Wednesday, March 10, 2021

சிந்தனைக்கு ஒரு உணவு

வாசிக்க: எண்ணாகமம் 21, 22; சங்கீதம் 69; மாற்கு 7:1-23

வேதவசனம்: எண்ணாகமம் 21:4. அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.
5. ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

கவனித்தல்: இஸ்ரவேலர்கள் தங்கள் விடுதலைப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி தேவனுக்கும் தேவதாசனாகிய மோசேக்கும் விரோதமாக முறுத்தனர். இஸ்ரவேலர்களின் அப்படிப்பட்ட கலகங்களில் பலவற்ற நாம் எண்ணாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். இங்கு அவர்கள் ஒரு இடத்தைச் சுற்றி நடந்து செல்லத் தயாராக இல்லை. மாறாக, அவர்கள் தங்கள் பயண தூரத்தை குறைக்க விரும்பினர். அவர்களின் பொறுமையின்மையானது தேவனுக்கு விரோதமாக அவர்களைப் பேச வைத்தது. அவர்கள் வாக்குதத்த பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு காலம் மற்றும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் மிக சமீபமாக இருந்தனர். ஆயினும், அவர்கள் உணவு குறித்தும், தண்ணீர் குறித்தும் முறுமுறுத்தனர். அவர்களுடைய பயணம் முழுவதிலும் தண்ணீரும் உணவும் அளித்த தேவனை அவர்கள் மறந்தனர். “தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பான” ருசியை உடையதாயிருந்த மன்னாவைப் பற்றி, இஸ்ரவேலர்கள் “இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.” தூதர்களின் உணவை அவர்களுக்கு அளித்த தேவனுக்கு நன்றியற்றவர்களாக இருந்தார்கள். ஒரே உணவை திரும்பத் திரும்ப உண்பது பற்றி அவர்கள் சலிப்படைந்திருக்கக் கூடும். ஆயினும், தேவன் ஒரு தண்டனையை அனுப்பிய போது, இம்முறை இஸ்ரவேலர்கள் உடனடியாக மனம் திரும்பினர். ஆகவே, ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டு பண்ணி அதைக் கம்பத்தின் மேல் வைக்கும்படி தேவன் சொன்னார். சர்ப்பத்தினால் கடிபட்டவர்கள் எவர்களோ, அவர்கள் மோசே உண்டுபண்ணின வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து சுகமடைந்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.


பயன்பாடு: “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்” என்று இயேசு ஆன்மீக ரீதியாகச் சொன்னார் (யோவான் 6:51). சில கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரே காரியத்தை திரும்பத் திரும்ப செய்வதில் சலித்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, ஏன் இயேசுவைப் பற்றிய செய்தி திரும்பத் திரும்ப சபைகளிலும் கூடுகைகளிலும் சொல்லப்படுகிறது என நினைக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் தங்கள் விடுதலைப் பயணத்தில் உள்ள கஷ்டங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தபடியால் அவர்கள் தேவனுக்கு விரோதமாக முணுமுணுக்கவும். எகிப்துக்கு திரும்புவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அச்சமயங்களில், அவர்களோடு இருந்த மகிமையான தேவ பிரசன்னம் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றை மறந்து போயினர். தேவன் என்னோடு இருப்பதுதான் இந்த உலகத்தில் உள்ள எதையும் விட சிறந்தந்து என்று நான் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் என் சுகம் மற்றும் இரட்சிப்புக்காக தேவன் மோசேயை வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தச் சொன்னது போல இயேசுவை சிலுவையில் உயர்த்தினார். நான் சிலுவையிலறையப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது, இந்த உலகத்தில் வாழ்வதற்கான பலத்தையும் சுகத்தையும் நான் பெற்றுக் கொள்கிறேன். என் சரீரத்திற்காக நான் முறையாக சாப்பிடுவது போல, என் ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்திற்கு தேவனுடைய ஆன்மீக உணவும் அனுதினமும் தேவை. ஆன்மீக உணவை நான் வெறுக்கக் கூடாது. நான் தேவனுக்கும், தேவனுடைய வார்த்தையும் என் நேரத்தைத் தவறாது கொடுக்க வேண்டும்.


ஜெபம்: பிதாவே, என் வாழ்வில் நான் அனுதின ஆன்மீக உணவு எடுப்பது பற்றிய இந்த சிந்தனைக்காக உமக்கு நன்றி. நான் நீர் தருகிற ஆன்மீக உணவை அனுதினமும் தேடவும், வாஞ்சிக்கவும் எனக்கு உதவும். நான் உம் மீதும், உம் வார்த்தை மீதும் என் கவனத்தை வைக்க உதவும். ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: