Friday, February 12, 2021

உங்கள் கருத்து என்ன?

  வாசிக்க: யாத்திராகமம் 35, 36; சங்கீதம் 43; மத்தேயு 22:1-22

வேதவசனம்:மத்தேயு 22:15. அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,16. தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் (அக்கறையில்லையென்றும்) அறிந்திருக்கிறோம். 17. ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்....அதற்கு அவர் (இயேசு): அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

கவனித்தல்: நம் அனுதின வாழ்வில் பயன்படக் கூடிய ஒன்றைப் போதிக்கும் மிகவும் சுவராசியமானதும், முக்கியமானதுமான ஒரு வேதப் பகுதியை நாம் இங்கு காண்கிறோம். பரிசேயர்கள் ரோம ஆட்சிக்கு எதிரானவர்கள், ஏரோதியரோ ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். ஆயினும், இந்த இரு குழுவினரும் சேர்ந்து வந்து, தீய நோக்கத்துடன் தந்திரமாக தங்கள் சூழ்ச்சியில் இயேசுவை  சிக்க வைக்க முயற்சிசெய்தனர். அவர்கள் இயேசுவைப் பற்றிச் சொன்னவை உண்மைதான் எனினும், உண்மையில் அது அவர்களுடைய தந்திரமான கேள்விக்கான பீடிகை ஆகும். இயேசு “ஆம்” ராயனுக்கு வரி செலுத்தலாம் என்று பதிலளித்திருந்தால், பரிசேயர்கள் அதைப் பயன்படுத்தி இயேசுவை ஒரு தேச விரோதியாக, யூதருக்கு எதிரானவராகக் காண்பித்திருப்பார்கள். அவர் வரி செலுத்தத் தேவை “இல்லை” என்று சொல்லி இருந்தால், ரோமர்களின் கோபத்துக்கு அவர் ஆளாக வேண்டி இருந்திருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் பக்திக்கடுத்த விஷயங்கள் சார்ந்த பொறுப்புகளிலும், மற்ற அலுவல் மற்றும் அரசாங்கம் சார்ந்த பொறுப்புகளிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற பதிலைச் சொன்னார். அது கேள்வி கேட்டவர்களை ஆச்சரியப்படுத்தினதுடன் அவர்களுக்கு திகைப்பைக் கொடுத்தது.  தன்னை இறைவனுடைய மகன் என்று தவறாக தன்னைப் பற்றி கூறிக்கொண்டு, ரோம நாணயத்தில் அதை எழுதிவைத்திருந்த ரோமப் பேரரசனாகிய இராயனுக்கும் இயேசுவின் பதிலில்  ஒரு செய்தி இருந்தது.. இயேசு தன்னைக் கேள்விகேட்டவர்களைத் திகைப்பில் ஆழ்த்தி, அவர்களை  எல்லாவற்றையும் முறையாக செய்யும்படி சிந்திக்கவும் வைத்தார். 

பயன்பாடு: ஜனங்கள் எதைக் குறித்தாகிலும் என் கருத்தைக் கேட்கும் போது, நான் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். நான் எதற்காகவும் என் நேர்மையை சமரசம் செய்து கொள்ளாமலும், எதுவும் அல்லது எந்த நபரும் என்னை வழிவிலகப் பண்ண விடாதிருக்க வேண்டும். முக்கியமாக, தவறான ஒன்றைச் செய்யும்படி மற்றவர்கள் என்னைத் தூண்டுகையில், அல்லது சோதிக்கையில், நான் என் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மாறாக, ஒரு தேவனுடைய பிள்ளையாக எனக்கு இருக்கும் தேவபக்திக்கடுத்த பொறுப்புகளுக்கும், ஒரு குடிமகனாக அரசாங்கம் அல்லது என் நாட்டுக்கடுத்த பொறுப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை வேறுபடுத்திக் காட்டவேண்டும். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தாலும், நான் தேவகிருபையால் இரட்சிப்பைப் பெற்றவன், நான் தேவனுடைய பிள்ளை. ஒரு கிறிஸ்தவராக, சொல்வேறு செயல் வேறு என நான் இருக்கக் கூடாது.

ஜெபம்: என் ஆண்டவராகிய இயேசுவே, என் பொறுப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள எனக்கு உதவினதற்காக உமக்கு நன்றி.  நான் நேர்மையான, மற்றும் குற்றம் சாட்டப்படாத ஒரு வாழ்க்கையை வாழ உம் பெலன் எனக்குத் தேவை. நான் சொல்லிலும் செயலிலும் உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்|
+91 9538328573



No comments: