வாசிக்க: லேவியராகமம் 19, 20; சங்கீதம் 55; மத்தேயு 28:1-10
வேதவசனம்: லேவியராகமம் 20: 23. நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்...26. கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.
கவனித்தல்: லேவியராகமம் புத்தகத்தில் உள்ள இன்றைய வேத வாசிப்புப் பகுதியில், இப்படியெல்லாம் செய்ய, சொல்ல வேண்டாம் என்று சொல்லும் பல சொற்றொடர்களையும், தேவனுடைய வார்த்தைகளின்படி நடக்காமல் போனால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகளைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். இவ்வசனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பத்து கற்பனைகளைக் குறிக்கிறதாக இருப்பதைக் காண்கிறோம். தேவனுடைய ஜனங்களின் பரிசுத்தத்தைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்பு பற்றிச் சொல்லும்போது, உலகப் பழக்க வழக்கங்களின் படி அவர்கள் வாழக் கூடாது என தேவன் அவர்களை எச்சரிக்கிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுபவர்களாக இருக்கவும், தேவன் உண்டுபண்ணின ஒழுங்கை விட்டு பிறழாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என அவர் விரும்புகிறார். தேவன் அருவருப்பானதாகக் கருதுகிற பாலியல் மற்றும் நல்லொழுக்கம் சார்ந்த சீர்கேடான பழக்க வழக்கங்கள் பற்றிய ஒரு பட்டியலை நாம் இங்கு காண்கிறோம். கானானிய தேசங்கள் இந்தச் சீர்கேடானப் பழக்கவழக்கங்களை எவ்வித வெட்கமுமின்றி தங்களுக்குள்ளே நடைமுறையில் அல்லது புழக்கத்தில் வைத்திருந்தனர். ஆதலால் தேவன் அவர்களை வெறுத்தார். தேவ ஜனங்கள் தனக்கு ஏற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். இங்கே, பரிசுத்தத்தைக் குறித்த எதிர்பார்ப்பு உலகின் பழக்கவழக்கங்களின்படி வாழ்வதைக் குறிக்கவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையின்படி வாழ்வதைக் குறிக்கிறது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்குச் சொந்தமான ஜனங்களில் ஒருவராக இருக்கும்படி நீர் என்னைத் தெரிந்து கொண்டதற்காக, பிரித்தெடுத்ததற்காக உமக்கு நன்றி. நான் இந்த உலகத்தில் வாழும் நாளெல்லாம், உம்மையும் உம்முடைய வார்த்தையையும் மற்றவர்களுக்குக் காட்டும்படி பரிசுத்தமானவனா(ளா)க இருக்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment