வாசிக்க: யோபு 35,36; சங்கீதம் 49; ரோமர் 11
வேத வசனம்: ரோமர் 11: 33. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள்
அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
34. கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
35. தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு
ஒன்றைக் கொடுத்தவன் யார்?
36. சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும்
இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
கவனித்தல்: ரோமர் 11ம் அதிகாரத்தின் கடைசி வசனங்களில்,
தேவனைத் துதித்து ஆராதிக்கும் பவுலின் துதிப் பாடலை நாம் காண்கிறோம். ரோமர் 1-11 வரையிலான
அதிகாரங்களில், பவுல் பின்வரும் காரியங்களை உறுதிபடக் கூறுகிறார்: எல்லோரும் (யூதர்கள்
மற்றும் புறஜாதியினர் இருவரும்) தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்து தேவ மகிமையை இழந்த
நிலை, இரட்சிப்புக்கான தேவை, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்
மூலமாக இரட்சிப்புக்கான தேவனுடைய திட்டம், கிறிஸ்துவுடனான நம் ஐக்கியம், பாவப் பிரமாணத்தில்
இருந்து விடுதலை, தேவனுடைய பிள்ளைகளாக நம் ஆசீர்வாதம், மற்றும் விசுவாசம் மூலமாக நாம்
பெறுகிற தேவ நீதி. தொடர்ந்து எழுதுவதற்கு முன், பவுல் ஒரு இடைவெளி கொடுத்து, ஓய்வு
எடுத்து, துதிப் பாடலினால் தேவனை ஆராதிக்கிறார். தேவனுடைய ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றைப்
பற்றி சிந்திக்கையில், பவுல் முதலாவது தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். அதன்
பின், (அனைவருக்கும் பதில் தெரிந்த அல்லது பதில் சொல்லத் தேவை இல்லாத) இரு சொல்லாட்சிக்
கேள்விகளைக் கேட்கிறார். தேவன் நம்மிடம் இருந்து பெறவேண்டும் என்கிற தேவை உள்ளவர்
அல்ல; நாம் கொடுப்பதில் தேவனை மிஞ்ச முடியாது. ரோமர் 11:36ல் பவுல் தன் இறையியல் புரிதலை
சுருக்கமாகக் கூறுகிறார்: தேவன் நம் சிருஷ்டிகர்
மற்றும் அனைத்தையும் தாங்குகிறவர்; அனைத்தும் தேவனுக்குச் சொந்தமானவை ஆகும். ஒரு துதி
மற்றும் ஆராதனைப் பாடலுடன் பவுல் ரோமர் 11ம் அதிகாரத்தை நிறைவு செய்கிறார். தேவனைப்
பற்றிய நம் நம்பிக்கைகள் மற்றும் தேவனுக்கு நாம் செய்யும் ஆராதனை ஆகியவை ஒன்றுக்கொன்று
தொடர்புடையதும் பிரிக்கமுடியாததும் ஆகும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 20ம்
நூற்றாண்டில் சிறந்த இறையியல் வல்லுனர்களில் ஒருவரான ஜான் ஸ்டாட் அவர்கள் சொல்லுவதென்னவெனில்,
“தேவனைப் பற்றிய உண்மையான அறிவு என்பது, பவுலின் வாழ்க்கையில் நடந்தது போல, எப்பொழுதுமே
நம்மை ஆராதிப்பதற்கு வழிநடத்துகிறதாக இருக்கிறது. தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி
அடிபணிந்து முகங்குப்புற விழுந்து வணங்குவதே நாம் செய்ய வேண்டியது ஆகும்.” தேவனை
ஆராதிப்பதற்கு வழிகாட்டாத இறையியலும், இறையியலே இல்லாத ஆராதனையும் ஆபத்தானவை ஆகும்.
நம் இறையியல் புரிதலானது தேவனுக்கு முன்பாக நாம் யார் என்பதையும், அவர் நமக்கு
என்ன செய்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இறுதியாக, ”அவருக்கே, (தேவனுக்கே) என்றென்றைக்கும்
மகிமையுண்டாவதாக” என்று சொல்ல நம்மை வழிநடத்துகிறதாகவும் இருக்கிறது.
பயன்பாடு: தேவனுடைய ஞானம் மற்றும்
அறிவு ஆகியவைகளின் மகத்துவத்தை என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய
நியாயத்தீர்ப்புகள் மற்றும் வழிகளைக் குறித்து நினைக்கையில், நான் செய்யக் கூடியதெல்லாம்
ஆச்சரியப்பட்டு நிற்பதுதான். அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார். கொடுப்பதில் நான்
தேவனை விட அதிகமாகக் கொடுத்துவிட முடியாது. தேவன் தம்மிடம் இருப்பதிலேயே சிறந்ததை
எனக்குத் தந்திருக்கிறார். அவர் என் சிருஷ்டிகர்.
தம் குமாரனாகிய இயேசுவின் மூலம் தேவன் என்னை இரட்சித்து, தம் வல்லமையுள்ள வார்த்தையினால்
என்னை நிலைநிறுத்துகிறார். மகிமையையும், கனத்தையும் மற்றும் வல்லமையையும் பெற்றுக்
கொள்ள அவர் பாத்திரராக இருக்கிறார். நான் அவரை எல்லாக் காலத்திலும் ஆராதிப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உம் அன்பிற்காக, நீர் எனக்கு செய்துவருகிற எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி. என்னை
இரட்சித்து உம் இரக்கம் மற்றும் கிருபைக்காக நன்றி. இயேசுவே, தேவ மகிமைக்காக வாழ
எனக்கு உதவியருளும். ”அவருக்கே என்றென்றைக்கும்
மகிமையுண்டாவதாக.” ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 231
No comments:
Post a Comment