வாசிக்க: ஆதியாகமம் 33, 34; சங்கீதம் 17; மத்தேயு 9:1-17
வேதவசனம்: மத்தேயு 9:12. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
கவனித்தல்: தன்னைப் பின்பற்ற வரும்படி இயேசு அழைத்ததும், மத்தேயு உடனே கீழ்ப்படிந்ததைப் பற்றி நாம் இன்றைய வேதவாசிப்புப் பகுதியில் காண்கிறோம். எவ்வித தயக்கமும் இன்றி, அவன் தன் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, இயேசுவைப் பின் சென்றான். அந்நாட்களில், ஆயக்காரர்கள் அல்லது வரிவசூலிப்பவர்களைப் பற்றி யூதர்கள் மிகவும் மோசமாகக் கருதினர். பல்வேறு காரணங்களுக்காக யூதர்கள் ஆயக்காரர்களை வெறுத்தனர். ஆகவே, ஆயக்காரர்களோடு ஒன்றாக அமர்ந்து இயேசு உணவருந்துவதைக் கண்ட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், இயேசுவோ ஒரு புதிய பரிமாணத்தில் தேவை உள்ளவர்களைப் பார்க்கும்படி அவர்கள் கவனத்தைத் திருப்புகிறார். ஓசியா 6:6 ல் தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று அறிந்து கொள்ளும்படி தன் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இயேசு சொன்னார். நம் பலிகளை விட, நாம் அவருக்குக் கொடுக்கும் காணிக்கைகளை விட தேவன் இரக்கத்தில் பிரியமாயிருக்கிறார். இங்கே “இரக்கம்” என்ற வார்த்தையானது, நம் அயலாரிடத்தின் நாம் காண்பிக்கும் சரியான நடவடிக்கையையும், தேவனுக்கு உண்மையாக நாம் நடப்பதையும் குறிக்கிறது. இயேசுவின் அழைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆயினும், தங்களை நீதிமான் என்று கருதிக் கொள்பவர்கள், தேவனுடைய இரக்கம் மற்றும் இரட்சிப்பு தங்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து கொள்ளாமல் போகக் கூடும். ஆனால், நான் ஒரு பாவி என்று உணர்ந்து கொள்பவர்கள் தங்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து கொள்வார்கள். தேவையுள்ளவர்களின் ஆன்மீகத் தேவைக்கான தேவனுடைய மருந்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது நம் பொறுப்பு ஆகும்.
பயன்பாடு: நான் இயேசுவைப் பின்பற்றும்போது, என்னுடைய முடிவின் நன்மை, தீமைகள் அல்லது சாதக, பாதகங்கள் என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறேனா, அல்லது அனுதினமும் இயேசுவைப் பின்பற்றுவதில் கவனமாயிருக்கின்றேனா? இயேசுவைப் பின்பற்ற அவர் விடுக்கும் அழைப்பை ஏற்றுக் கொள்கிற நான், தங்கள் வாழ்வில் இயேசுவைப் பெற வேண்டிய தேவையில் இருக்கிறவர்கள் அனேகர் என்னைச் சுற்றிலும் உண்டு என்பதை நான் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் சென்று, தேவனுடைய இரக்கத்தை, இரட்சிப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ள நான் ஆயத்தமாக இருக்க வேண்டும். பொதுவான பிரபல கருத்துக்கள், மக்களின் பாரபட்சமான மற்றும் தவறான கருத்துக்களுக்கு இடம் கொடாமல், நான் இயேசுவைப் பின்பற்றி, தேவை உள்ளவர்களுக்கு தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக நன்றி. நான் உம் கிருபையினால் இரட்சிப்பைக் கண்டடைந்த பாவி என்பதை அறிவேன். மற்றவர்களின் ஆன்மீகத் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அதற்கான என் பங்கை முழு மனதுடன் செய்யவும் எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
17 ஜனவரி 2021
No comments:
Post a Comment