வாசிக்க: ஆதியாகமம் 21, 22; சங்கீதம் 11; மத்தேயு 6:1-18
வேதவசனம்: மத்தேயு 6:1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
கவனித்தல்: ஒருவருடைய ஆன்மீக வாழ்க்கையுடன் தொடர்புடைய தானதர்மங்கள் செய்தல், ஜெபித்தல், மற்றும் உபவாசித்தல் ஆகிய மூன்று பொதுவான மற்றும் முக்கியமான காரியங்கள் மீது இயேசு நம் கவனத்தை திருப்புகிறார். மிகப் பழைமையான வேதாகமக் கைப்பிரதிகளில் “தான தருமங்கள்” என்கிற வார்த்தைக்குப் பதிலாக, “righteousness" நீதி என்பதைக் குறிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மாய்மாலக்காரர்கள் செய்வது போல இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிற “நீதியின் செயல்களைச்” செய்யக் கூடாது என அவர் தெளிவாக எச்சரிக்கிறார். சுய மகிமைக்காக மற்றவர்களுக்கு முன் பெருமை பாராட்டுவதற்குப் பதிலாக, நாம் தான தர்மங்களைச் செய்யும்போதும், ஜெபிக்கும்போதும், உபவாசிக்கும்போதும் பரலோகத்திலிருந்து வரும் பலனைத் தேடவேண்டும் என இயேசு விரும்புகிறார். “நீங்கள் செய்தால்” என்று கூறுவதற்குப் பதிலாக, “நீங்கள் செய்யும்போது” என்று இயேசு சொல்வதன் மூலம், இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இம்மூன்று காரியங்களையும் செய்வார்கள் என அவர் கருதுகிறார் (வசனம்.3,5-7,16). ஆகவே, அவர் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்காக வழிகாட்டுதலை நமக்குத் தருகிறார்.
பயன்பாடு: நான் என்னைப் பார்க்கிற மனிதர்களின் கவனத்தை, அவர்களிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என முயற்சிக்கிறேனா? அல்லது தேவனுக்காக வாழ்ந்து அவர் விரும்புகிற படி நான் எல்லாவற்றையும் செய்கிறேனா? நான் வாழும் வாழ்க்கை தேவனை மகிமைப் படுத்தி வாழ எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு ஆகும். எந்த விதமான மாய்மாலம் அல்லது பாசாங்குத் தனத்தை இயேசு கடுமையாக எதிர்க்கும்போது, இயேசு இங்கே குறிப்பிடுகிற “நீதியின் செயல்களைச்” செய்கையில் நான் தெளிந்த புத்தியுள்ளவனாக இருக்க வேண்டும். “நீங்கள் செய்ய வேண்டிய விதம்” என இயேசு எனக்குக் காட்டுகிறார், ஆகவே அவருடைய வழிகாட்டுதலின் படி தவறாமல் நான் எல்லாவற்றையும் செய்வேன்.
ஜெபம்: என் இருதயத்தைக் காண்கிற தகப்பனே, உம் இதயம் விரும்புகிற படி “நீதியின் செயல்களை” மற்றும் தான தருமங்களைச் செய்ய நீர் கொடுத்திருக்கிற வழிகாட்டுதல்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவின் வார்த்தைகளின்படி நான் வாழ செயல்பட உம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவவும், நினைவுபடுத்தவும் செய்வாராக. ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
11 ஜனவரி 2021
No comments:
Post a Comment