வாசிக்க: ஆதியாகமம் 37, 38; சங்கீதம் 19; மத்தேயு 10:1-26
வேதவசனம்: சங்கீதம் 19: 1. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது...7. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது...11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 12. தன் பிழைகளை உணருகிறவன் யார்?...
கவனித்தல்: தேவன் நமக்குத் தந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி நினைவுபடுத்துகிற ஒரு பாடலாக சங்கீதம் 19 இருக்கிறது. ஒன்று, நாம் அனைவருக்கும் தெரிந்த பரிசுத்த வேதாகமம். மற்றொன்று, சங்கீதக் காரன் சொல்வது போல, தேவன் படைத்த இயற்கை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒன்று தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய புத்தகம் (the book of God's words), மற்றொன்று தேவனுடைய கரத்தின் கிரியைகளாகிய சிருஷ்டிப்பு புத்தகம் (the book of God's works). தேவன் படைத்த சிருஷ்டிப்புகள் எல்லா மனிதருக்கும் தேவனுடைய மகிமையை நினைவுபடுத்தி, அறிவை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையோ ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதாகவும், பேதையை ஞானியாக்குகிறதாகவும், இருதயத்தை மகிழ்விக்கிறதாகவும், மற்றும் கண்களுக்கு தெளிவை உண்டாக்குகிறதாகவும் இருக்கிறது. மேலும், தேவனுக்கு முன்பாக ஒரு உத்தம வாழ்க்கையை வாழ வேதப் புத்தகம் வழிகாட்டி எச்சரிக்கிறதாக இருக்கிறது.
பயன்பாடு: சங்கீதம் 19 ஐ வாசிக்கையில், நான் தேவனுடைய வார்த்தையின் தன்மைகளையும், நன்மைகளையும் பற்றி அறிந்து கொள்கிறேன். வேதாகமத்தை வாசிக்கும்போது, இந்தச் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நன்மைகள் அனைத்தையும் நான் பெற்று அனுபவிக்க முடியும். ஆயினும், தேவனுடைய வார்த்தையை தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் பயன்படுத்தாமல், மற்றும் என் “மறைவான குற்றங்களையும்”, “துணிகரமான பாவங்களையும்” நான் உணராமல், தேவனுடைய வார்த்தையின் ஆசீர்வாதங்களை நான் என் வாழ்வில் காண முடியாது. நான் தேவனிடம் மன்னிப்பு கேட்டு, பாவங்களில் இருந்து விலக்கிக் காக்கும்படி ஒரு பாதுகாப்பைக் கேட்டு ஜெபிக்கும்போது, தேவன் எனக்கு உதவ முடியும்.
ஜெபம்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
19 ஜனவரி 2021
No comments:
Post a Comment