வாசிக்க: யோபு 39,40; சங்கீதம் 51; ரோமர் 13
வேத வசனம்: சங்கீதம் 51: 3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை
அறிக்கையிடுகிறேன்.
கவனித்தல்: தேவனுடன் ஒப்புரவாக விரும்புகிற ஒரு பாவியின் இருதயத்தை சங்கீதம் 51 வெளிப்படுத்துகிறது.
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதர் என தாவீது இன்றும் நினைவுகூறப்படுகிறார். ஆயினும்,
தாவீதின் வாழ்க்கையில் அவர் பத்சேபாளுடன் செய்த பாவம் ஒரு கறையாக இருந்தது (2 சாமு.11).
தன் வாழ்நாளெல்லாம் தாவீது தன் பாவத்தின் பின்விளைவுகளை அனுபவித்தார். தேவனால் ஏற்படுத்தப்பட்ட
அரசனாகிய தாவீது, தேவனுக்கு உண்மையுள்ளவராக, அவர் சொல்படி நடக்க வேண்டியவராக இருந்தார்.
தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலம், தேவன் தாவீதைக் கடிந்துகொண்டார். தேவன் தன் பிரியமான
ஊழியக்காரனின் பாவத்தைக் கண்டும் காணாதவராகவோ அல்லது நியாயப்படுத்துகிறவராகவோ இருக்கவில்லை.
தாவீதும் உடனே மனம் திரும்பி, கர்த்தருக்கெதிரான தன் பாவத்தை அறிக்கை செய்தார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும்
தீர்வு காண்பதற்கான முதல்படி என்னவெனில், நம் கவனம் தேவைப்படுகிற ஒரு பிரச்சனை இருக்கிறது
என்பதை ஒப்புக் கொள்வது ஆகும். நாத்தான் மூலமாக தேவன் தாவீதை எதிர்த்து கேள்வி கேட்டபோது,
தாவீது தன் இரகசிய பாவத்தை நியாயப்படுத்தி சாக்குபோக்கு சொல்லாமல் தாமதமின்றி பாவத்தை
அறிக்கை செய்தான். அவன் வெளிப்படையாக சொல்லுகிறவரைக்கும் அவனுடைய விபச்சாரப் பாவம்
குறித்து மற்றவர்கள் அறிந்திருக்காமல் இருந்திருக்கக் கூடும். தன் மீறுதல்களை அறிந்திருக்கிறேன்
என்றும் அது எப்பொழுதும் தனக்கு முன்பாக இருப்பதாகவும் தாவீது அறிக்கை செய்தார். நாம்
வேண்டுமென்றே/தெரிந்தே/மனப்பூர்வமாக பாவம் செய்யும்போது, அது எப்பொழுதும் நமக்கு முன்பாக/எதிராக
இருக்கிறது. அதன் பின்பு, தாவீதின் பாவம்
உரியா மற்றும் பத்சேபாளுக்கு எதிரானது என்றாலும், அவன் தேவனுக்கு விரோதமாக தான் பாவம்
செய்ததாக அறிக்கை செய்கிறான். நாம் பாவம் செய்வோம் எனில், அது நேரிடையாக தேவனுக்கு
எதிரானது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். தாவீது தேவனுடைய பிரமாணத்தை மீறினார் (யாத்.20:13-14,
17). ஆகவே, அவர் தேவனிடம் கேள்விகேட்காமல், அவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார். பிதாவாகிய
தேவனிடம் நாம் திறந்த மனதுடன் செல்லும்போது, அவர் தம் கிருபையுடன் நம்மை வரவேற்கிறார்.
கெட்ட குமாரன் மனம் திரும்பி தன் தகப்பனிடம் திரும்பிச் சென்று, “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும்
பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு
நான் பாத்திரன் அல்ல” என்று அறிக்கை செய்த போது, அந்த தகப்பன் செய்ததை நாம்
நினைவு கூர்வோம் (லூக்.15:21). இவ்விதமாக, மனம் திரும்பி தன் பாவங்களை அறிக்கை செய்கிற
பாவியை தேவன் வரவேற்கிறார். நம் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்யும்போது, மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் பெறுகிறோம் (1
யோவான் 1:9).
பயன்பாடு: “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும்
சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்று வேதம் கூறுகிறது (கலா.5:24).
நான் பாவ சோதனைகளை எதிர்கொள்ளும்போது, பாவம் தரக்கூடிய உடனடி தற்காலிக சந்தோஷங்களைப்
பார்ப்பதற்குப் பதிலாக, பாவத்தினால் உண்டாகக் கூடிய நீண்டகால பின்விளைவுகளை நினைத்துப்
பார்க்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க
எனக்கு உதவி செய்கிறார்.
ஜெபம்: தந்தையாகிய தேவனே,
என்னை ஏற்றுக் கொண்டு, உம் மன்னிப்பைத் தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நம்
அன்பின் உறவை எதுவும் குலைத்துப் போட்டு விடாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க எனக்கு
உதவும். ”தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” இயேசுவே, பாவத்திற்கு
எதிர்த்து நிற்கவும், தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழவும் என்னைப் பலப்படுத்தியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 233
No comments:
Post a Comment