வாசிக்க: எண்ணாகமம் 9, 10; சங்கீதம் 63; மாற்கு 4:1-20
வேதவசனம்: எண்ணாகமம் 9: 16. இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை (ஆசரிப்புக் கூடாரத்தை) மூடிக்கொண்டிருந்தது.
17. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்....
22. மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.
23. கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
கவனித்தல்: ஆசரிப்புக் கூடாரத்தை மேகம் மூடியபோது, வனாந்திரத்தில் நடந்து செல்ல வழிகாட்டும் தன் பிரசன்னத்தை உணர்த்தும் காணக்கூடிய ஒரு அடையாளத்தை இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்தார். ஒரு நாளின் எந்த நேரத்திலும், அது காலை நேரமாக இருந்தாலும் சரி அல்லது இரவாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்த மேகத்தைக் காணவும், தங்கள் பயணத்திற்கான வெளிச்சத்தைக் கண்டுகொள்ளவும் முடிந்தது. ஆயினும், அவர்கள் எப்பொழுதும் விழிப்புடனும், தேவனுடைய வழிநடத்துதலைப் பின்பற்ற எப்போதும் ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் போய்ச் சேருமளவும், ஒரே ஒரு முறை தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் - ஒரு நாளின் சில மணிநேரங்களாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம், அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களானாலும் சரி - அவர்கள் பயணத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டியதாக இருந்தது (வ.20,21). நீங்கள் ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் இருக்கிறீர்கள் அல்லது அப்பொழுது தான் அந்த இடத்திற்கு வந்து இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். திடீரென ஒருவர் வந்து இந்த இடத்தை விட்டு கிளம்பிச் செல்லுங்கள் என்று சொல்கிறார் எனில், உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்! இஸ்ரவேலர்கள் தங்கள் வனாந்திரப் பயணத்தில், ஒரு முறை தவிர(எண்.14) மற்ற எல்லா நேரங்களிலும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள் என பரிசுத்த வேதம் சொல்கிறது . அவர்கள் எதைப்பார்க்கிலும் அதிகமாக தேவனுடைய வேளையை நம்பினார்கள்.
பயன்பாடு: என்னால் பார்க்கமுடிந்தாலும் அல்லது பார்க்க முடியாவிட்டாலும், தேவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறார் என்பது நிச்சயம். தேவன் தம் தொடர்ச்சியான பிரசன்னம் மற்றும் வழிநடத்துதல் பற்றி நமக்கு வாக்களித்திருக்கிறார். பரிசுத்த வேதாகமம் இதுகுறித்து அனேகம் சொல்கிறது. ஒரு இடத்தில் நீண்டகாலம் வசித்த பின்/ வேலை செய்த பின், அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்வது என்பது கடினமானதாக இருக்கலாம். ஆயினும், நான் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என தேவன் சொல்லும்போது, நான் என் இதயத்தின் சுய விருப்பங்களை, மற்றவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவதைக் காட்டிலும் தேவனுடைய நடத்துதலைப் பின்பற்ற நான் ஆயத்தமுள்ளவனாக இருக்க வேண்டும். நான் காத்திருக்க வேண்டும் என்று தேவன் சொன்னால், அவருடைய வழிநடத்துதல் வரும் வரைக்கும் நான் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். இல்லை என்றோ அல்லது காத்திரு என்றோ தேவன் சொல்லும்போதும் கூட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில், அவருடைய திட்டங்கள் என் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தவை என நான் அறிந்திருக்கிறேன். இந்த உலகத்தில்தான் எதுவும் நிரந்தரம் அல்லவே! ஆனால், தேவன் என்னுடன் இருக்கிறார் என்பது உண்மை, அவர் நித்தியமானவர். தேவன் எனக்காக /என் எதிர்காலத்திற்காக திட்டங்களை வைத்திருக்கிறார். நான் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என அவர் அழைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வார்த்தையின்படி நடக்க/பின் தொடர என்னைப் பலப்படுத்துகிறார். இந்த வாழ்வில், நான் தேவனுக்காக/தேவனுடன் வாழவேண்டும். நான் அனுதினமும் தொடர்ச்சியாக அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment