வாசிக்க: எண்ணாகமம் 23, 24; சங்கீதம் 70; மாற்கு 7:24-37
வேதவசனம்: எண்ணாகமம் 23:23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
கவனித்தல்: எண்ணாகமம் 23:23, அதன் இருப்பிடத்தை மனப்பாடம் செய்ய எளிதானதும், மற்றும் நமது கிறிஸ்தவ ஜெபங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வசனங்களில் ஒன்றாகும். இந்த வசனத்தைப் படிக்கும்போது, எந்தவொரு தீமையிலிருந்தும் நமக்கு இருக்கும் பாதுகாப்பைப் பற்றி உண்மையாகவே நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். "அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுடன் இருக்கிறார்" என்பதுதான் இந்தப் பாதுகாப்பிற்கான காரணம் என 21-ம் வசனத்தில் வாசிக்கிறோம். இந்த தெய்வீக பாதுகாப்பின் காரணமாக, இஸ்ரவேலர்களை சபிக்கும்படி பாலாக்கால் பணியமர்த்தப்பட்ட பிலேயாம் இஸ்ரவேலருக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை. மாறாக, அவன் தேவனுடைய ஜனங்களை ஆசீர்வதித்தான். ஒரு கழுதை அல்லது ஒரு மந்திரவாதி மூலமாகவும் கூட தேவன் பேச முடியும் என்பதை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது.. இஸ்ரவேலரைப் பற்றி விவரிக்க பிலேயாம் பயன்படுத்தும் சொற்களைக் கவனியுங்கள். தம் மக்களின் பலவீனங்களையும், குறைகளையும் தேவன் அறிந்திருந்தாலும், மற்றவர்கள் முன் தேவன் தம் ஜனங்களை கைவிட்டுவிடுவதில்லை. முடிவில், முன்பு ஒப்புக்கொண்டபடி, பிலேயாமுக்கு எதையும் காணிக்கையாகக் கொடுக்க பாலாக் மறுத்துவிட்டார். ஆனாலும், தேவனுடைய ஜனங்கள் தேவனை விட்டு விலகி, அந்நிய தெய்வங்களை வணங்கியபோது, நாம் எண்ணாகமம் 25-ல் காண்கிறது போல, அவர்களின் பாதுகாப்பு அவர்களை விட்டு விலகிப்போய்விட்டது, அதன் காரணமாக, ஒரே வாதையினால் 24000 இஸ்ரவேலர் மரணம் அடைந்தனர். நாம் தேவனுடைய பாதுகாப்பின் கீழ் இருக்கும்போது, தீய நோக்கங்களுடன் நம்மை எவரும் தொடக் கூட முடியாது என்பதை இந்த வசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது.
பயன்பாடு: எனக்கு எதிராக மந்திரமும், குறிசொல்லுதலும் இல்லை என்று சொல்வது மிக எளிது. ஆயினும், என் வாழ்க்கைக்கு இந்த வசனம் பொருத்தமானதாகவும் உண்மையாகவும் இருக்கும்படிச் செய்ய, நான் தேவனுடன் வாழ வேண்டும். நான் தேவனுடன் வாழும்போது, தேவனுடைய வார்த்தையின் படி வாழ வேண்டும். இதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது. ஒரு கிறிஸ்தவப் பெயர் எனக்கு இருக்கிறது என்பதினால் எனக்கு தெய்வீக பாதுகாப்பு இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. என் கிறிஸ்தவப் பெயர் நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருக்கிறேன் என்பதை மட்டுமே குறிக்கிறது. என் பெயரைக் காட்டிலும், நான் எப்படி தேவனுடன் வாழ்கிறேன் என்பதே எனக்குள்ள தேவப் பாதுகாப்பைப் பற்றி தைரியமாகப் பேச உறுதியளிக்கும். நான் தேவனுடன் அவருடைய பாதுகாப்பின் கீழ் வாழும்போது, மற்றவர்கள் என்னைக் குறித்து, “தேவன் என்னென்ன செய்தார்” என்று என் வாழ்க்கையைக் குறித்து சாட்சி சொல்வார்கள். அப்பொழுது என் வாழ்க்கை தேவனை மகிமைப்படுத்தும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் வேதத்திற்கு எதிரானவர்கள் எனக்கு எதிராக நேரடியாக வரும்போது, உம் பாதுகாப்பின் காரணமாக அவர்களால் எதுவும் செய்ய முடியாது. உம் அன்பு மற்றும் பாதுகாப்புக்காக நன்றி. என் கால்களைத் தடுமாறச் செய்வதற்கும், உங்களிடமிருந்து விலகிச் செல்வதற்கும் தீய திட்டங்களுடன் எதிரியானவன் தந்திரமாக வரும்போது, நிதானித்தறியவும், உறுதியாக அவனை எதிர்த்து நிற்கவும் உம் ஞானத்தை எனக்குத் தாரும்.ஆண்டவரே, எனக்கு உம் வல்லமை தேவை. தீமைக்கு (அ) பிசாசுக்கு எதிர்த்து நிற்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment