வாசிக்க: லேவியராகமம் 17, 18; சங்கீதம் 54; மத்தேயு 27:32-66
வேதவசனம்: மத்தேயு 27:46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
கவனித்தல்: இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது, அவரைச் சுற்றி இருந்தவர்களால் அவருடைய கதறலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜனங்களும், போர்வீரர்களும் மற்றும் பிரதான ஆசாரியரும் அவரைக் கேலி செய்து பரியாசம் பண்ணி, அவமதித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் எலியாவை உதவிக்காக அழைக்கிறார் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். மனித சித்திரவதைகளில் மிகவும் கொடூரமான ஒன்றான சிலுவையில் அறையப்படுதலை இயேசு அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அவர் சரீர வேதனையால் கதறவில்லை. மாறாக, முழு உலகத்தின் பாவங்களையும் அவர் சுமந்த போது தேவனிடம் இருந்து ஒரு கணம் பிரிந்திருப்பது என்பது மற்ற எதையும் விட மிகவும் வேதனையானதாக அவருக்கு இருந்தது. அதுவே அவரின் கதறலுக்கான காரணம். இயேசுவின் சிலுவை மரணம் மனிதகுல இரட்சிப்புக்கான தீர்க்கதரிசன நிறைவேறுதல் ஆகும். பாவ அடிமைத்தனத்தின் பிடியில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுடன் ஒரு நித்திய உறவைப் பெற்று அனுபவிப்பதற்காக, பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவானவர் பரிபூரண பலியாக தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார். அது அவரால் தாங்கக் கூடாததாக இருந்தாலும், நம்மைப் மரண பயத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க அவர் அதை ருசிபார்க்க வேண்டியதாயிருந்தது (எபி.2:14,15).
பயன்பாடு: தேவன் நம்மை/என்னை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை இயேசுவின் சிலுவை மரணம் கூறுகிறது. அவர் எனக்காக செலுத்திய விலை என்ன என்பதை கிறிஸ்துவின் சிலுவைமரணம் எனக்கு நினைவுபடுத்துகிறது. என் நித்திய இரட்சிப்பின் ஆதாரம் இயேசுவே! நான் இனி பாவத்திற்கு அடிமை அல்ல,ஏனெனில் கிறிஸ்து என்னை இரட்சித்திருக்கிறார். நான் இனி பயத்திற்கு அடிமை அல்ல, ஏனெனில் நான் தேவனுடைய பிள்ளை. நான் இயேசுவுக்குச் சொந்தமானவன். கிறிஸ்துவின் மூலமாக, அனுதினமும் நான் தேவ அன்பை ருசிபார்க்கவும், மற்றவர்களுக்கு தேவ அன்பைக் காண்பிக்கவும் முடியும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சிக்க நீர் காண்பித்த உம் அன்புக்காக உமக்கு நன்றி. உம்மைப் போல வேறு எவரும் இல்லை. ஆண்டவரே, நான் என்னை/என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் உம் மகிமைக்காக என்னை பயன்படுத்தியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment