வாசிக்க: யோசுவா 23, 24; சங்கீதம் 105; லூக்கா 9: 1-36
வேதவசனம்: யோசுவா 24: 15. கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்...நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
கவனித்தல்: பல தேவ மனிதர்களின் கடைசி வார்த்தைகளைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்கிறது. யோசுவா 24ல், இஸ்ரவேலர்களுடன் யோசுவா பேசின கடைசி வார்த்தைகளை நாம் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் செய்தவைகளைப் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறியபின்பு, ஜனங்கள் கர்த்தரைச் சேவிக்கும்படி யோசுவா அவர்களுக்குச் சவால் விடுத்தார். அந்த நேரத்தில், தேவன் அவர்களுக்காக யுத்தம் பண்ணி வெற்றி பெற்று கொடுத்த வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேலர்கள் வசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எந்த போர்களுக்கும் இனி செல்லத் தேவை இல்லை. அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட தேசத்தின் அறுவடையைப் பெற்று அனுபவிக்கலாம். வாக்குத்தத்த தேசமானது மிகவும் வளமான ஒரு நாடாக இருந்தது. கர்த்தர் சொன்னது போல, அது “பாலும் தேனும் ஓடுகிற” ஒரு தேசமாக இருந்தது. அதன் பின்பு, இஸ்ரவேலர்களுக்குத் தேவையானதெல்லாம் அங்கு கிடைக்கும். ஜனங்கள் செழிப்பாக வாழும்போது, அவர்கள் தேவனை விட்டு விலகிவிடக் கூடும் என யோசுவா அஞ்சியிருக்கக் கூடும். கர்த்தரைச் சேவிக்க வேண்டுமென அறைகூவல் விடுகையில், யோசுவா தன் குடும்பத்துடனே கூட சேர்ந்து கர்த்தரைச்ச் சேவிப்பதற்கான தன் அர்ப்பணிப்பை மறுபடியும் உறுதிப்படுத்தினார். "நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன்" (வ.18) என்று கூறி ஜனங்கள் அவனுக்குப் பதில் சொன்னபோது, அதைக் கேட்டு உடனே அவர்களைப் போக யோசுவா அனுமதிக்கவிலை. மாறாக, தேவன் யார் என்பதை அவர்களுக்கு அவன் நினைவுபடுத்தினான். இப்படியாக தேவனைச் சேவிப்பதற்கான அவர்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்ள யோசுவா அவர்களை நடத்தினார். ஏனெனில், இஸ்ரவேலர்கள் வாக்குத்தத்த பூமியை சுதந்தரித்தது என்பது தேவனுடைய செயல் ஆகும். யோசுவாவைப் பொறுத்தவரையில், இஸ்ரவேலர்கள் யாரைச் சேவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானம் உடையவர்களாக இருக்க வேண்டும். நாமும் கூட தேவனைச் சேவிக்க இதே போன்ற ஒரு அர்ப்பணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பயன்பாடு: பொதுவாக, தங்களுக்கு தேவை உள்ள நேரங்களில் தீவிரமாக தேவனைத் தேடுவதைப் போல, எல்லா நேரங்களிலும் ஜனங்கள் தேவனைத் தேடுவதில்லை. எனக்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கும் நேரங்களிலும் கூட நான் தேவனை நினைத்துப் பார்க்க வேண்டும். நான் கர்த்தரை உண்மையுடன் எல்லா நேரங்களிலும் சேவிக்க வேண்டும். இந்த பூமியில் எனக்கு இருக்கக் கூடிய எல்லா ஆசீர்வாதங்களைக் காட்டிலும், என் தேவனே மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறார். ஆகவே, நான் கர்த்தரையே சேவிப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் வாழ்வில் இருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. எல்லா நேரங்களிலும் என்னை வழிநடத்த நீர் போதுமானவராக இருக்கிறீர். ஆசீர்வாதங்கள் மீது அல்லது மனிதர்கள் மீது என் கண்களை வைக்காமல், உம் மீது கண்ணோக்கமாயிருந்து உம்மைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு உதவும். தேவனே, நாம் உம்மையே சேவிக்க விரும்புகிறேன். எப்பொழுதும் உமக்குக் கீழ்ப்படிகிற உண்மையுள்ள ஒரு ஊழியராக உம்மைச் சேவிக்க எனக்கு உதவும். ஆமென்.
+91 9538328573
No comments:
Post a Comment