வாசிக்க: லேவியராகமம் 7, 8; சங்கீதம் 49; மத்தேயு 25:1-30
வேதவசனம்:சங்கீதம் 49:16. ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 17. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
கவனித்தல்: தங்கள் ஐசுவரியம் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் பற்றிய ஒரு எச்சரிக்கையை சங்கீதம் 49 நமக்குத் தருகிறது. ஒருவர் தன் செல்வத்தை வைத்து எதை விலைகொடுத்து வாங்க முடியாது என்பதையும், செல்வத்தை நம்புகிறவர்களின் முடிவு பற்றியும் சங்கீதக்காரன் விளக்குகிறார். மேலும் சங்.49:16ல் வாசகருக்கான ஒரு அறிவுரை கொடுக்கப்படுகிறது. நாம் வாழ்கிற இந்த உலகத்தில், பணம் தான் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது என்று நம்மில் பலரும் கருதுகிறோம். சில விஷயங்களில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், பணத்தினால் ஒரு மனிதனை காப்பாற்ற முடியாது என்ற நடைமுறை எச்சரிக்கையை நாம் இங்கு காண்கிறோம். வெறும் பணத்தினால் ஒருவர் இன்னொருவருடைய வாழ்க்கையை மீட்கும் பொருளைக் கொடுக்க முடியாது. ஆனால் தேவன் தன் வாழ்க்கையை மீட்டுக் கொள்வார் என்ற தன் நம்பிக்கையை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார். உண்மையில், இயேசு அனேகரை மீட்கும்பொருளாக தன் ஜீவனை ஈடாகக் கொடுத்தார். ஆகவே, செல்வத்தின் மீது நம் கண்களை வைக்காமல் அல்லது உலக ஐசுவரியங்களின் மீது நம் நம்பிக்கையை வைக்காமல், தேவன் மீது நம் நம்பிக்கையை வைக்கவேண்டும். இயேசு சொன்னார், “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு 16:26).
பயன்பாடு: என்னிடம் பணம், ஐசுவரியம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் என் நம்பிக்கையை நான் எங்கு வைத்திருக்கிறேன் என்பது நித்தியம் வரை முக்கியமானதாக இருக்கிறது.என்னிடம் ஐசுவரியம் இருந்தால், அதை ஞானமாகவும் சரியாகவும் பயன்படுத்த எனக்கு சரியான புரிதல் தேவை. என்னிடம் ஐசுவரியம் இல்லை என்றால், அதை வைத்திருப்பவர்களைக் கண்டு நான் பயப்படவோ அல்லது பிரமித்துப் பார்க்கவோ கூடாது. தேவனே என் நம்பிக்கையும் பலனுமாக இருக்கிறார். உலக ஐசுவரியங்கள் எதுவும் ஒரு மனிதனை மீட்க முடியாது. சங்கீதக்காரன் சொல்வது போல, “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)”
+91 9538328573
No comments:
Post a Comment