வாசிக்க: உபாகமம் 31, 32; சங்கீதம் 92, லூக்கா 2:25-52
வேதவசனம்: உபாகமம் 31: 6. நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
கவனித்தல்: உபாகமம் 31ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர்களை வழிநடத்தும்படி தனது இறுதி ஆலோசனையைக் கொடுத்த போது, ”பலங்கொண்டு திடமனதாயிரு” என்று சொற்றொடர் திரும்பத் திரும்ப வருவதை நாம் காண்கிறோம் (வ.7,8,23). வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அழைத்துச் செல்ல மோசே இருக்கப் போவதில்லை. தன் மரணம் சீக்கிரத்தில் நிகழும் என்பதை மோசே அறிந்திருந்தார். ஆனால், தம் ஜனங்களை எல்லாக் காலங்களிலும் வழிநடத்துவதற்கு தேவன் இருக்கிறார். தலைவர்கள் மாறும்போது, அல்லது தேவனுடைய ஜனங்கள் எதிரிகளிடம் இருந்து ஒரு அச்சுறுத்தலையோ அல்லது தாக்குதலையோ எதிர்கொள்ளும்போது, ”பலங்கொண்டு திடமனதாயிரு” என்று சொல்லி தேவன் தம் ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார். (யோசுவா.1, 1 நாளா.22:13, 2 நாளா. 32:7). தேவ பக்தியுள்ளவர்கள் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. ஏனெனில், நாம் இங்கு காண்கிறது போல, தேவன் தம் ஜனங்களுடன் எப்பொழுதும் வருகிறார். தேவன் தம் ஜனங்களை விட்டு ஒருபோதும் விலகுவதுமில்லை, அவர்களைக் கைவிடுவதுமில்லை. நம்மை எதிர்கொள்கிற சவால்கள் அல்லது ஆபத்துகள் என்னவாக இருந்தாலும், நாம் பயமின்றி நம்பிக்கையுடன் அவைகளை எதிர்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறபடியால், நாம் ”பலங்கொண்டு திடமனதாயிரு”க்க முடியும்.
பயன்பாடு: என் வாழ்வின் கடினமான தருணங்களை நான் எதிர்கொள்ளும் போது, என் வாழ்வில் நடைபெறுகிற மாற்றங்களைக் குறித்து நான் பயப்படும்போது, என் வாழ்வில் கடும் சவால்களைச் சந்திக்கும்போது, மற்றும் ஒரு புதிய இடத்திற்குள் நுழையும்போது அல்லது ஒரு புதிய காரியத்தைத் துவங்கும்போது, தேவன் என்னுடன் இருக்கிறார் என்பதையும் அவர் என்னைக் கைவிடவே மாட்டார் என்பதையும் நான் நினைவுகூர வேண்டும். எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட்டு பயப்படுவதற்குப் பதிலாக, தேவன் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து, பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும். என் பயங்களும் கவலைகளும் எனக்கு எவ்விதத்திலும் உதவியாயிருப்பதில்லை. அவை என் பலத்தையும் சமதானத்தையும் குலைத்துப் போடக் கூடும். தேவனோ என்னுடன் வருகிறார். அவரே என் பலம் மற்றும் தைரியத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, மாறும் இவ்வுலகில் மாறாத உம் அன்பிற்காக உமக்கு நன்றி. நான் ஒரு புதிய நாளில் அல்லது என் வாழ்வில் ஒரு புதிய கட்டத்தில் பிரவேசிக்கும்போது, நீர் என்னுடன் இருக்கிறீர் என்பதை நினைவுகூர எனக்கு உதவுங்கள். என் தேவனே, நான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் பலங்கொண்டு திடமனதாயிருக்கவும், என் வாழ்நாள் முழுதும் உம்முடன் நடக்கவும் தேவையான வலிமையை எனக்குத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment