

எண்ணின காரியம் யாவு முகிக்க

மண்னிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க