Thursday, April 29, 2021

பரிசுத்த வழியில் நடப்பதற்கான வழிகாட்டி

வாசிக்க:  1 சாமுவேல் 3, 4 ; சங்கீதம் 119: 1-88 ; லூக்கா 16: 1-18

வேதவசனம்: சங்கீதம் 119: 9. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
10. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
11. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

கவனித்தல்: ஒருவரின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிற ஒரு தியான ஜெபமாக சங்கீதம் 119 இருக்கிறது. வாலிபருடைய பரிசுத்தத்தைப் பற்றி வேதாகமம் ஏன் பேசுகிறது? இதன் பொருள் வயதான ஒரு நபர் பரிபூரணர் என்றும், அவருக்கு இப்படிப்பட்ட பரிசுத்தம் தேவை இல்லை என்பதா? இல்லை.  “ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது”  என்று ஒரு பழமொழி சொல்கிறது. வயதான ஒருவரை திருத்திச் சரிசெய்வதைக் காட்டிலும் இளைய வயதுடைய ஒருவரை சரிசெய்வது எளிது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். "பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்" என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. தேவனுடைய வார்த்தை தரும் ஆவிக்குரிய ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவது ஒரு இளைஞர் பரிசுத்தப் பாதையில் நிலைத்திருக்க முக்கியமானது ஆகும். சங்கீதக்காரன் தன் ஜெபத்தில் (வ.10, 11) இது தனக்கும் இதை வாசிக்கிற அனைவருக்கும் பொருந்தக் கூடியது என குறிப்பால் உணர்த்துகிறார். 

நம்மைப் பரிசுத்தமாக காத்துக் கொள்ள இரண்டு முக்கியமான அறிவுரைகளை நாம் இங்கு காண்கிறோம். அரை மனதுடன் செய்கிற செயலானது விரும்பிய பலனைத் தராது. சில நேரங்களில் நம் வசதிக்கேற்ப அல்லது  நாம் விரும்பியபடி,  தேவனை நாம் தேடுகிறோம். சங்கீதக்காரன் சொல்வது போல, நாம் முழு இருதயத்தோடும் தேவனைத் தேட வேண்டும். மேலும், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வதிலிருந்து தன்னைத் தடுத்துக் காப்பாற்றிம் செயல் பற்றி அவர் சொல்கிறார். அவர் தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் வைத்து வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தன் இருதயத்தில் அவர் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சேமித்து வைத்தார். ஒரு நபரில் இருதயத்திற்குள் பொக்கிஷமாக சேர்த்து வைக்கப்படும் தேவனுடைய வார்த்தையானது அவர் எப்பொழுதெல்லாம் தேவனுக்கி விரோதமாக பாவம் செய்யச் செல்கிறாரோ, அப்பொழுதெல்லாம் அவரைத் தடுத்து திருத்தும்

பயன்பாடு: பாவச் சோதனைகள், அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், மற்றும் சிற்றின்ப ஆசைகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு. இக்கால உலகில், நவீன மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் தொழில்நுட்பங்களினால் முன்பை விட பாவமானது நமக்கு மிக அருகில் இருக்கிறது. ஆயினும்,  நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு என் இருதயத்தில் இருக்கும் தேவனுடைய வார்த்தையானது அதை விட மிக நெருக்கமானதாக இருக்கிறது. அசுத்தமானவைகளுக்கு அனேக வழிகள் இருக்கின்றன. ஒருவரின் சுய ஒழுக்கம் கூட நீண்டநாட்கள் நிலைத்து நிற்காது. ஆனால் தேவனுடைய வார்த்தையானது அதன் வேலையைச் செய்ய ஒருபோதும் தவறியது இல்லை. ஒருவரின் வயது, இனம், நிறம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அவர் தேவனுடைய வார்த்தையின் உதவியுடன் பரிசுத்தப் பாதையில் நடந்து செல்ல முடியும். இதைப் பெறுவதற்கு நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், முழு இருதயத்தோடு நான் தேவனைத் தேடி, அவருடைய வாக்குத்தத்தங்களை என் இருதயத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பரிசுத்தப் பாதையில் நடப்பதற்கான இந்த வழிகாட்டிக்காக உமக்கு நன்றி. இதை நான் எப்பொழுதும் நினைவில் கொள்ளவும், இன்று நான் அதன் படி வாழவும் எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: