வாசிக்க: யாத்திராகமம் 1, 2; சங்கீதம் 26; மத்தேயு 13:31-58
வேதவசனம்: மத்தேயு 13:53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57. அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
கவனித்தல்: இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வருவதற்கு முன்பே, அங்கு வாழ்ந்த மக்கள் இயேசு செய்த அற்புதங்களைப் பற்றியும், இயேசு காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தியதைப் பற்றியும், இயேசுவின் வல்லமையான மற்றும் அதிகாரம் நிறைந்த போதனைகள் அதைக் கேட்டவர்களை ஆச்சரியப்படுத்தியதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆயினும், இயேசுவின் போதனையை நேரடியாகக் கேட்க ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்த போது, அவர்களும் ஆச்சரியமடைந்தாலும், தங்களுக்கு முன் இருந்த ஒரு மாபெரும் போதகரைக் காணத் தவறிவிட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவின் குடும்பப் பின்னணி, அவர்களின் சமுதாய அந்தஸ்து, மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு விதமாகச் சொல்வதானால், எங்களுக்கு முன்பாக வளர்ந்த இந்த இயேசுவைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்றும், அவர் குடும்பப் பின்னணி சாதாரணமானது என்றும், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பெயர்களைக் கூட எங்களுக்குத் தெரியும் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, இயேசுவிலும் அவருடைய போதனையிலும் எந்தச் சிறப்பும் இல்லை என அவர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். இயேசுவைப் பாராட்டி ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் அதற்கு நேரெதிரானதைச் செய்தார்கள் என்றும் “அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்” என்றும் வாசிக்கிறோம். ஏனெனில் அவர்கள் இயேசுவின் பூமிக்குரிய தொடர்புகள் மற்றும் உறவுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள், பிதாவாகிய தேவனுடன் அவருக்கு இருந்த தொடர்பைப் பார்க்கத் தவறினார்கள். இயேசு உண்மையில் யார் என்பதை மக்கள் பார்க்கத் தவறியபோது, முடிவில் இயேசுவின் அற்புதங்களை அவர்களால் தங்கள் வாழ்வில் காண முடியாமல் போயிற்று.
பயன்பாடு: நான் இயேசுவை எப்படிப் பார்க்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன் என்பது என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. நான் இயேசுவைச் சரியான முறையில் பார்ப்பதை பாதிக்கக் கூடிய, அவரைப் பற்றிய எந்த தப்பெண்ணத்திற்கும் தவறான கருத்துக்கும் என் மனதில் நான் இடம் கொடுக்கக் கூடாது. இயேசுவைப் பற்றி மற்றவர்கள் பல்வேறு விஷயங்களைச் சொல்லலாம், இயேசுவைப் பற்றிய வித்தியாசமான பிம்பங்களை அல்லது படங்களை என் முன் வைக்கக் கூடும். ஆயினும், இயேசுவைப் பற்றி, அவர் யார் என்று பரிசுத்த வேதாகமம் என்னச் சொல்கிறது என்பதுதான் எனக்கு முக்கியமானது ஆகும். நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு, அவரைக் கனப்படுத்தவில்லை எனில், என் வாழ்க்கையில் அவருடைய அற்புதங்களைக் காண முடியாது. நான் கேட்டு இன்புறவும், பின்பற்றவும் ஆச்சரியமான போதகர் இயேசுவே. மற்றவர்கள் சொல்வது போல அல்ல, பரிசுத்த வேதாகமம் சொல்வது போலவே நான் இயேசுவைப் பார்க்கிறேன்.
ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் பற்றி மற்ற மனிதர்கள் வித்தியாசமான காரியங்களைச் சொல்லும்போது, பரிசுத்த வேதாகமம் உம்மைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கவும், வேதம் சொல்வதையே நான் விசுவாசிக்கவும் எனக்கு உதவும். என் இரட்சகராகிய இயேசுவே, எப்பொழுதும் நான் உம்மைப் பின்பற்றவும், உமக்குக் கீழ்ப்படியவும் எனக்கு உம் சக்தியைத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
26 ஜனவரி 2021
No comments:
Post a Comment