வாசிக்க: ஆதியாகமம் 17, 18; சங்கீதம் 9; மத்தேயு 5:1-32
வேதவசனம்: ஆதியாகமம் 17: 1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு...
18:11. ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. 12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
கவனித்தல்: இன்றைய வாசிப்புப் பகுதியில் அனேக தியானச் சிந்தனைகளுக்கான விதைகள் உண்டு என்றாலும், இன்று இவ்வேதப் பகுதிகளை வாசிக்கும் போது இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. இங்கே, தனக்கு முன்பாக “நடக்கவும்”, “உத்தமனாக” இருக்கவும் தேவன் ஆபிராமை அழைப்பதைப் பார்க்கிறோம். எல்லாரையும் போல ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ தேவன் அழைக்கவில்லை. மாறாக, தேவனுடன் உண்மையாக நடக்கிற ஒரு வாழ்க்கைக்கு அவர் அழைக்கிறார். தேவனுடன் நடப்பதும், உத்தமனாக வாழ்வதும் பிரிக்க முடியாதவை ஆகும். நமக்கு முன்பாக, நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு முன் குற்றம் சாட்டப்பட முடியாத ஒரு வாழ்க்கையை வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
பிள்ளை இல்லை என்கிற தன் மனக் கவலையை தேவனிடம் தெரியப்படுத்தி, ஒரு பிள்ளை வேண்டும் என்கிற ஆபிரகாமின் இருதய விருப்பத்தை நிறைவேற்ற தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபோது, சந்தேகமில்லாமல் அதை விசுவாசித்த ஆபிரகாம் (ஆதி.15:1-6), இப்போது அவநம்பிக்கையில் நகைப்பதை அல்லது சிரிப்பதைப் பார்ப்பது சற்று ஆச்சரியமானதாக இருக்கிறது. சாராளும் இதே போல நகைப்பதைப் பார்க்கிறோம். தங்களுடைய முதிர்ந்த வயதான காலத்தில் பிள்ளை பெறுவது குறித்து அவர்கள் சிந்தித்ததை வெளியே சொல்லவில்லை என்றாலும் கூட, தேவனால் அவர்கள் இருதயத்தின் அவநம்பிக்கையின் குரலைக் கேட்க முடிந்தது. தேவன் அவர்களைக் கண்டிக்க வில்லை, மாறாக தம் வாக்குத்தத்தத்தை திரும்பவும் நினைவுபடுத்துவதைக் காண்கிறோம். “ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?”
பயன்பாடு: நான் தேவனுக்கு முன்பாக உண்மையான, மற்ற மனிதர்களுக்கு முன்பாக குற்றஞ்சாட்டப்படாத ஒரு வாழ்க்கையை வாழ அழைக்கப்பட்டிருக்கிறேன். வெளிப்புறமான அல்லது காணக்கூடிய விசயங்களில் நான் உண்மையுள்ளவனா(ளா)க இருக்கையில், என் இருதயத்திலும் என் சிந்தனைகளிலும் நான் தேவனுக்கு உண்மையுள்ளவனா(ளா)க இருப்பதைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். தேவன் எல்லாவற்றையும் காண்கிறார். நடைபெறச் சாத்தியமில்லாத எதையும் செய்ய வல்லமையுள்ளதாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது. தேவனுடன் நடக்கவும், எனக்கான தேவ அழைப்பை நிறைவேற்றவும் முடியாதபடி நான் மிகவும் வயது முதிர்ந்தவராகவோ அல்லது மிகவும் இளமையானவராகவோ இருக்கலாம். “ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அவருடைய வாக்குத்தத்தம் குறித்தக் காலத்தில் நிறைவேற பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு 9:23).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் சூழ்நிலைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதற்குப் பதிலாக, எவையெல்லாம் சாத்தியமல்ல என்று சிந்திப்பதற்குப் பதிலாக, நீர் எனக்கு முன் வைத்திருக்கிற அழைப்பை நிறைவேற்ற எப்போதும் உம்மை நோக்கிப் பார்க்கவும் உம் வார்த்தைகளைக் கேட்கவும் எனக்கு உதவும். எனக்கு நீர் தந்த வாக்குத்தத்தங்களை நினவுபடுத்துகிறதற்காக நன்றி. தேவனே நீர் உண்மையுள்ள தேவன். நான் எல்லாவற்றிலும் உமக்கு உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு உம் பெலனைத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
9 ஜனவரி 2021
No comments:
Post a Comment