வாசிக்க: யாத்திராகமம் 15, 16; சங்கீதம் 33; மத்தேயு 17:1-13
வேதவசனம்: யாத்திராகமம் 15:11. கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
கவனித்தல்: கர்த்தரை ஆராதிப்பதற்காக இஸ்ரவேலரை அனுப்பும்படி மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் கேட்ட போது, “அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை” என்று பார்வோன் பதில் சொன்னான் (யாத்.5:1,2).அதன் பின்னர் தேவன் எகிப்தியர் மீது அனைத்து வாதைகளையும் அனுப்பினார். அவ்வாதைகள் எகிப்தியரின் தெய்வங்கள் மீதான தேவனுடைய சர்வ வல்லமையைக் காண்பிக்கிறதாக இருந்தது. தேவன் திரும்பத் திரும்ப “நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிந்து கொள்வார்கள்” என்று சொல்வது கர்த்தரை அறியேன் என்று பார்வோன் சொன்ன பதிலுக்கான தேவனுடைய எதிர்வினை ஆகும். யாத்திராகமம் புத்தககத்தில், எந்த வல்லமையும், அதிகாரங்களும், மந்திர சக்திகளும் கர்த்தருக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியவில்லை என்று வாசிக்கிறோம். “உமக்கு ஒப்பானவர் யார்” என்ற இந்த கேள்வியானது ஆழமான அர்த்தமுள்ளதாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த பழைமையான புராதனப் பாடலானது, விடுதலையளிக்கும் தேவனுடைய வல்லமையான செயல்களை ரத்தினச் சுருக்கமாக மிகவும் அழகாகச் சொல்கிறது. தேவனே நீர், “ பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவர்.” தேவனைப் பற்றி இதை விடச் சிறப்பான ஒரு குறிப்பை எவரும் சொல்ல முடியுமா என நான் அறியேன். “உமக்கு ஒப்பானவர் யார்” என்று நான் என்னை நானே கேட்டுக் கொள்கையில், நான் சொல்லக் கூடிய ஒரே பதில், “ உம்மைப் போல வேறு யாரும் இல்லை” என் இயேசுவே!
பயன்பாடு: என் தேவன் தம் ஜனங்களை எந்தச் சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவும், அவரே கர்த்தர் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளச் செய்யவும் வல்லவராக இருக்கிறார். ஆயினும், என் வாழ்வில் நான் தேவனுடைய வல்லமையான செயல்களைக் காண, நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வழியின் படி அல்லது அவர் சொன்னதைப் பின்பற்றி நான் வாழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இஸ்ரவேலின் பரிசுத்தர்! தேவன் என் வாழ்விலும் என் மூலமாகவும் செயல்பட்டு அவருடைய மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்துவதன் மூலமாக, அவர் யார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளச் செய்கிறார். அவரால் செய்ய முடியாத காரியம் என எதுவும் இல்லை. கர்த்தரே தேவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்ளச் செய்யும்படி என் வாழ்க்கையை தேவன் பயன்படுத்த நான் அனுமதிக்க வேண்டும்.
ஜெபம்: பரிசுத்தமுள்ள தெய்வமே, என்னைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, உம் கரங்களில் என்னை அரவணைத்து ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு நன்றி. பரிசுத்தமாக வாழ எனக்கு உதவும். உம்மை எப்பொழுதும் துதிக்கவும், என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகளை அதிசயங்களை மற்றவர்களிடம் சொல்லவும் எனக்கு உம் பலத்தைத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
2 பிப்ரவரி 2021
No comments:
Post a Comment