Monday, August 30, 2021

பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள்

வாசிக்க: உன்னதப்பாட்டு 1,2; சங்கீதம் 59; 1 கொரிந்தியர் 5

வேத வசனம் 1 கொரிந்தியர் 5: 6. நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7.
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
8. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

கவனித்தல்:  1 கொரிந்தியர் 5ம் அதிகாரத்தில், கொரிந்து சபையில் இருந்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனை பற்றி பவுல் பேசுகிறார். கொரிந்து விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை பற்றி பெருமை பேசிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், பவுல் அவர்கள் பெருமை பேசுவதற்கு எதிராகக்  கேள்வி எழுப்புகிறார். கொரிந்து விசுவாசிகள் செய்த தவறு என்ன? ஒரு விசுவாசியின் பாலியல் ரீதியிலான ஒழுக்கக் கேட்டை அவர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்தார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும் என்று சில கிறிஸ்தவர்கள் கேட்கக் கூடும். கொரிந்து சபையினர் அந்த மனிதனின் பாவம் குறித்து அறிந்திருந்தார்கள். ஆயினும், அவர்கள் அந்த மனிதனை எதிர்க்கவோ அல்லது சபையில் கலந்து கொள்வதைத் தடுக்கவோ செய்ய வில்லை. அப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது சபையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது சம்பந்தப்பட்ட நபர் மனம் திரும்பி தேவனுடன் ஒப்புரவாக ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். மற்ற விசுவாசிகளும் கொடிய பாவங்களைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டு, பாவம் செய்வதில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஆகவே, பவுல் தன் கருத்தை தெளிவாக விளக்கும்பொருட்டு, அனைவருக்கும் தெரிந்த பிசைந்த மாவைப் புளிக்க வைக்கும் புளித்த மா பற்றிய உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கு”வது போல, ஒரு மனிதனின் பாவமானது, சபை அதை முறையாக கையாள வில்லை எனில், மொத்த சபையையும் பாதிக்கக் கூடும். தேவனுடைய சபையானது ஒரு மனிதன் மற்ற விசுவாசிகளைக் கறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆகவே, ஒழுக்கக் கேடான ஒரு வாழ்க்கையை வாழ்கிற மனிதனை விட்டு சபையானது விலக வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் பழைய புளித்த மாவை, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர்களைத் தீட்டுப்படுத்திய பழைய பாவ பழக்க வழக்கங்களை களைந்து போட வேண்டும், அவைகளை தங்களை விட்டு விலக்க வேண்டும். அதற்குப் பதிலாக, கிறிஸ்துவில் அவர்கள் யார் என்பதை ஏற்றுக் கொண்டு அறிக்கையிட வேண்டும். நம்மை பரிசுத்தப்படுத்துகிற நம் ஆண்டவரின் தியாகத்தை நாம் கொண்டாடும்போது, நாம் அதை துப்புரவோடும்(தூய மனதுடனும்) உண்மையோடும் செய்ய வேண்டும்.  நம் மாம்சத்தின் பாவ இச்சைகளைத் திருப்தி செய்து கொள்வதற்கு நாம் நம்மை அனுமதிக்கக் கூடாது. மாறாக, நம் பழைய பாவ மனுஷனை கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறைந்து, கர்த்தராகிய இயேசுவைத் தரித்துக் கொள்ள வேண்டும்.

பயன்பாடு:, மற்றவர்கள் பாவம் செய்தாலும், சபையில் பாவங்களை சகித்துக் கொள்வதன் பின்விளைவுகளைக் குறித்து ஒரு கிறிஸ்தவராக நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் நான் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறேன்.  நான் பிசாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது. “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு” என்று வேதாகமம் கூறுகிறது (2 தீமோ.2:22). நான் விசுவாசத்தினால், கிறிஸ்துவுடனே கூட வாழ்கிறேன்.

ஜெபம்: இயேசுவே, தேவனுடனான ஒரு தனிப்பட்ட உறவு, அவருடைய மன்னிப்பு, மற்றும் அன்பை நான் பெற்றனுபவிக்க உதவும் உம் தியாக மரணத்திற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, பாவத்தின் ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பாவத்தில் என்னைச் சிக்கவைக்கும் எதையும் என்னை விட்டு அகற்றவும் எனக்கு உதவியருளும். என் தேவனே, உமக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்புகிறேன். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 241

No comments: