வாசிக்க: ஆதியாகமம் 29, 30; சங்கீதம் 15; மத்தேயு 8:1-17.
வேதவசனம்: மத்தேயு 8: 1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
பயன்பாடு: மனிதர்கள் என்னை வெறுத்து ஒதுக்கி, என் அருகில் வருவதை தவிர்க்கலாம். ஆனால், இயேசு ஒருபோதும் அதைச் செய்வதில்லை. பாவமானது என்னை தேவனிடம் இருந்து பிரிக்கிறது என்றும், இயேசு மட்டுமே என்னைக் கழுவிச் சுத்திகரிக்க முடியும் என்பதை நான் உணரவேண்டும். இருளிலும், தனிமையிலும் என்னை நான் மறைத்து ஒளிந்து கொள்வதற்குப் பதிலாக, நான் இயேசுவிடம் வரத் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், அவர் என்னை, என் வாழ்க்கையைச் சுத்தமாக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார். நான் இயேசுவிடம் வந்து, என்னைச் சுத்தமாக்கும் என்று கேட்கும்போது, எஜமானரின் தொடுதலை நான் பெற்று அனுபவிக்க முடியும். “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”, “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” என்று வேதம் சொல்லும் உண்மையைப் பற்றி நான் நிச்சயமுள்ளவனாக இருக்கவேண்டும்.
ஜெபம்: இயேசுவே, என்னைக் குணமாக்க, நீர் விருப்பம் உள்ளவராக இருப்பதற்காக நன்றி. நீர் என் பாவங்களை நோய்களை சிலுவையில் சுமந்து தீர்த்ததற்காகவும், உம் அன்புக்காகவும் நன்றி. இன்று உம் அன்பின் தொடுதலை நான் பெற்று அனுபவிக்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment