வாசிக்க: உபாகமம் 17, 18; சங்கீதம் 85, மாற்கு 15:1-32
வேதவசனம்: உபாகமம் 18: 21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
கவனித்தல்: பொதுவாக, ஜனங்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். தங்களால் எதிர்காலத்தை குறித்து கணிக்க அல்லது முன்னறிவிக்க முடியும் என்று சொல்லிக்கொள்கிறவர்களைத் தேடி, அவர்களுடைய வெற்றி விகிதம் மிகவும் குறைவாக இருந்தாலும் கூட அனேகர் செல்கின்றனர். இங்கு, தேவன் தன் வார்த்தைகளைப் பேசும் எதிர்கால தீர்க்கதரிசி (இயேசு) பற்றி மோசேயிடம் அறிவித்து, ”அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” என்று சொன்னார் (உபா.18:15,18). இஸ்ரவேலர்கள் குறிசொல்கிறவர்களிடமோ, மந்திரவாதி அல்லது சூனியக்காரரிடமோ செல்லக் கூடாது என தேவன் எச்சரித்திருந்தார். அதே சமயத்தில், ஒரு பொய் தீர்க்கதரிசி இருந்தால் அவர்களைக் அடையாளம் காண்பது எப்படி என்பதற்கும் அவர்களை ஆயத்தப்படுத்தினார். ஏனெனில், பொய் தீர்க்கதரிசிகள் தேவனை விட்டு ஜனங்களை விலக்கி விடக் கூடும், அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப பேசுவதில்லை (ஏசாயா 8:20). நாம் இங்கு உபா.18:22 ம் வசனத்தில் காண்பது போல, தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்பது ஒரு தீர்க்கதரிசி தேவனிடத்தில் இருந்து வந்தவரா அல்லது இல்லையா என்பதை பரிசோதித்தறியும் ஒரு முறை ஆகும். ஆயினும், உபாகமம் 13:1-5ல் ஒரு கணிப்பு அல்லது முன்னறிவிப்பு நிறைவேறினாலும் கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வாசிக்கிறோம். அவை தற்செயலானதாக அல்லது அறிவார்ந்த அவதானிப்புகளின் காரணமாகக் கூட நிறைவேறலாம். ஒருவர் வல்லமையான அற்புதங்கள் மற்றும் அடையாளங்களை நடப்பித்தாலும் கூட நாம் அவை தேவனிடம் இருந்து வந்ததா என்பதை சோதித்தறிய வேண்டும். எகிப்திய மந்திரவாதிகள் கூட அற்புதங்களைச் செய்தார்கள் என்பது உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் செவிகொடுக்க வேண்டும், (தவறான) தீர்க்கதரிசிகளுக்கு அல்ல.
பயன்பாடு: தேவன் என் எதிர்காலத்தை அறிந்திருக்கிறார். என்னை அவர் தம் வலதுகரத்தில் தாங்கிப் பிடித்திருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படத் தேவை இல்லை. பொய் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் குறித்து அச்சப்படவும் அவசியமில்லை. எதிர்காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதைப் பார்க்கிலும், தேவனுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவது மிக முக்கியமானது ஆகும். நான் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் என் முழு கவனத்தையும் கொடுப்பேன். தேவனுடைய வார்த்தை என் இருதயத்தில் இருக்கும்போது, நான் ஒரு உண்மையான தீர்க்கதரிசனத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப இருக்கும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, ஏதேனும் பொய் தீர்க்கதரிசிகள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள நீர் தரும் எச்சரிக்கைக்காக நன்றி. நீர் என்னை மிகவும் நேசிப்பதினால், நான் ஏமாற்றப்படாதிருக்கவும், தவறாக வழிநடத்தப்படாதிருக்கவும் நீர் இவைகளை எனக்குச் சொல்கிறீர். உம் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து, உமக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நான் உம் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment