வாசிக்க: எண்ணாகமம் 33, 34; சங்கீதம் 75, மாற்கு 10:1-31
வேதவசனம்: எண்ணாகமம் 33:55. நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
56. அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.
கவனித்தல்: எண்ணாகம் 33:50-56 ல், வாக்களிக்கப்பட்ட தேசமாகிய கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்கு இஸ்ரவேலரை தேவன் ஆயத்தம் பண்ணுவதை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கோத்திரமும் குடியேறவேண்டிய இடம் மற்றும் அவர்களின் எல்லை பற்றி தேவன் இஸ்ரவேலர்களிடம் சொல்கையில், அந்த தேசத்துக் குடிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். அவர்களின் விக்கிரக வழிபாடு, நடைமுறைகள் போன்றவை தேவனுடைய ஆளுகையின் கீழ் வாக்குபண்ணப்பட்ட தேசத்தில் அமைதியாக வாழ்வதற்கு தடையாகவும், கண்ணியாகவும் இருக்கும் என முன்னறிவித்தார். இஸ்ரவேலர்களின் விடுதலைப் பயணத்தில், இஸ்ரவேலர்களுடன் பயணம் செய்த இஸ்ரவேலரல்லாதவர்கள் (மன்னா அல்லாத வேறு) உணவுக்காக இச்சித்து, அதன் விளைவாக ஒரு வாதை வந்து அனேக இஸ்ரவேலர்கள் மரித்த சம்பவத்தை நாம் முன்பு வாசித்திருக்கிறோம் (எண்.11:4, 33). வாக்குத்தத்த தேசத்தில் நுழைந்த உடனே, கானானியரின் விக்கிரக வழிபாடு தொடர்புடைய அனைத்தையும் அழித்துப் போடவும், கானானியரை துரத்திவிடவும் வேண்டும் என தேவன் இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் அகற்றப்படாவிட்டால், தேவனை விட்டு இஸ்ரவேலர்கள் வழிவிலகிப் போக அவர்கள் காரணமாகி விடுவார்கள்.
பயன்பாடு: நம் ஆன்மீக வாழ்க்கையிலும் கூட, இது எந்தளவுக்கு உண்மையானதாக இருக்கிறது! நான் என் பழைய பாவ சுபாவம், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் என்னில் தங்க இடம் கொடுப்பேனாகில், அவை மிக எளிதாக நான் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகும்படி என்னை தவறாக வழிநடத்திவிடக் கூடும். நான் விழுந்து போவதற்கான/ என்னை விழப்பண்ணுவதர்கான ஒரு வாய்ப்புக்காக அவை காத்திருக்கும். கிறிஸ்துவில் ஒரு விடுதலையான வாழ்வை வாழ்வதற்கு, இவை எனக்குள் வாழ நான் அனுமதிக்கக் கூடாது. மாறாக, நான் என்னை தேவனுக்கென்று அர்ப்பணித்து, நீதியின் ஆயுதமாக என் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். என் பழைய பாவ மனுஷன் இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டிருக்கிறான் என்று நான் அறிந்திருக்கிறேன் (ரோமர் 6). நான் இயேசுவுக்காக வாழும்போது, என் பழைய பாவ மனிதனுக்கு என்னிடத்தில் எந்த இடமும் கிடையாது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என்னை வைத்திருக்கிற இடத்தில் நான் சமாதானமாகவும் ஆசீர்வாதமாகவும் வாழ நீர் எனக்கு தந்திருக்கிற போதனைக்காக நன்றி. அன்பின் ஆண்டவரே, எதுவும் என்னை உம்மை விட்டு பிரிக்கமுடியாதபடி, உம் கிருபையால் என்னை மூடி மறைத்துக் கொள்ளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment