Thursday, February 4, 2021

உயர்வு நவிற்சி!

 வாசிக்க: யாத்திராகமம் 19, 20; சங்கீதம் 35; மத்தேயு 18:1-20

வேதவசனம்: மத்தேயு 18:8. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 9. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

கவனித்தல்: அனேக கிறிஸ்தவர்கள் இந்த வேதப்பகுதியை தவறாகப் புரிந்துகொண்டு, இயேசு நமக்குச் சொல்ல விரும்புகிற செய்தியைக் காணத் தவறிவிடுகிறார்கள். பாவம் இல்லாத ஒரு வாழ்க்கையை எப்படி ஒருவர் வாழமுடியும் என சிலர் நினைக்கின்றனர்.  சரீரத்தில் தேவன் கொடுத்திருக்கிற உறுப்புகளை அறுத்து எறிந்து போடுவதற்கு அல்ல, மாறாக அவைகளை பாவம் செய்யாதபடி கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இங்கு அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது நம்மை நாமே சிதைத்துக் கொள்வதற்கான ஒரு அழைப்பு அல்ல, மாறாக பாவத்தின் தீவிரத்தன்மையையும் அதன் விளைவுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதற்காக கொடுக்கப்பட்ட ஒரு அழைப்பு ஆகும். ஒரு சரீர உறுப்பை நீக்குவதினால் எவரும் பாவ சிந்தனை அல்லது பாவம் செய்வதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. இந்த வேதபகுதியை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக் கொள்வோமானால், நாம் ஒருவரும் உயிர் தப்ப முடியாது. பாவத்திற்கு எள்ளளவும் இடம் கொடுக்காத ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ இயேசு அழைக்கிறார். இயேசுவின் சீடராக இருக்கும் ஒருவர் எல்லாவற்றிலும் இயேசுவைப் பின்பற்றும்போது அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

பயன்பாடு:  குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படும் மருத்துவ பரிசோதனை என் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுவது போல, என் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரோக்கியமானதாக வைத்திருக்கவும், ஒரு துடிப்பான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் நான் அனுதினமும் ஒரு சுய-பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என்னை பாவத்தில் விழப்பண்ணுகிறது என்ன என்பதை கண்டறிந்து, அதை என் வாழ்வில் இருந்து அகற்ற நான் தயாராக இருக்க வேண்டும். பாவம் செய்யத் தூண்டுகிற எதற்கும் நான் சமரசம் செய்து கொள்ளாமல், சாக்குபோக்குகளைச் சொல்லாமல் இருக்க வேண்டும். பாவத்தின் தீவிரத்தன்மை மற்றும் ஆபத்துகளை மனதில் கொண்டு, என் கைகள், கால்கள், மற்றும் கண்களை இயேசு தொடவும், அவைகளை தேவன் உண்டாக்கின நோக்கத்திற்காக பயன்படுத்தவும் நான் இயேசுவுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, பாவத்தைக் குறித்த எச்சரிக்கைக்காகவும், பாவத்தின் விளைவுகளை நினைவுபடுத்துவதற்காகவும் உமக்கு நன்றி. நான் தேவனை மகிமைப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை வாழவும், என் சரீர உறுப்புகளை முறையாக பயன்படுத்தவும் நீர் மட்டுமே எனக்கு உதவ முடியும். நீர் பரிசுத்த தேவன்! என்னைத் தொட்டு, என் இருதய சிந்தனைகளையும் விருப்பங்களையும் சுத்திகரியும். உமக்குப் பிரியமான பரிசுத்தமான வாழ்க்கையை இன்று நான் வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573


No comments: