வாசிக்க: ஆதியாகமம் 9, 10: சங்கீதம் 5; மத்தேயு 3:1-12
வேதவசனம்: சங்கீதம் 5: 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8. கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
கவனித்தல்: சங்கீதம் 5ல், தேவனே, நீர் பாவத்தை வெறுக்கும் பரிசுத்தர், ஆனால் பாவியாகிய நானோ உம் கிருபையால் உம் முன்பாக வருகிறேன் என்று தாவீது கூறுகிறார். தேவனுடைய கிருபையால் மட்டுமே நாம் அவர் முன்பாக வர முடியும். அவருடைய கிருபைப் பேரன்பு, நாம் அவர் சமூகத்தில் அவர் முன் வந்து நிற்க நமக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய வழியில் நடப்பதற்கு, தேவ வழிகாட்டுதல் தனக்கு தேவை என தேவனுடைய இரக்கத்தை நம்பி தாவீது ஜெபிக்கிறார்.
பயன்பாடு: தேவனுடைய கிருபையால், நான் எங்கே இருந்தாலும் தேவனுக்கு முன்பாக வந்து, அவர் சமூகத்தில் நிற்க முடியும். கிருபையால் இரட்சிப்பின் வாழ்வை பெற்றனுபவிக்கிற, முன்பு பாவியாக வாழ்ந்த எனக்கு, தேவனுடைய நீதியின் பாதையில் நடக்க அவருடைய வழிகாட்டுதலும், மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட முடியாதபடி ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ அவருடைய பாதுகாப்பும் எனக்குத் தேவை. தேவனுக்கு முன்பாக நான் வந்து நிற்கும் இந்நாளில், நான் அவருடைய சமூகத்தை மகிழ்வுடன் அனுபவிக்கவும், அவருடைய அன்பை நாள் முழுதும் ருசிக்கவும், மற்றும் ஒரு பரிசுத்தமான வாழ்வை வாழவும், நான் தேவனுடன் நடக்க வேண்டியது அவசியம்.
ஜெபம்: பிதாவே, எனக்கு நீர் காண்பித்து வருகிற உம் கிருபைப் பேரன்புக்காக நன்றி. என் வாழ்க்கையை உமக்குப் பிரியமானபடி வாழ, என்னை உம் நீதியின் வழியில் நடத்தும். ஆமென்.
-அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
5 ஜனவரி 2021
No comments:
Post a Comment