வாசிக்க: யாத்திராகமம் 13, 14; சங்கீதம் 32; மத்தேயு 16:13-28
வேதவசனம்: யாத்திராகமம் 13: 20. அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். 21. அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். 22. பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
கவனித்தல்: கடைசியாக, மிகவும் ஆச்சரியமான விதத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு புறப்பட்டு வாக்குத்தத்த தேசமாகிய கானானை நோக்கிய தங்கள் பயணத்தைத் துவங்கினர். நேரடியான மற்றும் சீக்கிரம் சென்று சேரக்கூடிய குறைந்த தூரம் ஒரு உள்ள வழியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, பலரும் பயணம் செய்ய விரும்பாத வனாந்திர வழியில் தேவன் அவர்களை நடத்தினார் (யாத்.13.17,18). ஆயினும், அவர்களின் அந்த புதிய பயணத்தின் துவக்கத்தில் இருந்தே, மேகஸ்தம்பம் மற்றும் அக்கினிஸ்தம்பம் மூலமாக தன் பிரசன்னத்தையும் வழிகாட்டுதலையும் தேவன் அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். தேவனுடைய வழிகாட்டுதலினால், பகலிலும் இரவிலும் கூட தேவ ஜனங்கள் நடந்து செல்ல முடிந்தது. மேகஸ்தம்பம் மூலமாக, தேவன் அவர்கள் முன்பாகச் செல்கிறார், அவர்களுடனே கூட இருக்கிறார் என இஸ்ரவேலர்கள் ஒரு நிச்சயத்தைப் பெற்றனர். இரவு நேரத்தில் தோன்றிய அக்கினிஸ்தம்பத்தினால், அவர்கள் இருளை அல்ல, வெளிச்சத்தையே அவ்வழியில் கண்டனர். மாறாக, எகிப்தியர் தங்கள் மனம் மாறி இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்து பிடிக்க வந்த போது, இஸ்ரவேலர்களுக்கு வெளிச்சம் காட்டி வழிகாட்டிய மேகஸ்தம்பமானது எகிப்தியர்களுக்கு இருளையும் அந்தகாரத்தையும் கொடுத்தது என்று பார்க்கிறோம் (யாத்.4:19,20). முடிவில், காய்ந்த வெட்டாந்தரையில் நடந்து செல்வது போல இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்து சென்றனர். ஆனால், பின் தொடர்ந்து வந்த எகிப்தியர்களோ தண்ணீரில் மூழ்கி மடிந்தனர். நம்மில் பலரும் நன்கறிந்த இந்த பழைய ஏற்ப்பாட்டுச் சம்பவம் நினைவுபடுத்துவது இதுதான்: உங்கள் சூழ்நிலையைக் கண்டு “பயப்படாதிருங்கள்,” மாறாக, கர்த்தரில் உறுதியாய் இருங்கள். “இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” (யாத்.14:13,14).
பயன்பாடு: நான் குறிப்பிட்ட ஒரு வழியில் செல்ல வேண்டும் என அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் என வழிநடத்துதலைத் தேவன் தரும்போது. நான் தேவனுடைய பிரசன்னம், வழிநடத்துதல் மற்றும் பாதுகாப்பை அந்த பயணம் முழுவதிலும்பெற முடியும் என்பதைக் குறித்து நிச்சயம் உள்ளவனாக இருக்க முடியும். நான் தேவனுடைய வெளிச்சத்தில், வழிகாட்டுதலில் நடக்கின்ற வரைக்கும், நான் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தில் இருப்பவனிலும் என்னில் இருப்பவர், என்னுடன் இருப்பவர் பெரியவர் என நான் அறிந்திருக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எப்பொழுதும் உம் ஜனங்களுடன் இருக்கிறீர் என்றும், அவர்களுடைய எதிரிகளுடன் யுத்தம் செய்கிறவர் நீர் என்றும் நினைவுபடுத்துவதற்காக நன்றி. ஆண்டவரே, நான் போகும் வழியை நீர் அறிந்திருக்கிறீர். உம் வழிநடத்துதலிலும், உம் வெளிச்சத்திலும் நடக்க எனக்கு உதவும் ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
1 பிப்ரவரி 2021
No comments:
Post a Comment