வாசிக்க: ஆதியாகமம் 35, 36; சங்கீதம் 18; மத்தேயு 9:18-38
வேதவசனம்: ஆதியாகமம் 35: 2 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். 3. நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
கவனித்தல்: லாபான் இருக்கும் இடத்திற்கு ஓடிப் போகையில், “நான் உன்னோடே இருப்பேன்” என்று யாக்கோபிடம் வாக்குப்பண்ணின அதே தேவன், பின்பு உன் தகப்பனுடைய வீட்டிற்கு "திரும்பிப் போ” என்று சொன்னார் (ஆதி.28:12-15; 31:3). யாக்கோபு தேவனை முதன் முதலில் சந்தித்த இடமான பெத்தேலுக்குப் போகும்படி, தேவன் அவனிடம் சொல்கிறார். முன்பு, யாக்கோபு அந்த இடத்தை பெத்தேல் என்று அழைத்தார். பெத்தேல் என்பதன் பொருள் என்னவெனில், யாக்கோபு சொன்னது போல, "தேவனுடைய வீடு" என்பதாகும் (ஆதி.28:17-19). முன்னர், தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து தன் பயணத்தைத் துவங்குகையில் அங்கே தேவனை யாக்கோபு சந்தித்தான்.இப்பொழுது தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடனான தன் உறவை ஆரம்பித்த பெத்தேலுக்குத் திரும்ப வருகிறான். தன் வாழ்க்கையில் தேவன் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என்று சாட்சி கூறுகிறான். இதையெல்லாம் நீக்க வேண்டும் என்று தேவன் அவனிடம் எதையும் சொல்ல வில்லை என்றாலும், தானாக முன்வந்து, தேவனுடைய வீட்டிற்கு வருவதற்கு முன் தன் குடும்பத்தை ஒரு சுத்திகரிப்புக்கு அழைக்கிறான். தேவனுக்குப் பிடிக்காத அனைத்தையும் தன் வாழ்விலிருந்தும் குடும்பத்தினரிடம் இருந்தும் நீக்கிப் போடுகிறான். அத்துடன், அவைகளை புதைத்தும் விடுகிறான்.
பயன்பாடு: என் தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவரும், என் ஜெபங்களுக்கு எப்பொழுதும் பதில் தருகிறவருமாக இருக்கிறார். தாமதமின்றி நான் அவரிடம் வந்து சேர வேண்டும் என விரும்புகிறார். ஆயினும், நான் தேவனுடைய வீட்டிற்கு வரும் போது, என் தேவனுக்குப் பிரியமில்லாத எதையும் என்னை விட்டு நீக்கிவிட வேண்டும். அது என்னவாக இருந்தாலும், விலையேறப்பெற்றதாக இருந்தாலும் சரி, ஒன்றுக்கும் உதவாததாக இருந்தாலும் சரி, என்னைச் சுத்திகரிக்க என் வாழ்விலிருந்து அவைகளை அகற்றிப்போட நான் தயாராக இருக்க வேண்டும். நான் தேவனுக்கு முன்பாக சுத்த மனச்சாட்சி உள்ளவனாக இருக்க வேண்டும். இயேசு சொன்னது போல, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்தேயு 5:8). “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7).
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
18 ஜனவரி 2021
No comments:
Post a Comment