வாசிக்க: யாத்திராகமம் 33, 34; சங்கீதம் 42; மத்தேயு 21:23-46
வேதவசனம்: சங்கீதம் 42: . என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
கவனித்தல்: சங்கீதம் 42 ஐ எழுதுகையில், சங்கீதக்காரன் தன் வாழ்வின் மிகக் கடினமான ஒரு காலகட்டத்தில் இருந்திருக்க வேண்டும். அவரிடம் “ஏன்?” என்ற பல கேள்விகள் இருந்தன, அவரைப் பார்த்து பரியாசம் செய்தவர்களின் கேள்விகளுக்கு அவரிடம் உடனடி பதில் எதுவும் இல்லை. பதில்களைத் தேடிப் போவதற்குப் பதிலாக, அவர் மிகவும் தீவிரமாகத் தேவனைத் தேடுகிறார். தன் இரட்சிப்பு (அ) விடுதலைக்காக ஜெபிக்கும்போது, தேவனுடைய வீட்டில் முன்பு இருந்த நல்ல காலங்களை அவர் நினைத்துப் பார்க்கிறார். இப்படிப் பட்ட ஒரு காலகட்டத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குத் தானே பேசி (a self-talk) நினைவுபடுத்திக் கொள்கிறார். அவருடைய எதிரிகள் இரவும் பகழும் அவரைக் கண்ணீர் வடிக்கச் செய்கையில், தேவன் பகற்காலத்திற்கான கிருபையையும், இரவில் தேற்றும் தம் பாடலையும் அனுப்புகிறார் எனச் சொல்லி தேவன் மேல் உள்ள தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். ஆகவே, “ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? என்று சொல்லி தனக்குத் தானே பேசிக் கொள்கிறார்.
பயன்பாடு: ஒருவர் கிறிஸ்தவனாக இருப்பதினால், அவர் பிரச்சனைகள், போராட்டங்கள் மற்றும் கவலைகள் ஆகிய எதுவும் அவர் வாழ்க்கையில் இருக்காது என்று பொருள் அல்ல. கவலைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தேவன் வாக்குப் பண்ணவில்லை. இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் தங்கள் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை உடையவர்களாக இருக்கையில், நான் ஒரு பிரச்சனையை சந்திக்கையில் என்ன செய்கிறேன் என்பதுதான் எனக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசத்தைக் காண்பிக்கிறது. ஒரு கிறிஸ்தவராக, நான் தேவனையும், தேவன் தரும் பதில்களையும் தாகத்துடன் தேடுகிறேன். தேவனே என் நம்பிக்கை. என் ஆத்துமாவே, நீ முழு மனதோடு தேவனைத் தேடுகையில், தேவன் தரும் அமைதியையும், இளைப்பாறுதலையும் பெற்று அனுபவிக்க முடியும்!
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment