வாசிக்க: யோபு 13,14; சங்கீதம் 38; அப்போஸ்தலர் 28
வேத வசனம்: அப்போஸ்தலர் 28: 30. பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும்
தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,
31. மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்
கவனித்தல்: பவுல் ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்ட கடல் பயணத்தில்
நேர்ந்த கஷ்டங்கள் அனைத்தையும் படித்த பின்னர், ரோமாபுரியில் கர்த்தர் பெரிய காரியங்களைச்
செய்வார் என நாம் எதிர்பார்க்கிறோம். மூன்று அதிகாரங்களில் (அப்.25-27) ரோம சக்கரவர்த்தி
சீசர் முன்பு பவுல் நிற்பதைப் பற்றிய ஒரு சித்திரத்தை லூக்கா கொடுக்கிறார். ஆனால்
அப்போஸ்தலர் 28ம் அதிகாரத்தில், 16 வசனங்கள் மட்டுமே பவுலின் ரோமாபுரி ஊழியம் பற்றி
கூறுகின்றன. 16 வசனங்களில், அப்போஸ்தல நடபடிகளின் கடைசி இரண்டு வசனங்கள்தாம் ரோமாபுரியில்
தங்கிய இரண்டுவருடங்கள் பவுல் என்ன செய்தார் என்பதைப் பற்றிய ஒரு குறிப்பைக் கொடுக்கின்றன,
மீதமுள்ள 14 வசனங்களும் யூதர்களுடன் பவுல் பேசிய காரியங்கள் பற்றிக் கூறுகின்றன. இராயனுக்கு
முன்பு பவுல் நின்றாரா என்பதைப் பற்றி மற்றும் புறஜாதியாருக்கு அவர் செய்த ஊழியங்கள்
பற்றி அப்.28:30-31 எதுவும் கூறவில்லை. ரோமாபுரிக்கு கர்த்தர் பவுலைக் கொண்டு வந்த
நோக்கத்தை நாம் அறிந்து கொள்வது எப்படி?
ரோமாபுரிக்கு வந்து சேர்ந்த பின் பவுல்
என்ன செய்தார் என்பதைப் பற்றி அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் விளக்கமாகக் கூறவில்லை
என்றாலும், பவுலின் நிருபங்கள் ரோமாபுரியில் பவுல் மூலமாக ஆண்டவர் என்ன செய்தார்
என்பதையும், மற்ற இடங்களில் உள்ள சபைகளை உற்சாகப்படுத்திய அவனுடைய ஊழியத்தைப் பற்றியும்
சாட்சி பகர்கின்றன. பவுலின் நான்கு நிருபங்கள்—எபேசியர், கொலோசெயர், பிலமோன், மற்றும்
பிலிப்பியர்—இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவையே. பவுல் மூலமாக ஆண்டவர் செய்து
முடித்த காரியங்களைப் பற்றி இவை அதிகமாகக் கூறுகின்றன. “எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று(ம்)” மற்றும் ”அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள்
திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த்
துணிந்திருக்கிறார்கள்” என்றும் எழுதுகிறார் (பிலி.1:12-14). "இராயனுடைய அரமனையிலும்” கிறிஸ்தவர்கள் இருந்தனர் என
பிலி. 4:22 கூறுகிறது. கொலோசெயர் 4:10-11ல்
உள்ள வசனங்கள், பவுலுடன் கூட அவருடைய உடன் ஊழியர்களும் இருந்தனர் என கூறுகிறது. ரோமாபுரியில் இருந்து எழுதிய கடைசி நிருபத்தில், ”கர்த்தரோ எனக்குத் துணையாக
நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்” என்று பவுல் கூறுகிறார் (2 தீமோ.4:17).
ரோமாபுரியில் சிறைப்பட்டவராக அவர் இருந்தாலும், அவருடைய கட்டுகள் நற்செய்தி பரவ ஏதுவாக
இருந்தது மற்றும் அனேகர் தைரியமாக பயமின்றி நற்செய்தி பிரசங்கிக்க உற்சாகப்படுத்தப்
பட்டனர். நற்செய்திப் பணியை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.
நீங்கள் ”எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச்
சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று நம் ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களிடம் சொன்னார்
(அப்.1:8). சபையானது பெந்தெகோஸ்தே நாளில் இருந்து தன் நற்செய்திப் பணியை எருசலேமில்
துவங்கி, அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்கும்படியாக மற்ற இடங்களுக்கும்
நற்செய்தியை அறிவித்து வருகிறது. சபையின் ஊழியம் அப்போஸ்தலர் 28ஆம் அதிகாரத்துடன்
முடிந்துவிடவில்லை. ”மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல்,” சபையானது
நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்றும் செய்து வருகிறது. தன் சீடர்களுடனே கூட இருந்து
கிரியை நடப்பித்து கர்த்தர் வசனத்தை உறுதிப்படுத்தியது போல, இன்று நம்முடனும் அவர்
இடைபடுகிறார். அனைவரும் நற்செய்தியைக் கேட்கிறவரைக்கும், அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்திற்கு
முடிவு இருக்காது.
பயன்பாடு: ”மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல்” நான் நற்செய்தியைப்
பிரசங்கிக வேண்டும். இயேசுவின் சீடராகிய நான், கர்த்தருடைய வேலையை தொடர்ந்து செய்து,
நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உண்டு. “கிறிஸ்து
எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்று சொல்லத்தக்க
ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் (பிலி.1:21).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உம் சாட்சியாக இருக்கும்படி என்னை அபிசேகிக்கிற உம் பரிசுத்த ஆவிக்காக உமக்கு நன்றி.
இயேசுவே, உம் ஆவியினால் என்னை நிரப்பி, எல்லா இடங்களிலும் தேவனுடைய ராஜ்ஜியத்தின் செய்தி பரவ என் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 220
No comments:
Post a Comment