வாசிக்க: நியாயாதிபதிகள் 7,8; சங்கீதம் 109; லூக்கா 11: 1-28
வேதவசனம்: லூக்கா 11: 1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
கவனித்தல்: இயேசுவின் வாழ்வில் ஜெபமானது பிரிக்க முடியாததாக இருந்தது. ஒரு முறையான ஜெபவாழ்க்கையை உடையவராக இயேசு இருந்தார். இயேசுவின் சுருக்கமான ஜெபங்களையும் (உதாரணமாக, யோவான் 11:41, 42), முழு இரவும் அல்லது தனிமையில் நீண்ட நேரம் ஜெபித்த நேரங்களைப் பற்றியும் நற்செய்தி நூல் நமக்குச் சொல்கிறது (மத்தேயு. 14:23; மாற்கு.1:35; லூக்கா 5:16, 6:12). தன் மலைப் பிரசங்கத்தில், எப்படி ஜெபிக்க வேண்டும், எப்படி ஜெபிக்கக் கூடாது என ஜெபம் பற்றி இயேசு போதித்தார் (மத்.6:5-15). இயேசுவின் ஜெப வாழ்க்கை அவருடைய சீடர்களின் வாழ்க்கையையும் பாதித்தது. அதில் ஒன்றைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம். இயேசு தன் ஜெபத்தை முடிக்க அவர்கள் எவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இயேசுவுக்காகக் காத்திருந்த போது, இயேசு எப்படி ஜெபித்தார் என்பதைப் பார்த்திருப்பார்கள். தாங்களும் இயேசுவைப் போல ஜெபிக்க வேண்டும் என விரும்பி இருந்திருப்பார்கள். ஆகவே, சீடர்களில் ஒருவன், “ஜெபம்பண்ண...எங்களுக்குப் போதிக்கவேண்டும்” என்று கேட்டான். இங்கே உள்ள வேண்டுகோளைக் கவனியுங்கள்: தனக்கு தேவைப்படும் தருணங்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, இயேசு தனக்கு ஒரு ஜெபத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவன் கேட்கவில்லை. மாறாக, ஜெபம் பண்ணக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான், ஒரு ஜெபத்தை அல்ல.
ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுவது எப்படி அல்லது நீண்ட நேரம் ஜெபிப்பது எப்படி என இயேசு போதித்திருப்பார் என ஒருவர் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் இயேசுவோ ஒரு சிறிய ஜெபத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த மாதிரி ஜெபமானது ஜெபம் பண்ணுவதற்கான வரைபடத்தைத் தருகிறது. அதன் பின்பு, அடுத்த ஒன்பது வசனங்களில் (லூக்கா 11:5-13), இயேசு கற்பித்த ஜெபத்தின் முதல் வார்த்தை அல்லது சொற்றொடரான “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதா” பற்றி, பிதாவானவர் எவ்வளவு நல்லவர் என்றும், அவருடைய ஆவிக்குரிய ஈவுகளைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். இந்த வேதபகுதியானது, இடைவிடாமல் ஊக்கமாக ஜெபிப்பதற்கும் நம்மை உற்சாகப்படுத்துவதாக, வலியுறுத்துவதாக இருக்கிறது.
பயன்பாடு: இயேசுவின் ஜெப வாழ்க்கையானது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்ல முன்மாதிரி ஆகும். அவருடைய வாழ்வின் பரபரப்பான தன்மையானது (மிகுந்த அலுவல்கள்) ஜெபம் பண்ணுவதற்கு அவரை தடை செய்ய வில்லை. நீண்ட நேரம் ஜெபிப்பது எப்படி என்று அவர் தம் சீடர்களுக்கு போதிக்கவில்லை. ஆனால், தன் ஜெப வாழ்க்கை மூலம் அதை வாழ்ந்து காட்டினார். இயேசுவின் சீடனாக, அவரைப் போல நான் ஜெபிக்க விரும்புகிறேன். என் ஜெபத்தில், பிதாவாகிய தேவன் மற்றும் அவர் அருளும் ஆவிக்குரிய ஈவுகள் என் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, எந்த உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களும் அல்ல. ஏனெனில் எனக்கு என்ன தேவை என்பதை நான் கேட்பதற்கு முன்னமே அவர் அறிந்திருக்கிறார். ஜெபம் என்பது நமக்குத் தேவையான உலகப் பிரகாரமான காரியங்களைக் கேட்பது அல்ல, அது தேவனுடன் நேரம் செலவிடுவது ஆகும். அப்படி இருக்குமெனில், நேரம் ஒரு பொருட்டாக இருக்காது.
ஜெபம்: இயேசுவே, உம் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் மூலமாக ஜெபம் பண்ணக் கற்றுக் கொடுப்பதற்காக உமக்கு நன்றி. ஜெபம் பண்ண நேரம் கண்டுபிடிப்பதற்கு சாக்குபோக்குகளைச் சொல்வதற்குப் பதிலாக, அனுதின ஜெப வாழ்க்கையை உடைய ஒரு கிறிஸ்தவராக இருக்க உம்மைப் பின்பற்ற எனக்கு உதவும். உம் பரிசுத்த ஆவியானவர்தாமே, அனுதினமும் நான் ஜெபம் பண்ண என்னைப் பெலப்படுத்துவாராக. ஆமென்.
+91 9538328573
No comments:
Post a Comment