வாசிக்க: யோபு 37,38; சங்கீதம் 50; ரோமர் 12
வேத வசனம்: ரோமர் 12: 2. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று
பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
கவனித்தல்: “என் வாழ்க்கையைக் குறித்த
தேவனுடைய சித்தம் மட்டும் எனக்குத் தெரிந்திருக்குமானால், நான் வேறுவிதமாக வாழ்ந்திருப்பேன்”
என்று சில கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவது எளிது
அல்ல என்று அவர்கள் சொல்லக் கூடும். கிறிஸ்தவ வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த
தேவனுடைய திட்டம் இன்னதென்று அறிந்து கொள்ளும்படி அடிக்கடி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவது எப்படி என்பதற்கான முறையான வழிகாட்டுதலை அவர்கள்
பெறுவதில்லை. ரோமர் 12ம் அதிகாரத்தில், தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கு இரண்டு
நடைமுறை ஆலோசனைகளை பவுல் தருகிறார். பவுலின் முதலாவது ஆலோசனை என்னவெனில், “இந்த பிரபஞ்சத்திற்கு
ஒத்த வேஷந்தரியாமல்” இருங்கள் என்பதாகும். இந்த உலகில் நம் வாழ்கையில், மற்றவர்களைப்
போல நாமும் உலகப் பிரகாரமான பலன்களைப் பெற்றனுபவிப்பதற்கு அனுதினமும் சோதிக்கப்படுகிறோம். உலக ஜனங்கள் தாங்கள்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில காரியங்களை செய்வதாகப் பாசாங்கு காட்டுகிறார்கள்.
இந்த மாய்மாலத்திற்கு எதிராக பவுல் எச்சரிக்கிறார். இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரித்தல்
என்பது எல்லா காலங்களிலும் வாழ்க்கையை உள்ளபடி காட்டுவதில்லை. துவக்கத்தில், உலகத்திற்கு
ஒத்த வேஷந்தரித்தல் என்பது காரியங்களைச் சாதித்துக் கொள்ள மிகவும் எளிதான ஒரு வழி
என்பதாகத் தோன்றலாம். ஆயினும், கிறிஸ்தவர்களாகிய நாம் உலகப்பிரகாரமான எல்லா நடைமுறைகளையும்
பின்பற்ற முடியாது/கூடாது. யாக்கோபு சொல்வது போல, ”உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?” (யாக்.4:4). கிறிஸ்தவர்கள்
தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைய வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
நாம் மறுரூபமடைவது எப்படி? இந்த மறுரூபமடைதல்
என்பது வெளிப்புறத் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களில் உள்ள மாற்றம் மட்டுமல்ல. இது
நம் மனதைப் புதிதாகுகிறதை உள்ளடக்கிய ஆன்மீக/ஆவிக்குரிய மறுரூபம் ஆகும். இந்த மறுரூபமானது நாம் தேவனுடைய வார்த்தை மற்றும்
சித்தத்திற்கு ஏற்ப நம் சிந்தனை முறைகளை மாற்றி அமைக்க நமக்கு பலமளிக்கிறது. நம் மனம்
புதிதாகி மறுரூபமடைய நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, நம் வாழ்க்கையைப் பற்றிய தேவனுடைய
சித்தத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். அனேகர் எதாவது ஒன்றை இதுதான் தேவனுடைய சித்தம்
என்று யூகித்துக் கொண்டு, தங்கள் ஆன்மீக வாழ்வில் தடுமாறுகிறார்கள். இங்கே, நாம் தேவனுடைய
சித்தத்தை பகுத்தறிய முடியும் என வசனம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய
ஆவியானவரும் தேவனுடைய சித்தம் இன்னதென்பதை சோதித்து பகுத்தறிய நமக்கு உதவுகிறார்கள்.
நம் மறுரூபத்திற்கு முடிவே இராது; அனுதினமும்,
நாம் ”ஆவியாயிருக்கிற கர்த்தரால்…மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி.3:18).
பயன்பாடு: நான் உலகப்பிரகாரமான மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளை உலகப் பிரகாரமான காரணங்களுக்காக
பின்பற்றக் கூடாது. உலகப்பிரகாரமான ஜனங்கள் சிந்திப்பது போல நான் சிந்திக்கக் கூடாது.
தேவனுடைய வார்த்தையுடன் இணங்கிச் செல்லும்படி என் சிந்தனை முறையானது மாற்றியமைக்கப்பட
வேண்டும். நான் சிந்திக்கும் முறையை மாற்றிக் கொள்ளும்போது, தேவனுடைய சித்தத்தை அறிந்து
கொள்ளுதல் என்பது மிகவும் எளிதானதாக மாறிவிடுகிறது. நான் தேவனுடைய சித்தத்தை பகுத்தறியவும், தேவனுக்குப் பிரியமாக வாழவும் முடியும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உம் சித்தத்தை நிறைவேற்றும்படி என் வாழ்க்கையை,
சிந்தனையை, பழக்கவழக்கங்களை மற்றும் விருப்பங்களை மாற்றியதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே,
உலகச் சோதனைகளை மேற்கொள்ளவும், உம் மகிமைக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 232
No comments:
Post a Comment