வாசிக்க: பிரசங்கி 11,12; சங்கீதம் 58; 1 கொரிந்தியர் 4
வேத வசனம்: பிரசங்கி 11: 5. ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின்
வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
கவனித்தல்: அறிவு என்பது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய
ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். நவீன தொழில்நுட்பமானது நாம் விரும்புகிற தகவலை நொடிப்பொழுதில்,
விரல்நுனியில் கண்டு கொள்ள நமக்கு உதவுகிறது. அறிவியலின் உதவியுடன் நாம் எல்லாவற்றையும்
அறிந்து கொள்ள முடியும் என்று பலர் நம்புகின்றனர். அறிவியல் எல்லா காரியங்களுக்கும்
பதில் தருகிறதா? ஆம். என் பதிலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மனித வாழ்க்கையைப்
பற்றிய மறைவான சில காரியங்களுக்கு இப்பொழுது எந்த பதிலும் இல்லை என்று அறிவியல் கூறுகிறது
(உதாரணமாக, மனித மூளையின் செயல்பாடு). நம் இருதயமானது செயல்படுவதற்கான சக்தியை எங்கிருந்து
பெறுகிறது என்பதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நவீன மருத்துவ உபகரணங்களின்
உதவியுடன், ஒரு தாயின் வயிற்றில் குழந்தை எப்படி வளர்கிறது என்பதைப் பார்க்கும் பாக்கியம்
நமக்கு கிடைத்திருக்கிறது. ஆயினும், மனித வாழ்க்கை தொடர்பான பல காரியங்களில் மனித
அறிவுக்கு ஒரு எல்லை உண்டு.
பிரசங்கியின் இறுதி வார்த்தைகள் இந்த எல்லையை
எதிரொலிப்பதாக இருக்கிறது. எல்லாம் மாயை என்று கண்டு கொள்ள உதவிய ஞானமானது, சிருஷ்டிகராகிய
தேவனின் கிரியைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவ வில்லை. இந்தப் புரிதலுடன், பிரசங்கி
புத்தகத்தை எழுதின ஞானி நம் ஞானத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கு சில ஆலோசனைகளைப்
பகிர்ந்து கொள்கிறார்: நீங்கள் மகிழ்ந்து, இருதய விருப்பத்தின் படி சென்று, கண்கள்
விரும்பியவைகளைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஒரு கடிவாளத்தைப் போடுங்கள்
(வ.9). தாமதம் செய்யாமல் உன் சிருஷ்டிகராகிய தேவனை நினைத்திடுங்கள் (பிரசங்கி
12:1-7). ”தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும்
விழுந்த கடமை இதுவே” என்று பிரசங்கி சொல்கிறார் (பிர.12:13). இது அனைவருக்கும்
எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான, காலத்தால் அழியாத செய்தி ஆகும். வாழ்க்கையின் நோக்கம்
மற்றும் அர்த்தத்தையும், நம் ஞானத்தின் உண்மையான பயனையும் தேவனிடத்தில் மட்டுமே நாம் கண்டு கொள்ள முடியும்.
பயன்பாடு: என் சிருஷ்டிகராகிய தேவன்
அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவரிடம் இருந்து நான் எதையும் மறைக்க முடியாது. என்
வாழ்க்கை மற்றும் செயல்கள் குறித்து நான் தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும். நான்
அவரிடம் சாக்குப்போக்குகள் சொல்லமுடியாது/சொல்லக்கூடாது. அனுதினமும் தேவனைத் தேடுதல்
என்பது என் கடமை ஆகும். நான் தேவனுடைய வார்த்தையை வெறுமனே கேட்கிறவராக மட்டும்
இல்லாமல், அதன் படி செயல்படுகிறவராகவும் இருக்க வேண்டும் (யாக்கோபு 1:22). கர்த்தருக்குப்
பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமும் முடிவுமாக (காரியத்தின் கடைத்தொகையுமாக) இருக்கிறது.
ஜெபம்: சிருஷ்டிகராகிய தேவனே,
நீர் என் தேவன் என்பதை அறிந்து கொள்ள தந்த நல்ல வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. இந்த
உலகத்தில் நான் அனேக காரியங்களைக் குறித்து அறியாமல் போகலாம். ஆனால், நீர் என்னை நேசிக்கிறீர்
என்பதை நான் அறிந்திருக்கிறேன். உண்மையான மெய்தெய்வமாகிய உம்மையும், நீர் எங்களுக்காக
அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். ஆண்டவராகிய இயேசுவே, உம்
அன்பில் இன்றும் என்றும் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 240
No comments:
Post a Comment