வாசிக்க: உபாகமம் 11, 12; சங்கீதம் 82, மாற்கு 13:24-37
வேதவசனம்: மாற்கு 13:35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
கவனித்தல்: இந்த உலகத்தின் கடைசி காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் குறித்து இயேசு எச்சரித்த போது, தனது இரண்டாவது வருகைக்கு ஆயத்தமாக இருக்கும்படி அவர் தன் சீடர்களிடம் சொன்னார். அவர் திரும்பவும் வரும் நேரம் குறித்து தன் சீடர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஆகவே, இயேசு எப்போது திரும்ப வந்தாலும், அவருடன் சேருவதற்கு ஆயத்தமுள்ளவர்களாக அவருடைய சீடர்கள் இருக்க வேண்டும். ” நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன்” என்று இயேசு சொன்னபடியால், அவருடைய வார்த்தைகள் இன்றும் கூட நமக்கு பொருந்தக் கூடியதாக இருக்கின்றது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இயேசு திடீரென திரும்பவும் வரும்போது, நாம் அவருக்காக விழித்திருக்கிறவர்களாக காணப்படவேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். இங்கு, ”தூங்குகிறவர்கள்” என்கிற வார்த்தை தேவனுடைய ஜனங்கள் இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் மற்ற காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்துகிறவர்களாகவும், இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்பட விருப்பமோ, நேரமோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நம் சபைகளில் நாம் இயேசுவின் வருகையை மற்றும் அதற்கு நாம் ஆயத்தப்படுவதைப் பற்றி கேட்பதை விட மற்ற காரியங்களைப் பற்றி அதிகம் கேட்கிறோம் என்பது வருந்தத்தக்கது. நாம் இயேசுவின் இரண்டாவது வருகைக்கு ஆயத்தமாக இருக்க விரும்பும்போது, நாம் வாழ்கிற மற்றும் சிந்திக்கிற முறையானது முற்றிலும் வித்தியாசமானதாகவும், தேவனை மையப்படுத்துகிறதாகவும் இருக்கும். அப்படித்தானே! ஒவ்வொரு கிறிஸ்தவரும் எச்சரிக்கையுள்ளவர்களாகவும், இயேசுவின் வருகைக்காக (தூங்காமல்) விழித்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
பயன்பாடு: இயேசு திரும்ப வரும் நேரம் குறித்து எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர் திரும்பவும் வருவேன் என்று வாக்குப்பண்ணி இருக்கிறதை நான் அறிந்திருக்கிறேன். ”வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்று அவர் சொல்லி இருக்கிறார் (வ,31). நினையாத ஒரு நேரத்தில் இயேசு நிச்சயமாக திரும்பவும் வருவார். நான் அவருடைய வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பேனாகில், அவர் வரும் நேரம் குறித்து நான் கவலைப்படத் தேவை இல்லை. நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், கவனமாக இருக்க வேண்டும்! எச்சரிக்கையாயிருக்க வேண்டும், விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.
ஜெபம்: இயேசுவே, உலகத்தின் முடிவு மற்றும் உம் இரண்டாம் வருகை பற்றிய உம் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. எந்த நேரத்திலும் நீங்கள் திரும்பி வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் விழித்திருக்கவும், அதற்கேற்றபடி வாழவும் எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment