வாசிக்க: லேவியராகமம் 9, 10; சங்கீதம் 50; மத்தேயு 25:31-46
வேதவசனம்:சங்கீதம் 50: 23. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
கவனித்தல்: தேவனுடைய ஜனங்கள் தேவனைத் துதித்து, தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒப்புக் கொண்டு அவரைப் புகழ வேண்டும் என தேவன் விரும்புகிறார். ஸ்தோத்திர பலியானது தேவனுக்கு நம் நன்றியை தெரிவிக்கும் ஒரு செயலாகும். நாம் பெற்றுக் கொண்ட கிருபைக்காகவும், நாம் பெற்ற விடுதலை, குணமாகுதல், மற்றும் மரணத்திற்கு தப்புவிக்கப்படுதல் என நாம் பெற்றுக் கொண்ட தேவ கிருபைகளுக்காக நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு செயலாக ஸ்தோத்திர பலி இருக்கிறது. சங்கீதம் 50ல் நாம் வாசிப்பது போல, ஸ்தோத்திர பலியானது தேவனை மகிமைப்படுத்துகிறதாகவும், தேவன் தம் இரட்சிப்பை நமக்குக் காண்பிப்பதற்கு வழியை செவ்வைப்பண்ணுகிறது. நாம் தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தும்போது, பெற்ற ஆசீர்வாதங்களுக்காகவும், பெறப்போகிற ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி உணர்வுடன் அதைச் செலுத்த வேண்டும். நாம் தேவனைத் துதித்தல் அல்லது ஸ்தோத்திர பலிகளை ஏறெடுத்தல் என்பது தேவனுடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனி என்றும், நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அதை எப்போதும் தேவனுக்கு செலுத்த வேண்டும் என எபிரேய நிருப ஆக்கியோன் சொல்கிறார் (எபி.13:15).
பயன்பாடு: தேவன் என் எல்லா ஜெபத்திற்கும் பதிலளித்து, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் என்னை விடுவித்து, தம் வழியை எனக்குக் காண்பிக்கிறார். ஆயினும், நான் பெற்ற கிருபைகளையும் ஆசீர்வாதங்களையும் எண்ணிப்பார்க்கும்போது, நான் பெற்றுக் கொண்ட எல்லா காரியத்திற்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்ல வில்லையே என வருந்துகிறேன். என் ஸ்தோத்திர பலியானது தேவனை மகிமைப்படுத்துகிறது. அவர் சகல துதிக்கும் ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரர். என் இரட்சிப்பு மற்றும் விடுதலைக்காக செய்ய வேண்டியவைகளை தேவன் ஏற்கனவே செய்து விட்டார். என்னை வழிநடத்த அவர் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறார். அவர் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என நான் நன்கறிந்திருக்கிறேன். ஆனால், ஒரு நாளில் எத்தனை முறை நான் தேவனைச் சார்ந்திருக்கிறேன் என்பதை என் வாயினால் சொல்கிறேன். என் உதடுகளின் மூலமாக, நான் தொடர்ந்து எப்பொழுதும் ஸ்தோத்திரங்களையும் துதிகளையும் சொல்லி வரும்போது, அது வாழ்க்கையின் பல ஆபத்துகளில் இருந்து என்னைக் காத்துக் கொள்கிறது. ஆயினும், அதை நான் சடங்காக, கடமைக்காகச் செய்யாமல், உண்மையான இருதயத்துடன் நன்றி உணர்வுடன் செய்ய வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே என் வாழ்க்கையில் நீர் செய்து வருகிற எல்லா காரியங்களுக்காகவும் நன்றி. இன்று நான் உமக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன். உமக்கு நன்றி உள்ளவராக நான் இருக்கவும், எப்பொழுதும் உம்முடன் நடக்க என் வழிகளை ஆயத்தம் பண்ணவும் எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment