வாசிக்க: உபாகமம் 21, 22; சங்கீதம் 87, மாற்கு 16:1-8
வேதவசனம்: மாற்கு 16:1. ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
2. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3. கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4. அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
கவனித்தல்: இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற அந்தப் பெண்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் இயேசு மீது கொண்டிருந்த அன்பின் நிமித்தமாக, அதிகாலையிலேயே அவர்கள் கல்லறைக்கு சீக்கிரமாக வந்தார்கள். மாற்கு நற்செய்தி நூலில், எருசலேமுக்கு வருவதற்கு முன்பு இயேசு தன் பாடுகள் மற்றும் மரணம் குறித்து திரும்பத் திரும்ப சொன்னதை நாம் பார்க்கிறோம் (மாற்கு 8-10). ஆயினும், இயேசுவின் வார்த்தைகளை அவருடைய சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை (மாற்கு 9:32). மூன்றாம் நாளில், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவருடைய சீடர்களும் இந்தப் பெண்களும் ஆயத்தமாயிருக்கவில்லை. அவர்கள் கல்லறைக்குச் செல்லும் வழியில், “கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்” என்பதே அவர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அவர்கள் கல்லறையைச் சென்றடைந்த போது, அந்தக் கல் ஏற்கனவே புரட்டி தள்ளப்பட்டு விட்டது என்ற உண்மையைக் கண்டார்கள். அவர்கள் கண்டது, ஒரு காலியான கல்லறை. அதன் பின்னர், அவருடைய உயிர்த்தெழுதல் பற்றிய மாபெரும் செய்தியைக் கேட்டார்கள். இயேசுவின் கல்லறைக்கு முதலாவதாக வந்த இப்பெண்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய முதல் சாட்சிகள் ஆனார்கள். பிராங்க் மோரிசன் என்பவர் எழுதிய “கல்லை அகற்றியது யார்?” என்ற புத்தகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அப்புத்தகமானது 1930 ஆம் ஆண்டு லெந்து காலத்தில் முதன் முதலாக அச்சிடப்பட்டது. ஒரு பத்திரிகை நிருபரான அவர் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்க விரும்பினார். ஆயினும், இயேசுவின் கடைசி ஏழு நாட்கள் பற்றிய தன் ஆய்வின் முடிவில், மோரிசன் உயிர்த்தெழுந்த இரட்சகர் இயேசுவின் விசுவாசி ஆக மாறி விட்டார். இன்றும் கூட, இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி சந்தேகப்படும் பலருக்கு அவர்களுடைய சந்தேகங்களைப் போக்க அவருடைய புத்தகம் உதவுகிறதுடன், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ற வரலாற்று நம்பிக்கை மேல் விசுவாசம் வைக்க அவர்களை நடத்துகிறதாகவும் இருக்கிறது. “அவர் உயிர்த்தெழுந்தார்” என்பது உண்மை.
பயன்பாடு: என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே தன் உயிர்த்தெழுதல் மூலம் மரணத்தை ஜெயித்தவராக இருக்கிறார். அவர் இன்றும் ஜீவிக்கிறார்! அவருடைய உயிர்த்தெழுதலை நம்பாமல் இருக்க எனக்கு ஒரு காரணம் கூட இல்லை. இயேசுகிறிஸ்துவின் மீது என் விசுவாசம் கட்டப்பட்டிருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இயேசு இன்றும் அவநம்பிக்கை உடையவர்களின் இருதயங்களைத் தொட்டு தம்மில் விசுவாசமுடையவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவில் உள்ள என் விசுவாசம் வீண் அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலில் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதால், தேவன் பாவத்தின் மீது எனக்கு வெற்றியைத் தருகிறார் (1 கொரி.15: 17, 56,57). அல்லேலூயா!
ஜெபம்: பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக நீர் தருகிற நம்பிக்கை, பலம், மற்றும் மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் சொல்லிலும் செயலிலும் உம் உயிர்த்தெழுதலுக்கு பலமான சாட்சியாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment