Thursday, March 25, 2021

தேவனுடைய வீடு எவ்வளவு இன்பமானது!

வாசிக்க: உபாகமம் 15, 16; சங்கீதம் 84,  மாற்கு 14:32-72

வேதவசனம்: 1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2. என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 
3. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)

கவனித்தல்:  நம் இருதயத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும் இனிமையான சங்கீதங்களில் சங்கீதம் 84-ம் ஒன்றாகும். இந்த சங்கீதம் தேவனுடைய வீட்டிற்காக வாஞ்சித்து ஏங்குகிற சங்கீதக்காரனின் ஜெபத்தை வெளிப்படுத்துகிறது. முதல் வசனத்தில் வருகிற வினைச்சொல்லை கவனித்துப் பாருங்கள். தேவனுடைய வீடு இன்பமானதாக இருக்கிறது. ஏனெனில், அது தேவன் வாசம் செய்யும் இடமாக இருக்கிறது (இருந்தது என்றோ இருக்கும் என்றோ இல்லை). ஆகவே, தேவ பயமுள்ள ஒரு நபர் அந்த இடத்தில் இருக்க விரும்புவது இயல்பு. அவர் வாஞ்சையுடன் தேவனுடைய வீட்டை வந்து சேரும்போது, அவர் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். தேவனுடைய வீட்டில் வாசம் செய்யும் ஆண்டவர் ஜீவனுள்ள தேவன் என்று அவர் சொல்கிறார். அது மட்டுமல்ல, அடைக்கலான் குருவியும், தகைவிலான் குருவியும் கூட தங்குகிறதற்கு ஒரு இடத்தை தேவனுடைய வீட்டில் கண்டு கொள்கிறதை சங்கீதக்காரன் காண்கிறார். தேவன் தன்னிடத்தில் வருகிற அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவர் ஒருபோதும் தன்னிடத்தில் வருகிறவர்களை நிராகரிப்பதில்லை, வராதே என்று சொல்வதுமில்லை (யோவான் 6:37). மிகவிம் பலவீனமான மற்றும் தகுதியற்ற ஒருவரும் கூட தேவனுக்கருகில் இளைப்பாறுகிறதற்கான ஒரு இடத்தைக் கண்டுகொள்ள முடியும். இந்த இடத்தில் வரவேற்று, ஏற்றுக்கொண்டு, இடம் கொடுக்கிறவர் ஒரு சாதாரண நபர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சங்கீதக்காரன் சொல்வது போல, அவர் ”இராஜா”, ”தேவன்”, “சேனைகளின் கர்த்தர்.” அதன் பின், தேவனுடைய வீட்டில் வாழ்கிறவர்களின் ஆசீர்வாதமான நிலைமையையும், அவர்கள் என்ன செய்கிறார்கள்-தேவனை துதித்துக் கொண்டிருக்கிறார்கள்- என்பதையும் சங்கீதக்காரன் காண்கிறார். ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னமானது அவருடைய ஜனங்கள் அவரை துதித்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.
 
பயன்பாடு: பழைய ஏற்பாட்டுக் காலங்களில், இஸ்ரவேலில் உள்ள ஆண்கள் அனைவரும் கர்த்தருக்கு முன்பாக வரவேண்டியதாக இருந்தது (உபா.16:16). ஆயினும், அனுதினமும் கர்த்தர் முன்பாக வருவதற்கு எந்த தடையும் இல்லை. அந்நாட்களில், தேவனுடைய வாசஸ்தலம் என்பது ஒரு குறிப்பிட்ட இடமாக, எருசலேமாக இருந்தது. இக்காலத்தில், நான் உயிரோடிருக்கும் நாட்கள் எல்லாம், நான் எங்கிருந்தாலும், அனுதினமும் நான் ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக வரமுடியும். தேவன் என் பலவீனங்களையும் குறைகளையும் பார்ப்பதில்லை. நான் அவருடன் வாழ்கையில், என்னை பெலப்படுத்தி, தீங்குக்கு விலக்கிப் பாதுகாக்கிறார். தேவனை அறிந்திருக்கிற, அவரது அன்பை ருசித்த ஒருவர் தேவன் வாசம் செய்கிற இடத்தில் வாழ்வதன் மதிப்பை புரிந்துகொண்டு, அவர் தேவனை துதித்துக் கொண்டிருப்பார். 
 
ஜெபம்:  சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் உம்முடன் இருப்பதனால் வரும் ஆசீர்வாதத்தை நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. உம் வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானது! நீர் என் இராஜா, என் தேவன். உம்மிடத்தில் வரும் பாக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் அசட்டை செய்யாமலிருக்க எனக்கு உதவும். தேவனே, உங்கள் மீதான என் ஆர்வமும் அன்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கட்டும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: