வாசிக்க: நியாயாதிபதிகள் 5,6; சங்கீதம் 108; லூக்கா 10: 25-42
வேதவசனம்: லூக்கா 10: 29. அவன் (நியாயசாஸ்திரி) தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
இந்தச் சூழ்நிலையில், நல்ல சமாரியன் உவமை மூலமாக, “யார் பிறன் ஆக இருக்கக் கூடும்?” என்பதை அந்த நியாயசாஸ்திரிக்கு இயேசு எளிய மற்றும் வலிமையான விதத்தில் புரிந்து கொள்ள உதவினார். கள்ளர் கைகளில் அகப்பட்டு அடிபட்டுக் கிடந்த அந்த மனிதன், எருசலேமில் இருந்து எரிகோவுக்குப் போகிறவனாக இருந்த படியால், ஒரு யூதனாக இருந்திருக்க வேண்டும். ஆயினும், யூதர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருந்த ஆசாரியனும் லேவியனும் அவனுக்கு உதவ மனதில்லாது போனார்கள். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் கண்டும் காணாதவர்களாக, “பக்கமாய் விலகிப்” போனார்கள். ஆனால், ஒரு சமாரியன் - யூதர்களால் வெறுக்கப்பட்ட, இழிவாகக் கருதப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவன் - அந்த காயப்பட்ட மனிதன் மேல் மனதுருகி, இரக்கம் பாராட்டினான். அவனுடைய அன்பின் செயலானது அந்நாட்களில் இருந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கடந்ததாக இருந்தது. நியாயாச சாஸ்திரிக்கு தன் கேள்வியின் பதிலைப் புரிந்து கொள்ள உதவிய ஒரு தெளிவான செய்தியை இயேசு சொன்னார்.
இங்கு முக்கியமாக சொல்லப்படுகிற விசயம் என்னவெனில், “யார் நம் பிறன் ஆக இருக்கக் கூடும்?” என்பதைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, நாம் அந்த நல்ல சமாரியனைப் போல, நம் அயலாருக்கு (அ) பிறருக்கு அன்பைக் காட்ட வேண்டும் என்பதாகும். நாம் நினைவில் கொள்ள வேண்டியது: இது நித்திய வாழ்வைச் சுதந்தரிக்க நாம் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்று ஆகும்.
பயன்பாடு: ஆண்டவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற பல கிறிஸ்தவர்கள் உண்டு. ஆயினும், மற்றவர்களை நேசிப்பதில், உதவுவதில், அதே ஆர்வத்தை அவர்களில் பலர் காண்பிப்பதில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதெனும் உடையவர்களாக அவர்கள் இருக்கக் கூடும். அது என்னவாக இருந்தாலும் சரி, இயேசு நல்ல சமாரியனாக இருக்கிறார். நல்ல சமாரியன் கதையின் செய்தி என்னவெனில், தேவை உள்ளவர்களுக்கு நான் ஒரு நல்ல சமாரியனாக இருக்க வேண்டும் என்பதே. எந்தவொரு பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல், என்னை நான் நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். மதம், இனம், சாதி, பாலினம், மற்றும் நிறம் ஆகிய எதையும் பொருட்படுத்தாமல், அனைவரிடமும் நான் தேவ அன்பைக் காட்ட வேண்டும். என்னைத் தவிர, அனைவரும் எனக்கு பிறன் ஆவர்.
ஜெபம்: இயேசுவே, என் பிறன் யார் என்பதையும், நான் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள உதவுவதற்காக உமக்கு நன்றி. எனக்கு அயலாராக (அ) பிறராக இருப்பவர்களிடம் கிறிஸ்தவ அன்பைக் காண்பிக்க எனக்கு அருள் செய்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment