வாசிக்க: ஆதியாகமம் 43, 44; சங்கீதம் 22; மத்தேயு 11:20-30
வேதவசனம்: சங்கீதம் 22: 7. என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: 8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
கவனித்தல்: மற்றவர்களால் கைவிடப்பட்டதாகவும் சிறுமைப்படுத்தப் பட்டதாகவும் உணர்ந்த மிகக் கடினமான ஒரு சமயத்தில் தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருப்பார் என்று கருதலாம். தேவன் மேல் நம்பிக்கை வைத்து, பாடுபடுகிற ஒரு நீதிமானைப் பற்றிய பிம்பத்தை இந்த சங்கீதம் தருகிறது. இந்தச் சங்கீதத்தை நாம் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றிய விவரத்துடன் எப்படி பொருந்துகிறது என்பதை நாம் காண்கிறோம். இந்த சங்கீதம் “சிலுவையின் சங்கீதம்” என ஸ்பர்ஜன் மிகச் சரியாகச் சொல்கிறார். தாவீது தன் வேதனையையும், இருதயத்தின் குமுறலையும் வெளிப்படுத்தும் போது, அவர் தன் வருந்தத்தக்க நிலையை மட்டும் பற்றிச் சொல்லவில்லை. மாறாக, தேவனுடைய உதவியைக் கேட்பதையும், தேவன் விடுவித்த பின்பு அவர் என்ன செய்வார் என்று சொல்வதையும் நாம் பார்க்கிறோம். ஒருவரின் பாடுகளை/கஷ்டங்களைப் பார்க்கும் மக்கள், அந்நபரைப் பரியாசம் பண்ணி, இழிவாகப் பேசி, வெறுத்து ஒதுக்கக் கூடும். ஆனால் தேவனோ அப்படிப் பாடுபடுபவர்களின்/கஷ்டப்படுபவர்களின் ஜெபங்களை எப்பொழுதும் கேட்டு, அவர்களை விடுவிக்கிறார் (சங்.22:24). முடிவில், அவர்கள் தேவனைத் துதிப்பார்கள். “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத்தேயு 5:10).
பயன்பாடு: உலகத்திற்கு ஒத்த/இணக்கமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்தால், ஜனங்கள் என்னை வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், நான் தேவனுக்காக அர்ப்பணிப்புள்ள ஒரு வாழ்க்கையை வாழத் துவங்கும்போது, நான் பாடுகளையும், உபத்திரவங்களையும், பரியாசங்களையும் மற்றவர்களின் புறக்கணிப்பையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆயினும், நான் தேவனுடைய உதவியை அப்பொழுது கேட்க முடியும். எவரும் என்னுடன் இல்லை என்றாலும், எல்லாரும் என்னைப் புறக்கணித்து விட்டதாக நான் நினைக்கும் போதும், தேவனே என்னை விட்டு விலகிவிட்டதாக எனக்குத் தோன்றும்போதும் கூட, நான் தேவனை நோக்கி ஜெபிக்க முடியும். தேவனுடைய முகத்தையும், அவர் எனக்கு அருகில் இருப்பதையும் காணமுடியாதபடி என் பலவீனம் என்னைத் தடுக்கிறது. ஆனால், நான் தேவனை நோக்கி ஜெபித்து, அவருடைய உதவியைக் கேட்கும்போது, அவரையும், அவருடைய வல்லமையான விடுதலையையும் நான் மறுபடியும் பார்க்க முடியும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என் தேவனாக இருப்பதற்காக நன்றி. உம் அன்பிற்காக, சிலுவையில் நீர் எனக்காகப் பட்டப் பாடுகளுக்காக நன்றி. என் வாழ்க்கையில் நான் கடினமான தருணங்களினூடாகச் செல்லும் சமயங்களில், “ஏன் தேவனே” என்று கேட்பதற்குப் பதிலாக, “எதற்காக” இதை அனுமதித்தீர் என்று உம்மிடம் கேட்க எனக்கு உதவும். நீர் எனக்காக ஒரு நோக்கத்தையும் திட்டத்தையும் வைத்திருக்கிறீர். நான் உம்மை எக்காலத்திலும் நம்புவேன். என் தேவனிடம் இருந்து எதுவும் என்னைப் பிரிக்கமுடியாது. ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
22 ஜனவரி 2021
No comments:
Post a Comment