வாசிக்க: பிரசங்கி 9,10; சங்கீதம் 57; 1 கொரிந்தியர் 3
வேத வசனம்: 1 கொரிந்தியர் 3: 3. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
4. ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள்
மாம்சத்திற்குரியவர்களல்லவா?
கவனித்தல்: கொரிந்து சபையின் முக்கியமான
பிரச்சனைகளில் ஒன்றைப் பற்றி 1 கொரிந்தியர் 3ல் அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிறார். கொரிந்து
சபை விசுவாசிகளிடையே பொறாமை, வாக்குவாதங்கள் மற்றும் பிரிவினைகள் காணப்பட்டது. ஆதிச்சபையின்
சிறந்த தலைவர்கள் குறித்த தங்கள் பற்றுதல்/தொடர்பு குறித்து அவர்கள் பெருமை பாராட்டி,
ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் உலகப்பிரகாரமான மக்களைப்
போல செயல்பட்டு, முதிர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பவுல் அவர்களை கடுமையாக
கடிந்து கொண்டார். கொரிந்து சபையில் உள்ள
விசுவாசிகள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாகும்படி அழைக்கப்பட்டவர்கள்
என்பது உண்மைதான். ஆயினும், அவர்கள் பின்பற்ற விரும்பிய சபைத் தலைவர்களைப் பற்றிய
விருப்பத்தின் அடிப்படையில் அவர்களிடையே பிரிவினைகள் இருந்தன. பவுல் அதை அபத்தமான
ஒரு காரியம் என்றும், அந்த தலைவர்கள் அல்ல, கிறிஸ்துவே அவர்களுக்காக மரித்தவர்
என்பதை தெளிவுபடுத்தினார் (1 கொரி.1,3). கொரிந்து விசுவாசிகள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறார்கள்
என்றும், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடையே வாசம் செய்கிறார் என்றும் பவுல் அவர்களுக்கு
நினைவுபடுத்தினார். கொரிந்து விசுவாசிகளிடையே தங்கள் தலைவர்களைக் குறித்து மேன்மை
பாராட்டுதல் இருக்கக் கூடாது என்று பவுல் அறிவுறுத்தினார். அந்த தலைவர்கள் சாதாரண மனிதர்கள் மற்றும் தேவனுக்கு
உடன் வேலையாட்களுமாக இருக்கிறார்கள். மறுபுறம், கிறிஸ்து தேவனுடையவராக இருப்பது போல
எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவினுடையவர்களாக இருக்கிறார்கள்.
“நீங்கள் எல்லாரும் ஒரே வேதாகமத்தைத் தானே நம்புகிறீர்கள்;
பின்பு ஏன் உங்களிடையே இவ்வளவு பிரிவினைகள், பிரிவுகள்” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு
ஜனங்கள் கிறிஸ்தவத்தை தாக்குகிறார்கள். அக்கேள்விகளுக்கு
பதிலளிக்கையில், அத்தகைய பிரிவினைகளுக்கு எது காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து
கொள்ள வேண்டும். அபத்தமான காரியங்கள் அல்லது உலகப்பிரகாரமான நடைமுறைகள் எதுவும் நம்மிடையே
பிரிவினையை உண்டாக்க கிறிஸ்தவர்களாகிய நாம் அனுமதிக்கக் கூடாது. மற்ற சக மனிதர்களுடன்
அல்ல, கிறிஸ்துவுடன் மட்டுமே நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி
செய்வதன் மூலம், நாம் மனிதர்களால் வரும் ஏமாற்றங்களுக்கு நம்மை விலக்கி பாதுகாத்துக்
கொள்கிறோம். நாம் கிறிஸ்துவினுடையவர்கள்.
இது எவ்வளவு அற்புதமானது!
பயன்பாடு: நான் சாதாரணமான ஒரு நபராக
இருந்தாலும், நான் ஆராதிக்கும் தேவன் தனித்துவமானவர். சுயநலமான மற்றும் உலகப்பிரகாரமான
நடைமுறைகளை நான் பின்பற்றக் கூடாது என அவர் எதிர்பார்க்கிறார். நான் வியந்து போற்றும்
தலைவர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவராக
இருக்க வேண்டும். நான் கிறிஸ்துவினுடையவன்(ள்).
ஜெபம்: இயேசுவே, உம் பரிசுத்த
ஜனமாக வாழும்படி என்னை அழைத்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, தேவனோடும் மனிதரோடும் என்னை இணைத்த
உம் தியாகபலிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியானவரே, எனக்குள் நீர்
வாசம் செய்வதற்காக உமக்கு நன்றி. என் தேவனே, உம்மை விட்டு என்னைப் பிரிக்கிற அனைத்து
காரியங்களில் இருந்தும் என்னைப் பாதுகாத்தருளும். அன்பின் ஆண்டவரே, உமக்குச் சொந்தமானவனா(ளா)க
வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 239
No comments:
Post a Comment