வாசிக்க: யோபு 41,42; சங்கீதம் 52; ரோமர் 14
வேத வசனம்: ரோமர் 14: 1. விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
கவனித்தல்: எது சரி அல்லது தவறு என்பதை வலிமையானவர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பதை
நாம் பல இடங்களில் காண்கிறோம். உலகமெங்கிலும், பலவீனமானவர்கள் மற்றும் அவர்களைப் பற்றிய
காரியங்கள் கவனிக்கப்படமலேயே போகின்றன. விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிறவர்களை
எப்படி நடத்துவது என்பது பற்றிய நடைமுறை ஆலோசனைகளை ரோமர் 14 நமக்குத் தருகிறது. பவுல்
தரும் முதலாவது ஆலோசனை என்னவெனில், விசுவாசத்தில் பலவீனரை நாம் வெறுத்து ஒதுக்காமல்
அவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். ”கிறிஸ்து நம்மை
ஏற்றுக்கொண்டதுபோல,” நாம் ஒருவரை ஒருவர் எற்றுக் கொள்ள வேண்டும் (ரோமர் 15:7). நாம் பலவீனரின்
மன ஐயங்களைக் குற்றப்படுத்துகிறவர்களாகவும், சர்ச்சைக்குரிய காரியங்களில் வாக்குவாதம்
பண்ணிக் கொண்டிருக்கிறவர்களாகவும் இருக்கக் கூடாது. பலவீனரை ஏற்றுக் கொள்வதற்கு பவுல்
பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்: தேவன் எவ்வித பாகுபாடும் காட்டாமல் அனைவரையும்
ஏற்றுக் கொள்கிறார் (வ.3). தேவன் ஒருவரை தமக்குச் சொந்தமானவராக ஏற்றுக்கொள்ளும்போது,
நாம் அவர்களை வெறுத்து ஒதுக்க எந்த உரிமையும் இல்லை. கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்து
உயிரோடே எழுப்பப்பட்டார் (வ.9). அதன் பின்,
ஒரு பலவீனமான விசுவாசி கிறிஸ்துவில் ஒரு சகோதரர் அல்லது சகோதரி என்பதை நினைவுபடுத்துகிறார்.
கடைசியாக, ”நாமெல்லாரும் (இதில் விசுவாசத்தில்
பலவீனரும் அடங்குவர்) கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக
நிற்போமே” என்று பவுல் சொல்கிறார் (வ.10). ஆகவே நாம் மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காமலும்,
பலவீனருக்கு முன்பாக தடுக்கலையும் இடறுதலையும் போடக் கூடாது. நாம் பலவீனரை விசனப்படுத்தவோ,
அவர்களை இடறப்பண்ணவோ கூடாது. உணவு மற்றும் நாட்களை அனுசரித்தல் போன்ற காரியங்களில்
கிறிஸ்தவர்களிடையே வாக்குவாதங்கள் (அ) சர்ச்சைகள் இருப்பது நவீன கால பிரச்சனை அல்ல.
அது ஆதித் திருச்சபையிலும் இருந்தது.
பலவீனரின் கருத்துக்களை
கேலி செய்து இழிவுபடுத்துவது மிகவும் எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ வாழ்வில்
நோக்கம் அதுவல்ல. தேவனுடைய மற்றும் அவருடைய ராஜ்ஜியத்திற்கடுத்த காரியங்களில் கிறிஸ்தவர்களாகிய
நாம் நம் கவனத்தை செலுத்த வேண்டும். ”தேவனுடைய ராஜ்யம் புசிப்பும்
குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும்
சந்தோஷமுமாயிருக்கிறது “ (வ.17). நாம் செய்கிற எல்லா காரியஙகளிலும், தேவனுக்குப்
பிரியமானவைகளை நாம் செய்யும்படி தேவனுடைய அன்பு நம்மை ஆளுகை செய்யவும் வழிநடத்தவும்
நாம் அனுமதிக்க வேண்டும். ”சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்” செய்யும்படி பவுல் அனைத்து கிறிஸ்தவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். தன் விசுவாசத்தில்
பலவீனமாக இருக்கும் ஒருவரை நாம் கேலி செய்யக் கூடாது. மாறாக, இயேசு அவர்களுக்கு
என்ன செய்வாரோ அதையே நாமும் செய்ய வேண்டும். நம் கவனம் தேவைப்படாத சிறிய காரியங்களில்
நம் கருத்துக்களை சரி என்று நிரூபிப்பதற்காக நம் நேரத்தை செலவழித்து வீணடிக்கக் கூடாது.
நம் செயல்கள் அன்பின் அடிப்படையிலானதாக இருக்க
வேண்டும். விசுவாசத்தில் பலவீனமாக இருக்கும் ஒருவரை நாம் பார்க்கும்போது/சந்திக்கும்போது
நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போமாக.
பயன்பாடு: இயேசு தன்னிடத்தில் வருகிற
எவரையும் புறம்பே தள்ளுகிறதில்லை (யோவான் 6:37). ஆகவே, கிறிஸ்து என்னை ஏற்றுக் கொண்டது
போல, நான் அனைவரையும் நேசித்து, குறிப்பாக, விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிறவர்களை
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெபம்: இயேசுவே, என்னை உம் மகனாக/மகளாக
ஏற்றுக் கொண்டதற்காக நன்றி. விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிறவர்களை நான் என் சகோதரனாக/சகோதரியாக
பாவிக்க எனக்கு உதவும். ஆண்டவரே. விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிறவர்களை நேசித்து உதவி
செய்யவும், மற்றும் தேவனை மகிமைப்படுத்தி வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 234
No comments:
Post a Comment