வாசிக்க: உபாகமம் 5, 6; சங்கீதம் 79, மாற்கு 12:1-27
வேதவசனம்: உபாகமம் 6: 4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே(சு).
கவனித்தல்: உபாகமம் 6:4 முதலான வசனங்கள் யூதர்களின் காலை மாலை ஜெபங்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒருவராக இருக்கிற தேவன் மீதான தங்கள் நம்பிக்கையை அவர்கள் தெரிவிக்கும் யூத விசுவாச அறிக்கையின் ஒரு பகுதியாக இவ்வேதபகுதி இருக்கிறது. இது ஷேமா (The Shema) என்று அறியப்பட்டிருக்கிறது. உபாகமம் 6:4 தேவனுடைய ஒருமையை (அதாவது அவர் ஒருவரே) என்பதையும், தேவனுடைய தனித்தன்மையை (அதாவது, அவருக்குச் சமமானவர்/ஒப்பானவர் எவரும் இல்லை) என்பதையும் வலியுறுத்துகிறது. இஸ்ரவேலரைச் சுற்றிலும் வாழ்ந்த மக்கள் விக்கிரக வணக்கம் செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கையில், இஸ்ரவேலர்கள் தங்கள் விசுவாசத்தை தேவனுக்கு மாத்திரமே வெளிப்படுத்தவேண்டும். தேவன் ஒருவரே என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் echad (எகாத்) என்ற வார்த்தையைக் கவனிப்பது மிகவும் சுவராசியத்தைத் தருகிறது. எகாத் என்ற வார்த்தையின் பொருள் தேவன் ஒரே ஒருவர் மாத்திரமே (ஒன்றே ஒன்று மட்டுமே) என்பதாக அல்லாமல், பன்மையில் ஒருமையைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக அது இருக்கிறது. உபாகமம் 6:5 ஆம் வசனத்தில் இருந்து, வெளியரங்கமாகவும் அந்தரங்கமாகவும் ஒருவர் தன் விசுவாசத்தை செயல்களில் காட்டுவது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவையுள்ள நேரங்களில் நினைவுபடுத்திக் கொள்ளவும், தேவனைப் பற்றி தியானிக்கவும், நாம் தேவனுடைய கற்பனைகளை நம் இருதயத்தில் காத்துக் கொள்ள வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது, அவர்களும் தேவனை அறியச் செய்வது மிக முக்கியமானதாகும். நாம் என்ன செய்தாலும், எங்கிருந்தாலும், உட்கார்ந்து அல்லது நடந்து கொண்டிருந்தாலும் , படுத்திருந்தாலும் அல்லது எழுந்திருந்தாலும் நாம் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துப் பேசலாம்/ பேசவேண்டும். ஆயினும், அது ஒரு சடங்காக செய்யப்படாமல், தேவன் மீது உள்ள அன்புடன் செய்யப்படவேண்டும்.
பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது/வாசிக்கும்போது, என் தேவன் யார் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர். அவரைப் போல, அவருக்கு ஒப்பானவர் வேறு யாரும் இல்லை. நான் தேவனைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, அவர் மீதான என் அன்பு என்பது என் இதயம், ஆத்துமா மற்றும் என் கைகளின் இயல்பான வெளிப்பாடாக அது இருக்கிறது. நான் தேவனுடைய வார்த்தைகளை என் இதயத்தில் காத்துக் கொள்ளும்போது, என் வாழ்வில் வரக்கூடிய அனேக ஆபத்துகளில் இருந்து அது என்னைப் பாதுகாக்கிறது. நான் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் தேவனுடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்க்கவும், பேசவும் முடியும்.நான் அதை அனுதினமும் செய்வேன்.
ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் யார் என்பதை எனக்கு வெளிப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. நீரே என் ஆண்டவர், நீரே என் தேவன். உம்மைப் போல யாருண்டு! என் மீட்பரே, உம்மை முழு இருதயத்தோடு நேசிக்கவும், வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் என் அன்பை காண்பிக்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment