வாசிக்க: நியாயாதிபதிகள் 15, 16; சங்கீதம் 113; லூக்கா 13: 1-17
வேதவசனம்: நியாயாதிபதிகள் 16: 20. அப்பொழுது அவள் (தெலீலாள்): சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
21. பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
கவனித்தல்: சிம்சோனின் வீழ்ச்சியைப் பற்றிச் சொல்லும் சம்பவமானது நாம் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பரிசோதிக்கும்படி நம்மை எச்சரிக்கிற ஒன்றாக இருக்கிறது. சிம்சோனின் வாழ்க்கையில், நியாயாதிபதிகள் புத்தகத்தின் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றை நாம் காணலாம். அது என்னவெனில், தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லுதல் ஆகும். நாம் அறிந்திருக்கிறபடி, சிம்சோனின் கதை அற்புதமான ஒரு துவக்கத்தை உடையதாக இருந்தது. ஆயினும், அவன் தன் அழைப்பை மறந்து, தன் பாவ இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தவறான இடங்களில் தங்கினபோது, அவன் செயல்களின் விளைவாக அவனுக்கு மரண ஆபத்து வந்தது. அவன் தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அங்கே தொடர்ந்து தங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய எதிரிகள் அவனைப் பிடிப்பதற்கு மறைந்து பதுங்கி இருந்தனர்.
பெலிஸ்தியர்கள் அவனைப் பிடித்துக் கொள்ள வந்த போது, அதற்கு முன்பு வெற்றிபெற்றது போலவே இப்போதும் வெற்றி பெறுவேன் என்று அவன் சொன்னான். அவன் “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல்” இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்காக தான் முன்பு செய்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்திருக்கக் கூடும். கர்த்தர் தன்னுடனே இல்லை என்பதை அவன் உணர்ந்த தருணத்தில், தன்னைக் குறித்து மிகவும் மோசமாக உணர்ந்திருப்பார். அவன் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது. தன் வெறும் கைகளால் சிங்கத்தைக் கொன்று போட்ட ஒரு வலிமையான மனிதனாகிய சிம்சோன் மாவு அரைக்கும்படி அனுப்பப்பட்டான். ஆயினும், அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபித்தபோது, அவன் தன் வலிமையை திரும்பவும் பெற்றுக் கொண்டான். ஆனால் அதில் வாழமுடியாமல், இறந்து போனான்.
பயன்பாடு: மற்றவர்களால் செய்யமுடியாத ஒன்றைச் செய்வதற்கான தனித்துவமான திறமைகள் அல்லது தேவ அபிசேகம் எனக்கு இருக்கலாம். ஆயினும், நான் எனக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கைகளை மறந்து, நான் விரும்பும் எந்த நேரத்திலும் எளிதாக பாவத்தை வெற்றி பெற்றுவிடுவேன் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து தவறான இடங்களில் இருந்து கொண்டிருந்தால், கர்த்தர் என்னுடன் கூட இருக்க மாட்டார். சிம்சோனின் கதையைப் படிக்கும்போது, அவனுக்கு ஏன் அவ்வாறு ஆனது என்பதை நான் அறிந்து கொள்கிறேன். அவன் தேவனுடன் இருக்கவில்லை. தனக்கு நேர்ந்ததைப் பற்றி அறியாத மற்றொரு நபரைப் பற்றி வேதாகமத்தில் பார்க்கிறோம். அது மோசே ஆவார். தேவனுடனே கூட இருந்து பேசிய பின் சீனாய் மலையில் இருந்து மோசே கீழே இறங்கி வந்த போது, அவன் தன் முகம் பிரகாசமானதைப் பற்றி அறியாதிருந்தான். ஆனால் மற்றவர்கள் அதைக் கண்டார்கள் (யாத்.34:29,30). நான் இனிமேல் பாவம் செய்யாமல், தேவனுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். பாவத்தின் மடியில் படுத்து உறங்குவதற்குப் பதிலாக, என் தலையணையாக வைத்துக் கொள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எனக்கு உண்டு. இப்பொழுது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன்!
ஜெபம்: தேவனே, நீர் அனைத்தையும் அறிந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் செல்ல வேண்டிய வழியை நீர் அறிந்திருக்கிறீர். ”வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்லி வழிகாட்டுகிற உம் வார்த்தைகளுக்காக நன்றி. ஆண்டவரே, உம் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க எனக்கு உதவும். பரலோக தகப்பனே, உம் வழியில் நடக்க உம் பலத்தை எனக்குத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment