வாசிக்க: 1 சாமுவேல் 5, 6; சங்கீதம் 119: 89-176 ; லூக்கா 16: 19-31
வேதவசனம்: சங்கீதம் 119: 97. உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்....103. உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
கவனித்தல்: தியானம் செய்தல் என்பது பல மதங்களில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. பலவித உத்திகளைப் பயன்படுத்துகிற பல்வேறு விதமான தியானங்கள் இருக்கின்றன. ஆயினும், கிறிஸ்தவ தியானம் என்பது மற்ற வகை தியானங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது ஆகும். மற்றவர்கள் (கிறிஸ்தவரல்லாதோர்) ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது தங்கள் செயல்பாடுகள் மீது தங்கள் கவனத்தை தியானம் செய்யும் போது ஒருமுகப்படுத்துகையில், கிறிஸ்தவ தியானத்தில் நாம் தேவனையும் அவருடைய வார்த்தையையும் பற்றி யோசித்து, தியானிக்கிறோம். சங்கீதம் 119:97-104 ல், சங்கீதக்காரன் தன் தியான அனுபவத்தையும், அதில் இருந்து தான் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் பகிர்ந்து கொள்கிறார். தேவனுடைய வார்த்தை மீதான தம் அன்பை அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள்! அவர் நாள் முழுதும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று நாம் நினைக்கக் கூடும். அவர் அப்படிச் செய்யக் காரணம் என்னவெனில், தேனினும் இனிமையான தேவனுடைய வார்த்தையின் இனிமையை அவர் ருசித்து பார்த்ததுதான்.
சங்கீதக்காரன் தேவனுடைய வார்த்தையை வெறுமனே வாசிக்க மட்டும் செய்யவில்லை. மாறாக, உண்மையான ஒரு அன்புடன் அவர் அதை தியானிக்கவும் செய்கிறார். தேவனுடைய வார்த்தையைத் தியானம் செய்தது சங்கீதக்காரன் ஞானம், அறிவு, புரிதல் மற்றும் தீய வழியில் இருந்து பாதுகாப்பு ஆகிய பல பலன்களை அவருக்குக் பெற்றுக் கொடுத்தது. அவர் தன் எதிரிகள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர்களைக் காட்டிலும் சிறந்த ஒரு மனிதராக அவர் மாறினார். கிறிஸ்தவ தியானம் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்வது எவ்வளவு மகத்துவமானது! தேவனுடைய வார்த்தையை வாசிப்பதும் அறிந்து கொள்வதும் எப்பொழுதுமே நல்லது. ஆயினும், தேவனுடைய வார்த்தையை தியானம் செய்வது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் நமக்குத் தரும்.
பயன்பாடு: என் வாழ்க்கைக்கான அனேக ஆசீர்வாதங்கள் தேவனுடைய வார்த்தையில் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தையை மதித்து அதற்கு ஒரு உயரிய ஸ்தானத்தை நான் கொடுக்கும்போது, அதை அனுதினமும் வாசிப்பதற்கு என் நேரத்தையும் நான் கொடுக்க வேண்டும். அலுவல்கள் நிறைந்த என் வாழ்க்கை நான் வேதாகமம் வாசிக்காமல் இருப்பதற்கு ஒரு சாக்குப்போக்காக இருக்கக் கூடாது. நான் தேவனுடைய வார்த்தையை தியானம் செய்யும்போது, இந்த உலகத்தில் ஒரு நல்ல மனிதனாக மாற ஞானத்தின் அனைத்து ஐசுவரியங்களையும் நான் பெற்றுக்கொள்கிறேன். நான் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன். ஆகவே அதை அனுதினமும் தியானம் செய்வேன்.
ஜெபம்: பிதாவே, என் கரங்களில் இருக்கிற வேதாகமத்திற்காக நன்றி. தேவனே, உம் வார்த்தைகளை நான் தியானிப்பது உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. அனுதினமும் நான் வேதத்தை வாசிக்கும்போது, நீர் நல்லவர் என்பதை நான் ருசித்துப் பார்க்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment