Tuesday, August 24, 2021

உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்

வாசிக்க: பிரசங்கி 1,2; சங்கீதம் 53; ரோமர் 15

வேத வசனம் பிரசங்கி 1: 2. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

கவனித்தல்: இந்தியாவில், மாயமான அல்லது போலியான தோற்றம் என்பதைக் குறிக்கும் “மாயை” என்ற வார்த்தை பல்வேறு மத தத்துவங்களில் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. மாயை என்பதற்கான விளக்கம் அது பயன்படுத்தப்படுகிற சூழலைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆயினும், பொதுவாக சொல்வதானால், மாயை என்பதைப் பற்றிய கொள்கையானது உண்மையை அறியாமல் இருப்பதைக் குறிப்பதாக இருக்கிறது. அறிவு வரும் போது, மாயை இல்லாமல் மறைந்து போகும் என்று இந்திய தத்துவ ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய தன் முடிவுரையுடன் பிரசங்கி புத்தக ஆசிரியர் ஆரம்பித்திருப்பது போலத் தோன்றுகிறது. “மாயை” என்ற வார்த்தை இந்தப் புத்தகத்தில் சுமார் 35 முறை வருகிறது. சூரியனுக்குக் கீழ் செய்யப்படுகிற ”எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” என்று நூலாசிரியர் தன் விரக்தியை வெளிப்படுத்துகிறார் (வ.14). ”மாயை” என்பதைப் பற்றி திரும்பத் திரும்ப பிரசங்கி புத்தகத்தில் வருகிறபடியினால், பல கிறிஸ்தவர்கள் இதை தீங்கு பற்றி மட்டுமே பேசுகிற ஒரு எதிர்மறையான புத்தகம்  (a book of pessimism) என்று கருதுகின்றனர். ஞானத்தினால் எந்த பயனும் இல்லை என்று ஆசிரியர் சொல்கிறாரோ எனு நாம் நினைக்கக் கூடும். ஆயினும், வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது, நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குகிற உண்மையான ஞானத்தை நாம் தேவனிடத்திலும் அவருடைய வார்த்தையிலும் மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். சாலமோன் திரும்பத் திரும்பச் சொல்வது போல, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு” (நீதி.1:7; 9:10). தேவனிடத்தில் இருந்து வரும் ஞானத்திற்கு எதிராக பிரசங்கி பேசவில்லை. மாறாக, தேவனுக்கு இடம் கொடுக்காத மனித ஞானத்தைப் பற்றி அவர் நம்மை எச்சரித்து, ஒருவர் முழுவதும் மனித ஞானத்தை சார்ந்து இருக்கும்போது வாழ்க்கை எப்படி மாயையாக இருக்கும் என்பதையும் விளக்குகிறார். தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டுப் பெறவேண்டும் என்று யாக்கோபு நம்மை உற்சாகப்படுத்துகிறார். ”பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது” என்று அவர் சொல்கிறார் (யாக்.1:5; 3:17). தத்துவ கோட்பாடுகள் கேட்பதற்கு இனிமையானதாக சுவராசியமானதாகவும், வாழ்க்கையின் சிக்கலான தன்மையைப் புரிந்து கொள்ள உதவக் கூடும். ஆனால், நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வை அவை தருவதில்லை. தேவனிடத்தில் இருந்து வருகிற ஞானமானது, நம் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும், நம் வாழ்க்கை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்படி புரிதலையும் வழிகாட்டுதலையும் நமக்குத் தருகிறது.

பயன்பாடு: தேவனிடம் இருந்து என்னை வழிவிலகப் பண்ணுகிற பொய்யான மற்றும் மனித ஞானம் குறித்து நான் கவனமாக இருக்க வேண்டும். மனித ஞானமானது சில நேரங்களில் துக்கத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது. ”இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (1 கொரி.3:19). கிறிஸ்துவில் என் வாழ்வின் நோக்கத்தை நான் கண்டடையும் வரைக்கும் , என் வாழ்க்கையானது மாயையாக இருக்கிறது.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, தேவ ஞானத்தின் ஆசீர்வாதமான தன்மையைப் பற்றி புரிந்து கொள்ள எனக்கு உதவுகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, நீரே எனக்கு ஞானமாக இருக்கிறீர். பரிசுத்த ஆவியானவரே, ஜனங்கள் கிறிஸ்துவில் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுகொள்ள உதவும்படி என்னைப் பலப்படுத்தியருளும். ஆண்டவரே, நான் ஞானமாக வாழவும்,  உம் மகிமைக்காக என் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 235

No comments: