வாசிக்க: லேவியராகமம் 11, 12; சங்கீதம் 51; மத்தேயு 26:1-35
வேதவசனம்: லேவியராகமம் 11: 44. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால்.... பரிசுத்தராயிருப்பீர்களாக. 45. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
கவனித்தல்: லேவியராகமம் புத்தகமானது தேவனுக்கு ஆராதனை செய்தல், தங்களை தீட்டுப்படுத்தாமல் காத்துக் கொள்ளுதல், பலிகளைச் செலுத்துதல் மற்றும் தேவனுடைய பரிசுத்த ஜனங்களாக வாழ இஸ்ரவேலர்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களும் ஒழுங்குமுறைகளும் நிறைந்த ஒரு கையேடு ஆகும். தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்து, தாம் பரிசுத்தராக இருக்கிற படியால், அவர்களும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என எதிர்பார்த்தார். பரிசுத்தத்திற்காக இந்த அழைப்பு பல விதங்களில் தனித்துவமான ஒன்று ஆகும். தேவன் நாம் அவரைப் போல இருக்க வேண்டும் என விரும்புகிறார். “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” தேவன் நம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்து எடுத்துவிட்டார் என்றாலும் கூட, நம்மைச் சுத்திகரிக்க நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. பழைய ஏற்பாட்டுக் காலங்களில், அவர்களைத் தீட்டுப்படாமல் காத்துக் கொள்ள சட்டங்கள் இருந்தது. ஆனால், அவை செயல்முறைப்படுத்தப்பட வேண்டும், வாழ்க்கையில் பயன்படுத்தப்படவேண்டும். தாவீது தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்த பின், மன்னிப்பு வேண்டி ஜெபித்தபோது, தேவன் தன்னைக் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என கெஞ்சுகிறார் (சங்.51:7). தேவனே ஒரு மனிதனை கழுவி சுத்திகரிக்க முடியும் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சரீரத்தை பரிபூரணமான பலியாக ஒப்புக் கொடுத்து, பாவ மன்னிப்புக்காக தம் இரத்தத்தைச் சிந்தினார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், இயேசுவை ஏற்றுக் கொண்டு, நாம் பரிசுத்தமாக வாழ தேவன் நமக்காக உண்டுபண்ணி வைத்திருக்கிறதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டும்.
பயன்பாடு: பரிசுத்த தேவனுக்காக ஒரு பரிசுத்த வாழ்வை வாழ்வது என்பது ஒரு பாக்கியமான/ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும். இது வாழ்க்கையில் எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக் கூடாது என்பதைப் பற்றியது அல்ல. மாறாக, என் வாழ்க்கையின் எல்லாப் பகுதியிலும் தேவனைப் பின்பற்றி வாழ்வது ஆகும். என் பலவீனங்களை அறிந்த தேவன், தம் மகனை எனக்காக இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசுவின் மூலமாக, நான் தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்வை வாழ முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களில் இருந்தும் என்னைச் சுத்திகரிக்கிறது. நான் பரிசுத்த வாழ்வை வாழத் தடையாக இருக்கிற என் பலவீனங்களையும், இயலாமைகளையும் அறிக்கை செய்து, என்னை மன்னித்து, சுத்திகரிக்க தேவனைத் தேடுகிறேன். எனக்காக அல்ல, என்னுடைய சொந்த விருப்பங்களின் படி அல்ல, உமக்காக நான் பரிசுத்தமாக வாழவேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நான் பரிசுத்தமாக வாழ வேண்டும் என நீர் விரும்புகிறதற்காக உமக்கு நன்றி. என்னைச் சுத்திகரிக்க, இயேசுவின் மூலமாக நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற அன்பின் ஏற்பாடுக்காக உமக்கு நன்றி. நான் அதை என் வாழ்க்கையில் எனதாக்கிக் கொள்ளவும், அனுதினமும் பரிசுத்தமாக வாழவும் எனக்கு உதவும். தேவனே, நானும் உம்மைப் போல பரிசுத்தமாக மாற விரும்புகிறேன் ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment