Saturday, January 23, 2021

ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே....

  வாசிக்க: ஆதியாகமம்  45, 46; சங்கீதம் 23; மத்தேயு 12:1-30

வேதவசனம்:  ஆதியாகமம்  45:8 ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

கவனித்தல்: தேவன் தன் வாழ்க்கையில் செய்தவைகளை தன் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என யோசேப்பு  விளக்க முயற்சி செய்வதை நாம் பார்க்கிறோம்.தன் சகோதரர்களிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்துகையில், யோசேப்பு அடிக்கடி “தேவன்” என்று சொல்வதைக் கவனியுங்கள். ராஜாவுக்கு முன்பாக கொண்டு வரப்படுகிற வரைக்கும், யோசேப்பின் வாழ்க்கை அவன் விரும்பாத மோசமான நிகழ்வுகளாலும், கஷ்டங்களாலும் நிறைந்திருந்தது. வெளிப்புறமாக பார்க்கையில், யோசேப்பு தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டார், அடிமையாக விற்கப்பட்டார், தவறேதும் செய்யாமல் (உண்மையில் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதிகாக இருந்தார்) சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தேவன் யோசேப்புடன் இருந்தார், அவனை எல்லாவற்றிலும் காரியசித்தி உள்ளவனாக்கி, அவன் செய்த எல்லாவற்றையும் வாய்க்கப் பண்ணினார். யோசேப்புடைய வாழ்க்கையில், மற்றவர்கள் அவனைக் குறித்து பலவித (பெரும்பாலும் தீய) திட்டங்களை வைத்திருந்தனர். ஆனால் தேவனும் அவனுடைய வாழ்க்கையைக் குறித்து  ஒரு திட்டம் வைத்திருந்தார்- அது அழிவிற்கான திட்டம் அல்ல. மாறாக, அது  இரட்சிப்பின் திட்டம் ஆகும். யோசேப்பு தன் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு பாடுகளும் அல்லது அநீதியும் தேவனிடமும், தேவனுடைய திட்டத்திற்கும் அவன் நெருங்கி அருகில் வர உதவி செய்தன. அடிமையாக விற்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின், யோசேப்பு தன் சகோதரர்களிடம் தேவன் எப்படி தன்னை 13 ஆண்டுகளில் எகிப்தின் அதிகாரம் நிறைந்த ஒரு பதவியில் இருக்கிற ஒரு நபராக உயர்த்தினார் என்பதைச் சொன்னார். யோசேப்பு மரண இருளின் பள்ளத்தாக்கைக் கடந்து செல்ல தேவன் அவனை வழிநடத்தினார். 

பயன்பாடு: என் வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்.  என் வாழ்க்கையில் நான் கடினமான பாதைகளையோ அல்லது கஷ்டங்களையோ எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் எனக்கு உதவவும், என்னுடனே இருக்கவும் என் தேவன் இருக்கிறார். அவர் என் மேய்ப்பர். அவர் என் வழியை அறிந்திருக்கிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கையும் கடந்து செல்ல அவர் வழிகாட்டுகிறார். நான் அவருடைய பராமரிப்பின்/கவனிப்பின் கீழ் இருக்கும் வரைக்கும், அவருடைய வழிநடத்துதலின் படி நான் அவருடன் நடக்கிற வரைக்கும், “நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்” என்று நான் நம்ப முடியும். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் அதிசயங்களைச் செய்கிற தேவன்.  உம் வழிகள் ஆராயப்பட முடியாதவைகள்! உம்மை நம்பிக் கீழ்ப்படிகிறவர்களுக்கு நீர் சாத்தியமில்லாதவைகளையும் நடைபெற சாத்தியமுள்ளவைகளாக மாற்றுகிறீர். இன்றும், என்றும் உம்முடனே நடக்க எனக்கு உதவும். ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
23 ஜனவரி 2021


No comments: